மரியாதை
சரியாக பனிரெண்டு மணிக்கு அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். ‘‘கரெக்டா கரன்ட் கட் பண்ற நேரம் நாம வந்திருக்கோம்! நேத்தும் இப்படித்தான் நான் வந்து அவஸ்தைப்பட்டேன்’’ - என்றார் தரகர்.
ராஜாவுக்கு எரிச்சலாக இருந்தது. வெயிலில் அலைந்து, ஒவ்வொரு உறவினராகக் கூட்டிவந்து, ‘அப்பாடா’ என்று வந்து இறங்கிய இடத்தில் பவர்கட் என்றால் எப்படி இருக்கும்?
வேண்டா வெறுப்புடன் உள்ளே நுழைந்தவனுக்கு ஆச்சரியம். ஃபேன் ஓடிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க வர்றீங்கன்னு இன்னைக்குத்தான் இன்வெர்ட்டர் போட்டோம்’’ என்றபடி வரவேற்றார் பெண்ணின் அப்பா.
வெயிலுக்கு இதமாய் சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வந்தாள் பெண். நன்றாகப் படித்திருந்தாலும், சுமாராகத்தான் இருந்தாள். வந்தவர்களுக்கு அத்தனை திருப்தி இல்லை. ஆனால், ராஜாவோ கண் ஜாடையில் சம்மதம் சொன்னான். அவனை அவசரமாக தனியே அழைத்துவந்த அப்பா, ‘‘ஏண்டா... பொண்ணு சுமாராதான் இருக்கா. இதைவிட அழகான பொண்ணை எல்லாம் வேணாம்னு சொன்னே. இப்போ என்ன ஆச்சு?’’ என்றார்.
‘‘பொண்ணு பாக்க வர்றோம்னதும் அவசரமா இன்வெர்ட்டர் செட் பண்ணிருக்காங்க... இந்தளவுக்கு நம்ம மேல மரியாதை வச்சிருக்கிற குடும்பத்தை மிஸ் பண்ணக் கூடாதுப்பா!’’ மகனின் பக்குவம் அவருக்குப் பெருமிதம் தந்தது.
|