வணக்கம்... வாழவைக்கும் சென்னை...பிடிக்குது உன்னை..!உனக்கு ஈடு இல்லையே..!மிரட்டி ஓடவைக்கும் சென்னை... மிரட்டுது என்னை...இருந்தும் ஓடவில்லையே..!வத்திப்பெட்டி போல இங்கு வீடிருக்கும் - தெருசுத்தியெங்கும் கான்க்ரீட் காடிருக்கும்..!மூச்சுமுட்ட நெரிசலில ரோடிருக்கும் - அதில் மாட்டுவண்டி தொட்டியில பூ சிரிக்கும்..!எத்தனை கண்கள் இங்கு பசித்திருக்கும்... இது அந்தக் கனவையெல்லாம் நிறைவேற்றும்..!சென்னையின் வாழ்க்கையையும், அதன் இயக்கத்தையும் முன்னிறுத்தி நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தப்பாடல் இடம்பெற்ற படம், பசங்க புரடக்ஷன்ஸின் ‘மெரினா’. சென்னைப் பசங்களின்... குறிப்பாக மெரினா கடற்கரையையே தொழிலிடமாகக் கொண்டு வாழும் பசங்களின் வாழ்க்கையுடன், கடற்கரை சார்ந்த இயக்கத்தையும் முன்னிறுத்தி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம். காசிமேடு தொடங்கி பெசன்ட் நகர் வரை நீண்டு காற்றுவாங்க கடற்கரைப்பக்கம் போவோரது கவனத்தையும் வாங்க இருக்கிறது ‘மெரினா’.
‘‘14 கிலோ மீட்டர் நீண்டிருக்கிற கடற்கரையை ஒரே மூச்சில எல்லோராலும் சுற்றி வர முடியாது. அந்த அனுபவத்தை இந்தப்படம் தரும்...’’ என்கிற பாண்டிராஜ், இதற்காகவே நான்கு மாதங்கள் கடற்கரைக்கு விசிட் அடித்து படத்துக்கான காட்சிகளைப் பிடித்திருக்கிறார்.

‘‘சுண்டலையும், சுண்டல் விற்கிற சிறுவர்களையும் விட்டுட்டு கடற்கரை இல்லை. 12 வயசுப் பையன் அஞ்சு ரூபாய்க்கு சுண்டல் விற்கிறதைத் தாண்டி பெரும் பாலும் யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கிறதில்லை. ஆனா அந்தப்பசங்க காலை கவனிச்சீங்கன்னா செருப்பு போட்டிருக்க மாட்டாங்க. நடக்கும்போது செருப்பிலிருந்து வீசியடிக்கிற மணல் சுண்டல்ல பட்டுரக் கூடாதுங்கிற கவனம்தான் அதுக்குக் காரணம். அந்தச் சுண்டல் எப்படி எங்கே தயாராகுது, சுண்டல் விற்காதவனின் நிலை என்ன, விற்காத சுண்டல் என்ன ஆகுதுங்கிறதோட, அங்கே இருக்கிற குதிரைக்காரர்கள், சுக்கு காபி விற்கிறவர், கடற்கரைக்கு வந்து போகிறவர்கள், இரவை அங்கேயே கழிப்பவர்கள்னு அங்கே வர்றவங்க ஒவ்வொருத்தர் செயலுக்கும் இருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும் படம் பதிவு பண்ணியிருக்கு.
மேற்படி பாடல் சென்னையில் வந்து இறங்கும் ஒரு சிறுவனின் பார்வையில், சென்னையின் பதிவா இருக்கு. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு மேல இந்தப்பாடலை டவுன்லோடு செய்திருக்காங்க..!’’ என்கிற பாண்டிராஜ், படத்தின் ஆடியோவை அதே மெரினாவில் அமீர் உள்ளிட்ட இளம் இயக்குநர்கள் வெளியிட... சுண்டல் விற்கும் சிறுவர்களை விட்டுப் பெற்றுக்கொள்ளச் செய்தார்.
அதே நாளன்று மெரினா வியாபாரிகளே முன் வந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாண்டிராஜுடன் இணைந்து தங்கர் பச்சான், சசி, சிம்பு தேவன், சுசீந்திரன், சற்குணம் உள்ளிட்ட இயக்குநர்களும் கடற்கரையைச் சுத்தப்படுத்தியது கவனிக்க வைத்தது. ‘‘அழகான மெரினாவை அசுத்தம் பண்றவங்க யோசிக்கணும். இதுவரை மெரினாவுக்குப் போனவங்க படம் பார்த்தபிறகு இதையெல்லாம் யோசிப்பாங்க. அவங்க கண்ல வேறு ஒரு மெரினா தெரியும்..!’’ என்கிறார் பாண்டிராஜ் நம்பிக்கையுடன்.
- வேணுஜி