திருபபுமுனை





‘‘அமெரிக்காவில் படித்த எம்.எஸ் படிப்பு கையில் இருக்கு. அண்ணனும் அப்பாவும் வீட்டைப் பாத்துக்கிறாங்க. 25 வயசு வரைக்கும் மத்தவங்க விருப்பப்பட்டதை செஞ்சுட்டேன். எனக்குப் பிடிச்சதை  செய்யறதுக்கு கடைசி வாய்ப்பு அது. ஃப்ளாட், கார், கைநிறைய மாத சம்பளம்னு பொருளாதாரக் கணக்கை உடைச்சிட்டு சினிமாவுக்கு வந்து தோத்துப்போனா என்ன ஆகும்னு யோசிச்சேன். சாப்பாட்டுக்கு  வழி இல்லாம திகைச்சு நிக்க மாட்டேன்னு நம்பிக்கை இருந்துச்சு. அதிகபட்சமா நடக்கக்கூடியது, ‘இவனுக்கு எதுக்கு இந்த வேலை’ன்னு மத்தவங்க கேவலமா பேசலாம். பேசினா பேசிட்டு போகட்டும்னு  அவமானத்தை எதிர்கொள்ளத் தயாரான பிறகுதான், நான் எனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்கினேன்...’’ 

- அழுத்தம் திருத்தமாக வெளிப்படுகின்றன கார்த்தியின் வார்த்தைகள். சுடும் மணலில் நடப்பதற்காக நீளமான கால்கள்; எப்போதாவது கிடைக்கிற தண்ணீரை, எதிர்வரும் நாட்களுக்காக சேமித்துக்  கொள்ள கழுத்துப் பகுதியில் தண்ணீர்ப் பை; முட்செடிகளை உண்பதற்காக கரடுமுரடான உதடுகள் என்று பாலைவனத்தில் வாழ்வதற்காகவே இயற்கை தந்திருக்கும் அத்தனை தனித்தன்மைகளையும்  உடைய ஒட்டகம், ‘சர்க்கஸ் கூடாரத்தின் வாழ்க்கையை வெறுத்து’ தப்பியது போல, தன்னுடைய ஆர்வத்திற்கும் தாகத்திற்கும் தீனி போடுகிற சினிமாவைத் தேர்ந்தெடுத்த கணம்தான் அவர் வாழ்வின் மிக  முக்கியமான திருப்புமுனை.

‘‘அமெரிக்காவுல இருந்து திரும்ப சென்னை வர்றேங்கிறதுல அதிகமா சந்தோஷப்பட்ட ஜீவன் அம்மாவாதான் இருக்கும். மத்த பசங்க மாதிரி பையன் அங்கேயே செட்டில் ஆயிட்டா என்ன பண்றதுன்னு  கவலையா இருந்தாங்க. ஊருக்குத் திரும்ப ஆறு மாசம் இருந்துச்சு. நான் படிச்ச பல்கலைக்கழகத்திலேயே சினிமா சம்பந்தமான பகுதி நேர படிப்பில் சேர முடிவு செஞ்சேன். எனக்கு மிகவும் பிடிச்ச  ஒண்ணுக்காக முறைப்படி நான் செய்த முதல் முயற்சி அதுதான்.


ஆனா எஞ்சினியரிங் பின்னணி இருக்கிற நான், கலை தொடர்பான படிப்பில் சேரமுடியாதுன்னு நிராகரிச்சுட்டாங்க. ‘என் அப்பா நடிகர். அண்ணன் நடிகர். சினிமா குடும்பம். நான் இந்தியாவில் சினிமா  வேலையில்தான் இருக்கப்போறேன்’னு விளக்கிச் சொன்ன என்னை பேராசிரியர்கள் ‘லூசு’ன்னுகூட நினைச்சிருக்கலாம். கஷ்டப்பட்டு எஞ்சினியரிங் படிச்சு, நல்ல கிரேடுல பாஸ் பண்ண ஒருத்தன், ‘நான்  சினிமாவில் வேலை செய்யப்போறேன்’னு சொன்னா விநோதமா பார்க்கத்தானே செய்வாங்க. எந்த வெட்கமும் இல்லாம திரும்பத் திரும்ப நான் கேட்கவே, ‘கிளாஸுக்கு வரலாம். ஆனா, எக்ஸாம் எழுத  முடியாது’ன்னு சொன்னாங்க. ‘கண்ணா... லட்டு தின்ன ஆசையா’ன்னு உற்சாகமா ஒத்துக்கிட்டேன். மார்க், பாஸ், ஃபெயில் பத்தி யோசிக்காம படிக்கிறதுக்கு சுகமா இருந்துச்சு.
ஒரு கதையை எப்படிச் சொல்லணும், லைட்ஸ், சவுண்ட் வச்சுட்டு கதையை எப்படி சொல்ல முடியும்னு எல்லாம் விளக்கமா படிச்சேன். உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சினிமா பிரம்மாக்கள்,  தங்கள் படத்தை எப்படி எடுத்தாங்கன்னு புரிஞ்சது. ‘சிட்டிசன் கேன்’ படத்தை எடுத்த ஆர்சன் வெல்ஸ் எப்படியெல்லாம் புதுமை செஞ்சி காட்டினார்னு பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நாம விசில் அடிச்சி  ரசிக்கிற படத்தின் திரையில் உள்ள ஒவ்வொரு சின்னச் சின்ன பொருளும்கூட திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுங்கிறதை ஒத்துக்கவே ஒரு மனப்பயிற்சி தேவைப்பட்டுச்சு. ஒரு படத்தை இயக்கும்  படைப்பாளி எத்தனைவிதமான கிரியேஷன்ஸ் செய்யுறான்னு ஆர்வம் அதிகமாச்சு. எஞ்சினியரிங் வகுப்பில் கஷ்டப்பட்டு உட்காருவதற்கும், சினிமா கோர்ஸில் இஷ்டப்பட்டு உட்காருவதற்கும் உள்ள  வித்தியாசத்தை அனுபவத்துல உணர்ந்தேன்.

சென்னை திரும்பியதும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆவது என்னுடைய முதல் ப்ளான். ஒருவேளை சினிமா கைவிட்டுட்டா தப்பிச்சுக்க, ஒரு டிசைன் ஸ்டூடியோ ஆரம்பிக்கிறது இரண்டாவது ப்ளான்.  அண்ணன் அப்போ ‘காக்க காக்க’ முடிச்சிருந்தாங்க. இயக்குனர் கௌதம் மேனனிடம் அந்தப் படத்திற்கான ‘டிசைன்ஸ்’ செஞ்சு காமிச்சேன். என்னுடைய முதல் டிசைன்ஸ், ‘காக்க காக்க’ படத்தின்  போஸ்டர்களா சென்னை சுவர்களை அலங்கரிச்சுது. அடுத்து, ‘பிதாமகன்’ படத்திற்கான டிசைன்ஸ் செய்யுற வாய்ப்பு கிடைச்சது.

மணிரத்னம் சாரோட படத்தில் அண்ணன் முதன்முதலா நடிக்க ஒப்பந்தம் ஆனார். மணி சார்கிட்டே அசிஸ்டென்ட்டா சேரணும்னு ஆசை. ஆனா, யார்கிட்டே எப்படி கேட்கிறதுன்னு தெரியலை. ஒரு படம்  ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அசிஸ்டென்ட் டைரக்டர்ஸை எடுத்துடுவாங்க. பாதியில் போய் சேரமுடியாது. ‘ஆய்த எழுத்து’ ஷூட்டிங் போற நேரம் அது. இனி ஒரு வருஷம் காத்திருக்கணும். இயக்குனர்  கௌதம்கிட்டே கேட்கலாமான்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, மணி சார் ஆபீஸ்ல இருந்து போன். ‘நடிக்கிறதுக்கு ஒருத்தரைப் பார்த்திட்டிருக்கோம். ஆடிஷனுக்கு வர முடியுமா’ன்னு கேட்டாங்க. பழம் நழுவி  பால்ல விழுந்தா பரவாயில்லை. வாயிலேயே விழுந்ததால, சும்மா கலாய்க்கிறாங்களான்னு சந்தேகம். ‘எனக்கு நடிக்கிறதுல ஆர்வம் இல்லை. அசிஸ்டென்ட் டைரக்டரா சேரணும்’னு சொன்னேன்.  ‘அதெல்லாம் சார்கிட்டே பேசிக்கோங்க’ன்னு சொல்லிட்டாங்க. மணிரத்னம் சாரை நேர்ல சந்திக்கிற வாய்ப்புல, மிஸ் பண்ணாம கேட்டுடலாம்னு முடிவு பண்ணேன். ‘ஆய்த எழுத்து’ படத்துல சூர்யா தம்பி  மாதிரி இருக்கிற ஒரு கேரக்டருக்கு நடிகர் தேடிக்கிட்டிருந்தாங்க. ‘சூர்யாவோட தம்பியே அமெரிக்காவுல படிச்சிட்டு வந்திருக்கான்’னு கேள்விப்பட்டு கூப்பிட்டவர் முன்னால, அண்ணனைவிட ஹைட்டா,  வெயிட்டா நான் போய் நின்னதும் ஷாக்கா இருந்திருக்கும். ‘சார், எனக்கு உங்ககிட்டே அசிஸ்டென்ட்டா சேரணும். நடிக்க விருப்பம் இல்லை’ன்னு சொன்னேன். மனசுல என்ன நினைக்கிறார்னு  யாருக்குமே தெரியாத மணி சார் டிரேட் மார்க் சிரிப்பு பதிலா கிடைச்சது. ‘எவ்ளோ தைரியம் இவனுக்கு’ன்னு நினைச்சாரோன்னு எனக்குள்ள மைண்ட் வாய்ஸ்.

ஆனா என்னை சேர்த்துக்கிட்டார் மணி சார். அண்ணன் ஹீரோவா நடிக்கிற படத்துல நான் உதவி இயக்குனர். முதல் ரெண்டு நாள் கைகட்டி ஓரமா நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன். ‘தம்பி,  வேடிக்கை பார்க்கவா வந்தே? அந்த பூத்தொட்டியை எடுத்து இந்தப் பக்கம் வை’ன்னு ஒரு குரல். திரும்பினா ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். கொஞ்ச நாள் ‘ஆர்ட் டிபார்ட்மென்ட்’ வேலை. அப்புறம்  எடிட்டிங் ரிப்போர்ட் எழுத சொன்னாங்க. அப்படியே க்ளாப் அடிக்கிற புரமோஷன். ‘ஸ்டார்ட் கேமரா, சவுண்ட்’னு டைரக்டர் சொல்லும்போது க்ளாப் அடிச்சிட்டு கீழே உட்கார்ந்துக்கணும். மணி சார்,  ‘ஸ்டார்ட் கேமரா’ன்னு சொன்னதும் பதட்டத்துல க்ளாப் அடிச்சிட்டு டபக்குன்னு உட்கார்ந்துட்டேன். மொத்த யூனிட்டோட பார்வைக்கும் அன்னிக்கு நான்தான் பிரியாணி ஆடு. ஒவ்வொண்ணா புரிய  ஆரம்பிச்சது. மணிரத்னம் மாதிரி ஒரு மேதையின் இயக்கம் எப்படி இருக்கும்னு பார்க்கிற அதிர்ஷ்டம், வாழ்க்கையில் பெரிய வாய்ப்பு. இயக்கம் என்பது பார்த்துக் கத்துக்கிற விஷயம் மட்டும் இல்லை;  பழகிக் கத்துக்க வேண்டியதுங்கிறதுதான் முதல் பாடமே.

‘கொஞ்சம் உடம்பைக் குறைச்சுக்கிட்டா நீங்க நடிக்கலாம்’னு சொன்னார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். ‘நடிக்க வாய்ப்பு வந்தா வேண்டாம்னு சொல்லாதே’ன்னு மணி சாரும் சொன்னாரு. வேறு சில  இயக்குனர்களும் அப்பாகிட்ட கேட்டிருக்காங்க. ‘தேடி வர்ற வாய்ப்பை வேண்டாம்னு சொல்லாதே’ன்னு அப்பாவும் சொல்லிக்கிட்டே இருந்தார். ‘பருத்தி வீரன்’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  என்னுடைய பள்ளிக் காலத்து நண்பர். நான் நடிக்கத் தயங்குறதா நினைச்சு, தொடர்ந்து வற்புறுத்திக்கிட்டே இருந்தார். எல்லாம் கைகூடி வர்ற மாதிரி தோணவே, நடிக்கலாம்னு முடிவெடுத்தேன்.  ஒருவேளை நடிப்பு சரிவரலைன்னா, திரும்ப உதவி இயக்குனரா மாறிடலாம்னு முடிவெடுத்தேன்.

அண்ணனுக்கு என்னை நினைச்சு பயம் வந்துடுச்சு. ‘இப்படி மாறிக்கிட்டே இருந்தா எதுவுமே கிடைக்காது. நடிப்பு புலிவால். ஒரு முறை புடிச்சா, அப்புறம் விடவே முடியாது. ரோட்ல நடந்து போனாக்கூட  சிரிப்பாங்க, கிண்டல் பண்ணுவாங்க. யோசிச்சுதான் முடிவெடுக்கறியா’ன்னு கேட்டார். இவ்ளோ தெளிவா யோசிக்கலைன்னாலும், அவமானப்படுறதைப் பத்தி கவலை இல்லாம இருந்தேன். எல்லாத்துக்கும்  ஒரு விலை இருக்கு. அதை குடுத்துத்தானே ஆகணும்? முதல் படம் ‘பருத்தி வீரன்’. இரண்டரை வருஷம் பொறுமையா இருந்தேன். சினிமாவுக்காக 26 வயதில் ஜிம்னாஸ்டிக் போனேன். அங்க 6 வயசு  பசங்க குட்டிக்கரணம் அடிச்சிட்டு இருப்பாங்க. அவங்களோட நான் போட்டி போடணும். டான்ஸ், ஃபைட்னு தினம் வாழ்க்கை ரணகளமா இருக்கும். எனக்குள்ள இருக்கிற கடைசி சொட்டு எனர்ஜியையும்  பிழிஞ்சி எடுக்கிற மாதிரி வெறித்தனமா கத்துக்கிட்டேன்.

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ன்னு சொல்றது வெறும் பஞ்ச் டயலாக்னு நினைச்சிருக்கேன். அதன் அர்த்தம், ‘பருத்தி வீரன்’ ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது. சாதாரணமா இருந்த என்னை  மக்கள் முதல் படத்துலேயே ஏத்துக்கிட்டாங்க. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எல்லாத் தரப்பிலிருந்தும் ரசிகர்கள் கிடைச்சாங்க. எல்லாருக்கும் பிடிச்ச ஒருத்தனா இருக்கிற சுகம் எப்படி இருக்கும்னு  சொன்னது மக்கள்தான். அடுத்தடுத்து வந்த படங்களும் புதுப்புது அனுபவமா இருந்துச்சு. செல்வராகவன் டைரக்ஷன்ல நடிக்கிறதுக்காகவே ‘ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணேன். ‘பையா’, குழப்பமே இல்லாத  கமர்ஷியல் கதை. ‘நான் மகான் அல்ல’ படம் என்னை மிடில் க்ளாஸ் பையனா மாத்துச்சு. ‘சிறுத்தை’ முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். அஞ்சு படமுமே அஞ்சு வெரைட்டியா செய்ய முடிஞ்சது.

‘வித்தியாசமா நடிக்கிறதா, எல்லாரும் ரசிக்கிற மாதிரி நடிக்கிறதா’ங்கற குழப்பம் இருக்கும். வித்தியாசமான படம் பண்றதா இருந்தாக்கூட, அதை மக்கள் ரசிக்கிற மாதிரி பண்றதுக்காக மெனக்கெடுறேன்.  அவசர அவசரமா வர்ற வாய்ப்பை எல்லாம் ஒத்துக்காம, நிதானமா ஒவ்வொரு ஸ்கிரிப்ட்டையும் பார்த்து டைம் எடுத்து ஒத்துக்கிறேன். எந்த கண்டிஷனும் இல்லாம என்னை ஏத்துக்கிட்ட மக்களுக்கு  நிறைய செய்யணும்னு ஆசை. அப்பா வீட்டு ஃபங்ஷனாவே நடத்தும் அறக்கட்டளை நிகழ்ச்சிகளைச் சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கேன். ‘வயசானவங்க மேல குழந்தைகள் அக்கறையோடு இருந்தா,  அந்த நாடு நல்லா இருக்கும்’னு சொல்லுவாங்க. அண்ணன் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ தொடங்கி பசங்களுக்கு நிறைய பண்றாரு. வயதானவர்களுக்கு ஏதாவது உருப்படியா பண்ணணும்னு நினைக்கிறேன்.  நன்றியை வேற எப்படி சொல்லமுடியும்?’’ என்கிற கார்த்தியிடம், சினிமாவுக்கு வந்து ‘நினைத்ததை சாதித்துவிட்ட’ பெருமிதம் இல்லை; ‘பிடித்ததைச் செய்கிற’ சந்தோஷம் இருக்கிறது.  
(திருப்பங்கள் தொடரும்...)