ரோல்மாடல்





காயத்ரி. உலக அரங்கில் இந்தியக் கொடியை கம்பீரமாக உயர்த்திப் பிடிக்கும் தடகள வீராங்கனை. சென்னையின் பரபரப்பான பாரிமுனை, தம்புசெட்டித் தெருவில் பிறந்து, பள்ளிக்கூட மைதானங்களில்  ஓடிப் பழகி, உலகே வியக்கும் விளையாட்டுப் பெண்ணாக உயர்ந்து நிற்பவர். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த காயத்ரியை ஆர்வமும், உழைப்பும் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.

‘‘சொந்த ஊர் அரியலூர். தாத்தா காலத்திலேயே சென்னையில செட்டிலாகியாச்சு. அப்பா கோவிந்தராஜ், வெளிநாட்டில வேலை செஞ்சவர். அம்மா நவமணி எம்.எஸ்சி சைக்காலஜி படிச்சவங்க.  கயல்விழின்னு அக்கா; கிருத்திகான்னு தங்கை. அம்மாவுக்கு நாங்கதான் உலகம். நிறைய சுதந்திரம் கொடுப்பாங்க. எந்த முடிவையும் திணிக்க மாட்டாங்க. அதனால லட்சியங்களையும், துறைகளையும்  நாங்களே தீர்மானிச்சுக்க முடிஞ்சுது. சின்னவயசுல துறுதுறுன்னு இருப்பேன். நடக்கிறதும், ஓடுறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விளையாட்டு வகுப்புன்னா மனசுல உற்சாகம் பொங்கும். நான்  பள்ளிக்கூடம் போற வழியில எம்.எம்.சி மைதானம். காலை, மாலை நேரங்கள்ல அங்க நிறைய பேர் பயிற்சி எடுத்துக்கிட்டிருப்பாங்க. அவங்க ஓடுறது, எக்சர்சைஸ் பண்றதை எல்லாம்  ஏக்கமா  பாத்துக்கிட்டிருப்பேன். ஒருநாள் பெரியவர் ஒருத்தர், ‘தினமும் நின்னு பாக்குறியே... உனக்கும் பயிற்சி எடுக்க ஆசையா இருக்கா’ன்னு கேட்டார். ‘ஆமா சார்’ன்னேன். என்னை அழைச்சுட்டுப் போய் கோச்  கிட்ட விட்டு, ‘இவகிட்ட இருக்கற ஆர்வத்தைப் பாத்தா நிச்சயம் சாதிப்பா’ன்னு சொன்னார். அதுதான் என் விளையாட்டு வாழ்க்கையோட ஆரம்பம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் காயத்ரி. ‘‘என்னைக் கூர்ந்து  பாத்தார் கோச். ‘நாளையில இருந்து சாயங்காலம் வந்துடு’ன்னு சொன்னார். அன்னைக்குத் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் என்னை உருவாக்கி வழி நடத்துறது அந்த கோச்தான் டாக்டர் வி.நாகராஜ்.  சென்ட்ரல் எக்சைஸ்ல கண்காணிப்பாளர். எந்த விளம்பரமும் இல்லாம பல நூறு தடகள வீரர்களை உருவாக்கினவர். ஒல்லியா, உடல் பலமில்லாம நான் மைதானத்தில இறங்கினப்போ, பலபேர் என்னைப்  பரிகாசமா பாத்தாங்க. ‘இதுக்கு நீ சரிப்பட மாட்டே... போய் ஒழுங்கா படிப்பைப் பாரு’ன்னு சிலர் அட்வைஸ் பண்ணாங்க. ‘உண்மையிலயே நமக்கு விளையாடத் தகுதியில்லையோ’ன்னு தோணும். இந்த  தாழ்வு மனப்பான்மையை உடைச்சு நொறுக்கினார் கோச். ‘மத்தவங்களால முடியாதது உன்னால முடியும்... உன்னால முடியாதது மத்தவங்களால முடியாது’ம்பார். அது மந்திரம் மாதிரி உள்ளே புகுந்து  உத்வேகத்தைக் கொடுத்துச்சு. 



ஒரு காலத்தில விளையாட்டுப் போட்டிகள்னா அது நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும்னு இருந்துச்சு. இன்னைக்கு நிலைமை மாறிடுச்சு. அரசு பல வழிகள்ல கிராமத்து வீரர்களை ஊக்கப்படுத்துது. சில  தனிநபர்களும் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வீரர்களை வெளியில கொண்டு வரப் போராடுறாங்க. டாக்டர் பாபுமனோகரன் சார் நடத்துற ‘செயின்ட் ஜோசப் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  அப்படியான ஒரு அமைப்பு. விளையாட்டுல சாதிக்கிற கிராமப்புற மாணவர்களை முழுமையா தத்தெடுத்து, உணவு, உடை, ஹாஸ்டல் தந்து, போட்டிகள்ல கலந்துக்க பணமும் பயிற்சிகளும் தர்றார்.  200க்கும் மேற்பட்டவங்க அங்கே இருக்காங்க. அந்த அகாடமியிலதான் நாகராஜன் சார் கோச்சா இருக்கார்.  விளையாட்டுக்கு உடல் பலத்தை விட மனபலம் முக்கியம். சின்னச் சின்ன  பிரச்னைக்கெல்லாம் மனசொடிஞ்சு போறவங்க களத்தில நிக்கமுடியாது. தடகளத்தைப் பொறுத்தவரை, ஓரிரு வினாடிகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். அதுக்கு மனசு ஒருநிலைப்படணும்.  உடற்பயிற்சியோட மனப்பயிற்சியும் முக்கியம். 8ம் வகுப்புலயே மாநில போட்டிகள்ல கலந்துக்கிட்டேன். முதல் நாலைஞ்சு போட்டிகள்ல பெரிசா சாதிக்க முடியல. அப்புறம்தான் வெற்றிகள்  கிடைச்சுச்சு...’’ - சிரிக்கிறார் காயத்ரி.

‘‘அதுக்காக படிப்பை கோட்டை விடலை. 10ம் வகுப்புல 84 சதவீத மார்க். பிளஸ் 1 படிக்கறப்பவே தேசியப் போட்டிகளுக்குப் போயிட்டேன். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில, 16 வயதுக்கு  உட்பட்டவர்கள் பிரிவுல ரெகார்ட் பிரேக் பண்ணுனேன். அந்த வெற்றிக்குப் பிறகுதான் என்மேல கவனம் விழுந்துச்சு. பிளஸ் 2வில 91 சதவீதம் மார்க். செயின்ட் ஜோசப் காலேஜ்ல பி.பி.ஏ. சேந்தேன்.  விளையாடும்போது படிப்பைப் பத்தி யோசிக்க மாட்டேன். படிக்கிறப்போ விளையாட்டை சிந்திக்க மாட்டேன்.  தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ரெண்டு கேமையும் முதன்மையா வச்சு  எனக்குப் பயிற்சி கொடுத்தார் கோச். இலங்கையில நடந்த தெற்காசிய விளையாட்டு, பாங்காக்ல நடந்த ஆசிய தடகள சாம்பியன் போட்டி, புனேயில நடந்த யூத் காமென்வெல்த், சீனாவில நடந்த ஆசிய  அத்லெட்டிக் கிராண்ட்பிரீ, டெல்லியில நடந்த ஏசியன் ஆல்ஸ்டார் அத்லெட்டிக்னு நிறைய போட்டிகள்ல பதக்கங்கள் கிடைச்சுச்சு. இனி அடுத்த கட்டம்... அதுக்காக இன்னும் தீவிரமா பயிற்சி  எடுத்துக்கிட்டிருக்கேன்’’ என்கிற காயத்ரி இப்போது எம்.பி.ஏ. படிக்கிறார்.



‘‘இன்னைக்கு பல விளையாட்டுகள்ல இந்தியர்கள் முதன்மை வகிக்கிறாங்க. குறிப்பா தமிழர்கள். ஆனா மீடியாக்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை மத்த விளையாட்டுகளுக்கு  கொடுக்கிறதில்லை. அதனால பல சாதனைகள் வெளியில தெரியாம முடங்கிக் கிடக்கு. உதாரணத்துக்கு கே.என்.பிரியான்னு ஒரு அக்கா. அவங்களப் பாத்துதான் தடை தாண்டும் ஓட்டத்தை நான் தேர்வு  செஞ்சேன். அற்புதமான வீராங்கனை. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில 2 வெள்ளி வாங்கினாங்க. ஆனா, அவங்களை மீடியா என்கரேஜ் பண்ணலே. விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய  சவாலே மீடியோவோட புறக்கணிப்புதான்...’’ எனும் காயத்ரி ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். ‘‘ஒரு வீராங்கனை தடைகளைக் கடந்து எப்படி ஜெயிக்கிறாங்கிறதுதான்  ‘ஆசைப்படுகிறேன்’ படத்தோட ஒன்லைன். டைரக்டர் பாலு மணிவண்ணன் சார் எங்க கோச்சை அப்ரோச் பண்ணியிருக்கார். கிட்டத்தட்ட என்னோட கதை மாதிரியே இருந்ததால கோச் ஒத்துக்கிட்டார்...’’  என்று புன்முறுவல் பூக்கிற காயத்ரி, ‘‘வலி இல்லாம எந்த வெற்றியும் கிடைக்காது. எந்த விளையாட்டு வீரருக்கும் எங்காவது ஒரு இடத்தில வலி இருந்துக்கிட்டே இருக்கும். அந்த வலிதான் அடுத்த  கட்டத்தை நோக்கி இயக்கும். ஓடும்போது விழுந்து பலமுறை காயப்பட்டிருக்கேன். நடக்கவே முடியாதுங்கிற நிலையெல்லாம் வந்திருக்கு. மனஉறுதியும், ஆர்வமும் இருந்தா எல்லா வலிகளையும் கடந்து  வரலாம்...’’ என்று முத்தாய்ப்பு வைக்கிறார். காயத்ரிக்கு இரண்டு கனவுகள். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கி இந்தியக் கொடியை ஏற்றிப் பிடிக்க வேண்டும். விளையாட்டு மேலாண்மையில் முனைவர்   பட்டம் வாங்க வேண்டும். இரண்டும் நிறைவேறட்டும்..!