பார்த்துக்கறேன்!
மாடியில் துணிகளைக் காயப் போட்டுவிட்டு, ‘‘வெயில் இப்படி சுள்ளுன்னு அடிக்குதே’’ என அலுத்துக் கொண்டபடி உள்ளே நுழைந்த காயத்ரி, அவசர அவசரமாக போனை எடுத்து டயல் செய்தாள்.
‘‘ஹலோ சரண்யா! கஸ்தூரிக்கு நெஞ்சுவலி வந்து ஆஸ்பத்திரில சேர்த்தாங்களே... இப்ப அவளுக்கு எப்படியிருக்கு?’’ - கேட்கும்போதே காயத்ரிக்கு வியர்த்துக் கொட்டியது. ' ‘‘ம்... இன்னும் அவ ஆஸ்பத்திரியிலதான் இருக்கா. ஆனா பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லியிருக்கார். இன்னைக்கு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு நான் அப்புறமா கூப்பிடட்டுமா?’’
‘‘சரிடி! இந்த ரமா எங்க போனா..? அவளாலதான் இத்தனை குழப்பமும் ஆகியிருக்கு... அவளப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?’’ ‘‘ப்ச்... சும்மா தொண தொணங்காத. சீரியல் ஓடிட்டு இருக்கு... நடுவுல விளம்பரம் போட்டதும் நானே உன்னைக் கூப்பிடறேன்...’’ என்று சிடுசிடுத்தவள் போனை டக்கென்று ‘கட்’ செய்து விட்டாள். காயத்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
‘‘ம்...க்கும். ரொம்பத்தான் அலட்டிக்கிறா. இருக்கட்டும்... இருக்கட்டும்... இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு அவ ஏரியாவுல பவர் கட் ஆகும். அந்த நேரத்துல ஓடற சீரியல்ல என்னாச்சுன்னு எங்கிட்டதானே கேப்பா... அப்ப பாத்துக்கறேன்!’’
|