‘‘நீங்களே சொல்லுங்க... என் தங்கைக்கு கல்யாணம் முடிக்காம நாம கல்யாணம் முடிச்சா நல்லாவா இருக்கும்?’’ என்று கலைச்செல்வன் கேட்டபோது விஜயா அப்படியே அவரைப் பார்த்தபடி நின்றாள். சில நொடிகளில் அந்த மௌனத்தை உடைத்து, ‘‘என்ன சொல்றீங்க...’’ என்றாள். உள்ளுக்குள் அவளுக்கு பட்டாம்பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்தன. ‘‘இல்லை டீச்சர்... நம்மள மாதிரி பொறுப்பான ஆட்களா இருக்கறவங்க கடமைக்குத்தானே முதலிடம் கொடுப்போம். அப்படி இருக்கும்போது நம்முடைய சுக துக்கங்களை பெரிசா நினைச்சுப் பேசினா நல்லாவா இருக்கும்?’’ என்றார்.
‘‘ஓ... நீங்க அதைச் சொல்றீங்களா? நான்கூட வேறென்னவோன்னு நினைச்சேன்’’ என்று ஏமாற்றம் தோய்ந்த குரலில் சொன்னவள், ‘‘நான் உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தேன்...’’ என்று ஆரம்பித்தபோது பியூன் வந்து நின்றார். ‘‘மேடம்... உங்களை ஹெட் மாஸ்டர் அவசரமா கூப்பிடுறாரு’’ என்றார். ‘‘சார்... என்னன்னு கேட்டுட்டு வந்திடுறேன்’’ என்று கலைச்செல்வனிடம் சொல்லிவிட்டு, சற்று சலிப்போடு ஹெட் மாஸ்டர் அறை நோக்கி நடந்தாள். ‘எத்தனை நாட்களாக மனசுக்குள் ஒத்திகை பார்த்து, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கோர்த்து வைத்திருக்கிறேன். சொல்ல நினைக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பூதம் குறுக்கே வந்துவிடுகிறதே... இப்போது ஹெட் மாஸ்டரைப் பார்த்துவிட்டு வந்து உடனடியாக சொல்லிவிட வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.
‘‘வாங்க விஜயா... நம்ம கஸ்தூரி டீச்சர் மெட்டர்னிடி லீவில் போறாங்க. அவங்க எடுக்கற கிளாஸை மத்தவங்க ஷேர் பண்ணிக்கணும். கார்த்திகேயன் சார்கிட்டே கேட்டேன்... ஓகே சொல்லிட்டார். நீங்களும் ஓகே சொல்லிடுவீங்கன்னு நம்பிக்கையோடு கஸ்தூரி மேடம்கிட்டே சொல்லிட்டேன்... உங்களுக்கு ஓகேதானே..?’’ என்றார். ‘‘டபுள் ஓகே... இதைச் சொல்லவா சார் கூப்பிட்டீங்க. நான் பார்த்துக்கறேன் சார்!’’ என்று வேகவேகமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். தூரத்தில் பள்ளி மைதானத்தில் கலைச்செல்வன் மாணவர்களோடு கைப்பந்தும் கையுமாக நின்று கொண்டிருந்தார். வருத்தமான தளர் நடையில் ஆசிரியர் அறை நோக்கி நடந்தாள் விஜயா. ‘‘என்ன விஜயா... ரொம்ப டல்லா வர்றே. உடம்பு சரியில்லையா..?’’ என்று விசாரித்தாள் ஈஸ்வரி. சிரிப்பும் இல்லாத, சோகமும் இல்லாத, நடுவாந்திரமான முகபாவனை ஈஸ்வரியின் நிரந்தர அடையாளமாகி விட்டது. உடை உள்ளிட்ட மற்ற விஷயங்களில் வழக்கம் போலத்தான் இருக்கிறாள். எந்த அடையாளங்களையும் அவள் மாற்றிக் கொள்ளவில்லை. நெற்றியில் சின்னதாக பொட்டு, தலையில் ஒற்றையாக ஒரு ரோஜா, கழுத்தில் அழுத்தமான ஒரு சங்கிலி என்று தன் இயல்போடுதான் இருக்கிறாள். மற்றவர்களுக்கு எப்படியோ... விஜயாவுக்கு ஈஸ்வரியின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தது.
‘‘இல்லை ஈஸ்வரி... நம்ம கஸ்தூரி டீச்சர் மெட்டர்னிடி லீவுல போறாங்கல்ல... அவங்க கிளாஸையும் பார்த்துக்கச் சொல்லி ஹெச்.எம் சார் சொன்னாரு... அந்த யோசனையில் வந்தேன்’’ என்றாள் யோசிக்காமல். அவளுடைய பதில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது பியூன் வந்து ஈஸ்வரியிடம், ‘‘மேடம்... உங்க தம்பி வந்திருக்காரு...’’ என்று சொல்ல, எழுந்து போனாள் ஈஸ்வரி.
விஜயாவுக்கு ஆச்சரியம் தணியவில்லை. காதல் வந்தால் பொய்யும் சமாளிப்பும் வந்து விடுமா என்ன? ‘எப்படி யோசிக்காமல் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டோம்’ என்று நினைத்த படி புத்தகத்தை எடுத்துக் கொண்டு வகுப்பை நோக்கிப் புறப்பட்டாள். கவிதாவுக்கு அரை நாள்தான் பள்ளிக்கூடம் என்பதைத் தெரிந்து வைத்திருந்த ஆனந்த், அவளுடைய பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தான். கவிதா வந்துவிட்டால் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று ஒரு பக்கம் யோசனை ஓடினாலும், ‘நாம் என்ன சொன்னாலும் அவள் வீட்டில் போய் வத்தி வைத்துவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டான்.
நல்லவேளையாக போலீஸ் ஸ்டேஷனுக்கு விஜயா போயிருந்ததால் தன்னைப் பற்றி எதுவும் வீட்டில் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டான். அதனாலேயே இரண்டு நாட்களாக விஜயா கண்ணில் படாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தான். சிக்கினால், உட்கார வைத்து ஒரு மணி நேரத்துக்குப் பாடம் எடுப்பாள். ஒரு வாரம் சமாளித்துவிட்டால் அர்ச்சனை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனந்த் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்கூல் பெல் அடித்தது. பிள்ளைகள் இரைச்சலோடு பள்ளியை விட்டு வெளியே வரத் தொடங்கியிருந்தார்கள். அவன் பரபரப்பாக நளினியைத் தேடினான். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு இயல்பான நடையில் வெளியே வந்த நளினி, வாசலில் கடைப்பக்கமாக ஆனந்த் நிற்பதைப் பார்த்ததும் கொஞ்சம் பதற்றமானாள். கண்களாலேயே ‘என்ன’ என்றாள். ஆனந்த் வெறுமே சிரித்துக் கொண்டான். நளினியைத் தொடர்ந்து கவிதா வர, ஆனந்த் சட்டென்று கடைக்குள் பதுங்கிக் கொண்டான். கவிதாவும் நளினியும் ஏதோ பேசிக் கொண்டே கொஞ்ச தூரம் நடந்தார்கள். நளினி ஏதோ சொன்னதும் கவிதா தலையை ஆட்டியபடி சைக்கிளில் ஏறி நேராகச் சென்றாள். நளினி சின்ன தயக்கத்தோடு திரும்பி ஆனந்தைப் பார்த்துவிட்டு, சைக்கிளைத் தள்ளியபடி பக்கத்து சந்துக்குள் நுழைந்தாள். ஆனந்த் உற்சாகமாக விசிலடித்தபடி சந்தை நோக்கி ஓடினான்.
சந்துக்குள் ஒரு ஓரமாக சைக்கிளை நிறுத்தி, செயினை சரி செய்யும் பாவனையில் நின்று கொண்டிருந்த நளினி, ஆனந்தைப் பார்த்ததும் எழுந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தாள். ஆனந்த் சின்ன தயக்கத்தோடு அவள் அருகே நடந்தான். ‘‘என்ன நளினி... ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற..?’’ என்றான். ‘‘என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறேன்... அது இல்லாமத்தான் சந்துக்குள்ள சைக்கிளை ஓட்டுறோமாக்கும்...’’ என்றாள். ‘‘எதையுமே நேராச் சொல்ல மாட்டியா..? என்னை புடிச்சிருக்கா, இல்லையா..?’’ என்றான். ‘‘உனக்கு என்னை எவ்வளவு புடிச்சிருக்குனு ஒரு கிஃப்ட் குடுத்துச் சொல்லு... அப்போ சொல்றேன்...’’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி அழுத்தினாள் நளினி. ஆனந்த் அந்த நொடியே ‘என்ன கிஃப்ட் கொடுப்பது’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டான்.
‘‘மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு... ராதா மாப்பிள்ளை வீட்டுல ஐம்பது பேர்தான் வருவாங்களாம்... அதுக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க... சேலை எவ்வளவு, சேலை எவ்வளவுன்னு கையில காசை வச்சுக்கிட்டு தொளைச்சு எடுத்துட்டாரு மாப்பிள்ளையோட அப்பா... நான்தான் ‘பிறகு வாங்கிக்கறேன்’னு சொல்லிட்டு வந்தேன்... நல்ல பண்பான ஆளுகளா இருக்காங்க. மண்டபம் பத்தியும் அவங்ககிட்டே சொல்லிட்டேன்...’’ என்று எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டு அப்பாடா என்று உட்கார்ந்தார் அப்பா. அம்மா சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, ‘‘ஆனா, நம்ம வீட்டு மகராசிதான் கால் நீட்ட இடமில்லைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கா...’’ என்று நொடித்துக் கொண்டாள்.
வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்தார் ரத்னவேல். ‘‘மாமா... வடிவேலு வீட்டுல எல்லாத்தையும் பேசிட்டேன். சேலைக்கான காசைக் கொடுத்துட்டாங்க. மத்த செலவுகளுக்கு ஏதாவது நாங்க கொடுக்க வேண்டியிருக்குமான்னு கேட்டாங்க... நான் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். சமையலுக்கு நீங்க சொன்ன மாதிரி நெடுங்குடி ஆளையே பேசிட்டேன். சரக்கெல்லாம் சுத்தமா வேணும்னு சொல்லிட்டேன்... நம்ம சைடு எத்தனை பேருக்கு சொல்லணும்னு லிஸ்ட் எழுதிரலாமா... இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு..!’’ என்றபடி அருகில் உட்கார்ந்தார். அம்மா அவருக்கும் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ‘‘உன் அண்ணன், தம்பிகளுக்கு போன்ல சொன்னா போதுமா... இல்லை, நேர்ல வரணும்னு நினைப்பாங்களா... நேர்ல போகணும்னா சோமுவைத்தான் அனுப்பணும். என்ன சொல்றே..?’’ என்றார் அப்பா. கேள்வியிலேயே அவருக்கு நேரில் போக விருப்பமில்லை என்பது தெரிந்தது. புரிந்துகொண்ட அம்மா, ‘‘நீங்க போன்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்படியே சோமுவை அனுப்பறேன்னு சொல்லிடுங்க... அவன் அந்தப்பக்கமா ரூட்ல போகும்போது எட்டிப் பார்த்து சொல்லிட்டு வந்திடட்டும்...’’ என்றாள். ‘‘அப்போ அப்படியே அவனோட மாமனாருக்கும் ஒரு வார்த்தை போய் சொல்லிட்டு வந்திடச் சொல்லு...’’ என்றபடி பையை பீரோவுக்குள் வைத்துவிட்டு பின்வாசலுக்கு முகம் கழுவச் சென்றார் அப்பா. நளினியின் வீடு இருக்கும் தெப்பக்குளம் தெருவில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆனந்த். கையில் ஒரு வாட்ச் பார்சல் கட்டப்பட்டு நளினிக்காக காத்திருந்தது. நான்காவது முறை அவள் வீட்டைக் கடந்தபோது மொட்டை மாடியில் எட்டிப் பார்த்த நளினி, வேகமாக இறங்கி வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். ஆனந்தைக் கடக்கும்போது, ‘‘கோயிலுக்கு வந்திரு...’’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.
யாரோ கொடுத்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தைக் கையில் வாங்கிய இருவரும், கோயிலுக்கு வெளியே தூண் மறைவாக நின்று கொண்டிருந்தார்கள். கையில் இருந்த வாட்ச்சை நளினியிடம் கொடுத்தான். வாங்கி பார்சலைப் பிரித்துப் பார்த்த நளினி, ‘‘வாட்ச்சா... நல்லாயிருக்கு! ஆனா, நான் இன்னும் பெருசா எதிர்பார்த்தேன்... பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு கண்களால் ஒரு சிரிப்பு சிரித்தாள். ‘‘இப்போ சொல்லு... என்னைப் பிடிச்சிருக்கா?’’ என்றான் ஆனந்த். அவன் கொடுத்த வாட்ச்சைக் கையில் கட்டிக் கொண்ட நளினி, ‘‘ஓகேதான்... உனக்கு டைம் நல்லாயிருக்கு’’ என்றாள்.
‘‘நீ எப்பவுமே எதையுமே நேராச் சொல்லமாட்டியா... இப்படி பூடகமாவே பேசுவியா..?’’ என்றான் ஆனந்த். ‘‘ஏன்... பிடிச்சிருக்குங்கறதை பிடிச்சிருக்குன்னுதான் சொல்லணுமா என்ன..?’’ என்றவள், ‘‘வரட்டுமா... ரெகார்டு நோட்டு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் அதை வாங்கிட்டுப் போகணும்... லேட்டாகிடும்’’ என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
அம்மாவின் அஞ்சறைப் பெட்டியில் சுட்ட காசில் வாங்கிய வாட்ச் பிடித்திருந்தாலும், இன்னும் பெருசா எதிர்பார்க்கிறேன் என்று அவள் சொன்னது ஆனந்தின் மனதுக்குள் ஓடியது. ‘இன்னும் என்ன கொடுக்கலாம்’ என்ற யோசனையோடு வீட்டுக்குள் நுழைந்தான். ‘‘இந்த சேலையைத்தான் உனக்காக எடுத்தோம்...’’ என்று சீதா பட்டுப்புடவையை எடுத்து விஜயாவிடம் கொடுக்க, விஜயா அதை எடுத்து பீரோவில் வைப்பது ஆனந்தின் கண்களில் பட்டது.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்