கவிதைக்காரர் வீதி




புரியாதது...

பழரசம் கொடுத்து
முடித்து வைக்கப்படும்
உண்ணாவிரதம் போல
முத்தம் கொடுத்து
முடித்து வைக்கலாமா
உன் மௌனத்தை!
- பெ.பாண்டியன்,
  காரைக்குடி.

நிழலாய்...
நீயும் நானும் பிரிந்த பின்பு
நினைவில் வைத்திருக்குமா
என் நிழலை
உன் நிழல்?
- தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்

தவிப்பில்...
நீயும் பேசுகிறாய்
உன் கண்களும் பேசுகின்றன
முதலில் யாரிடம்
பேசுவேன் நான்?
- பே.மாரிசங்கர், அம்பாசமுத்திரம்.

புதிராக...
என்னைக் கடக்கையில்
இடமிருந்து
வலம் பார்ப்பதிலும்,
வலமிருந்து
இடம் பார்ப்பதிலும்
ஒரு புதிர்ப் போட்டியே
நடத்தி விட்டுப் போகிறாய்...
நான்தான்
நிரப்ப முடியாமல் தவிக்கிறேன்!
- சிவபாரதி, சிதம்பரம்.

மிஞ்சியிருப்பது...
பிடித்து
மீண்டும் பறக்க விட்ட
பட்டாம்பூச்சியாய்
கடந்து சென்றாய்...
விரல்களில் ஒட்டியிருக்கும்
வண்ணங்களாக
உன் நினைவுகள்!
- அ.கோ.விஜயபாலன், திருவாரூர்.

துளிப்புள்ளிகள்...
நீ கோலமிடும்
அழகைக் காணவே
புள்ளிகளுக்குப் பதில்
பனித்துளிகள் வந்து
உட்கார்ந்து கொள்கின்றன.
- த.ரெ.தமிழ்மணி, திருவாரூர்.