கிராமங்களுக்குள் முடங்கிக்கிடந்த கூத்துக்கலையை
செழுமைப் படுத்தி நகரத்து தெருக்களுக்குக் கொண்டு வந்தவர் கூத்துப்பட்டறை
முத்துசாமி. ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி அவரது ஆளுமையை
கௌரவப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு!
உலகளாவிய பரிவர்த்தனைகளை
உருவாக்கி கூத்தின் கலைத்தன்மையை மேம்படுத்தியதில் முத்துசாமியின்
பாத்திரம் முக்கியமானது. பசுபதி, விமல், விதார்த், தேவி, கலைராணி, சந்திரா,
விஜய்சேதுபதி என கூத்துப்பட்டறை பயிற்றுவித்த பலர் தனித்தன்மையான
திரைக்கலைஞர்களாக ஜொலிப்பது சிறிய சான்று.
‘‘பூம்புகாரை
ஒட்டியிருக்கிற புஞ்சைதான் சொந்த ஊர். பள்ளிக்கூட வயசுலயே திமுக தாக்கம்.
புஞ்சையில திமுகவை கட்டமைச்சு வளத்தெடுத்ததுல நானும் ஒருத்தன். அண்ணாமலை
பல்கலைக்கழகம் வந்த பிறகு மாணவரணியில இணைஞ்சு வேலை செஞ்சேன். அப்போ
இலக்கியம் அறிமுகமாச்சு!
அப்ப சி.சு.செல்லப்பா ‘எழுத்து’
நடத்திக்கிட்டிருந்தார். நான், சி.மணி, வி.து.சீனிவாசன், ‘க்ரியா’ ராம
கிருஷ்ணன் எல்லாருக்கும் ‘எழுத்து’ களமா இருந்துச்சு. ஐரோப்பிய நாடகங்களோட
ஆதிக்கம் தொடங்கின நேரம். வில்லியன் சரோயன் எழுதின ‘ஹலோ யாரங்கே’ நாடகத்தை
செல்லப்பா மொழிபெயர்த்து ‘எழுத்து’ல வெளியிட்டார். வெங்கட் சாமிநாதனும்
நாடகங்கள் பத்தி நிறைய எழுதுவார். ‘எழுத்து’க்கு நிதி திரட்ட கோபாலியை
வச்சு ‘மிஸ் ஜூலி’ன்னு ஒரு நாடகம்கூட நடத்துனார் செல்லப்பா. இதெல்லாம்
நாடகம் சார்ந்து என் தொடக்க கால அனுபவங்கள்.
‘நடை’
பத்திரிகைக்காக சில நாடகங்கள் எழுதினேன். கண்ணப்ப தம்பிரானோட ‘கர்ண
மோட்சம்’தான் நான் பார்த்த முதல் கூத்து. பிரமிச்சுப் போயிட்டேன். கூத்து
தான் இந்தியாவோட தியேட்டர் மரபுன்னு முடிவுக்கு வந்தேன். கிராமம் கிராமமா
போய் கலைஞர்களைச் சந்திச்சேன்.
வழிபாட்டோட இணைஞ்சே வளர்ந்த கலை
கூத்து. அதன் மரபைக் குலைக்காமலே நவீனங்களை கலந்து, நேர வரையறை செஞ்சு
மேடைக்குக் கொண்டு வந்தோம். அதன் தொடர்ச்சியா, புதிய தலைமுறை கலைஞர்களை
உருவாக்கத் தொடங்கப்பட்டதுதான் ‘கூத்துப்பட்டறை’. நிறைய சிரமப்பட்டோம்.
கடன்பட்டோம். காலப்போக்கில ஃபோர்டு ஃபவுண்டேஷன் மாதிரி சில நிறுவனங்கள்
உதவிக்கு வந்தாங்க. உலகளாவிய கலைஞர்களை அழைச்சுக்கிட்டு வந்து வேலை
செஞ்சோம். இன்னைக்கு நிறைய இளைஞர்கள் கலையை நாடி வர்றாங்க...’’ என்கிறார்
ந.முத்துசாமி.
முத்துசாமியின் மனைவி அவையாம்பாள். காதல் திருமணம்.
மூத்த மகன் நரேஷ், ஓவியர். இளையவர் ரவி சிங்கப்பூரில் இருக்கிறார். கலை
கற்க வரும் இளைஞர்களால் எந்நேரமும் நிரம்பி வழிகிறது முத்துசாமியின் வீடு!
ஜி