விஜயா டீச்சர்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
                  

                 வீடே உறைந்துபோய் உட்கார்ந்திருந்தது.

‘‘இதுவரைக்கும் வந்து பார்த்தவங்க, ‘பொண்ணைப் புடிக்கலை’ன்னு சொல்லிட்டுப் போயிருக்கானுங்க... அதிலேயாவது ஒரு நியாயம் இருக்கு! இவன் என்னன்னா, ‘அக்காவைப் புடிக்கலை, தங்கச்சியைக் கட்டிக் கொடுங்க’ன்னு கேட்கறானே... என்ன அநியாயமா இருக்கு?’’ என்று புலம்பினாள் அம்மா.

‘‘அம்மா... சும்மா புலம்பாதே! எதையும் முதலிலேயே தெளிவா சொல்லியிருக்கணும்... போட்டோவை மாமா காட்டியிருந்தா, இந்த தர்மசங்கடத்தைத் தவிர்த்திருக்கலாம். இங்கே வந்து பொண்ணைப் பார்த்துக்கட்டும்னு நினைச்சதுதான் தப்பாப் போச்சு. சரி, வேற இடம் அமையாமலா போயிரும்... விட்டுத் தள்ளுவோம்’’ என்று சோம சுந்தரம் சமாதானமாகப் பேசிய நேரத்தில், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தார் ரத்னவேல்.

வாகாக ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சீதாவிடம், ‘‘உள்ளே போய் குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டா...’’ என்றார்.

அவள் நகர்ந்ததும் அப்பா பக்கம் திரும்பி, ‘‘இப்படிக் கேட்பாங்கன்னு நானே எதிர்பார்க்கலை... ஆனா, நல்ல இடம்! விட்டுற வேண்டாம்னு தோணுது. வேணும்னா, விஜயாவுக்கு முடியற வரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லுவோமா..?’’ என்றார்.

‘‘என்ன மாமா இது... நாங்க எல்லாம் கொதிச்சுப் போயிருக்கோம்... வந்தவங்க இப்படிப் பேசிட்டுப் போயிருக்காங்களேன்னு! நீங்க என்னன்னா, சம்பந்தம் பேசச் சொல்றீங்க? உங்க சொந்தமா போயிட்டதாலதான் சும்மா விட்டேன்... இல்லேன்னா நல்லா நாலு வார்த்தை கேட்டிருப்பேன்...’’ என்று பொருமினான் ஆனந்த்.

‘‘இவன் என்னடா பெரிய மனுஷங்க பேசுற இடத்துல குறுக்கப் பேசிக்கிட்டு... உன் வேலை எதுவோ அதைப் பார்த்துக்கிட்டுப் போ. என்னைக்கு இருந்தாலும் சீதாவுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துத்தானே ஆகணும்... அதை இன்னிக்கு பார்த்ததா நினைச்சுக்குவோம். நம்ம பிள்ளைகளுக்கு அலையாம திரியாம ஒரு சம்பந்தம் கிடைக்குது... விட்டுட்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா..? என்ன மாமா... ஒண்ணும் பேசாம இருக்கீங்க..?’’ என்று கேட்ட ரத்னவேலை பார்த்துக் கொண்டே வந்தாள் சீதா.

‘‘மாமா... என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? நீங்க பாட்டுக்கு பரிசமே போட்டுருவீங்க போல. எனக்கு மேலே படிக்கணும். இப்போ அவளுக்கு பாருங்க... அடுத்து ராதாவுக்குப் பாருங்க... அதுக்குப் பிறகு கொஞ்சநாள் கழிச்சு எனக்குப் பார்த்துக்கலாம்’’ என்ற சீதாவிட மிருந்து தண்ணீர் சொம்பை வாங்கி ‘மடக் மடக்’கென குடித்தார் ரத்னவேல்.

பிறகு அவள் முகத்தைப் பார்த்து, ‘‘உன்கிட்டே யோசனை கேட்கலை... யாருக்கு எப்போ எது பண்ணணும்னு பெரியவங்க எங்களுக்குத் தெரியும்... நீ உள்ளே போ!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘சின்னப்புள்ளைங்க எல்லாம் உள்ளே போங்க... நாங்க பேசிக்கறோம்’’ என்று பொதுவாகச் சொன்னார் ரத்னவேல். அப்பா எல்லா பிள்ளைகளையும் அமைதியாகப் பார்க்க, ஒவ்வொருவராக எழுந்து உள்ளே போனார்கள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘சரி... அவங்க ஒண்ணும் வீட்டுக்குப் போனதும் போன் பண்ணப் போறதில்லை! நாம நிதானமாப் பேசி முடிவு செய்வோம்... ஏன் இப்படிப் பறக்கறீங்க?’’ என்றாள் மங்கை. வீட்டுக்காரர் மனதில் என்ன ஓடுகிறது என்பது அவளுக்குப் புரிந்தது. யோசிக்கவிடாமல் அடித்து தன் காரியத்தைச் சாதிப்பதில் அவர் கில்லாடி என்பது அவளுக்குத் தெரியும்.

விஜயா அமைதியாக உட்கார்ந்திருந்தாள். நடந்தது எல்லாம் வேறு யாருக்கோ என்பது போன்ற மனநிலையில் அவள் இருந்தாள். அப்படி இருந்தபோதிலும்கூட, மாப்பிள்ளையின் வார்த்தைகள் அவளை முள்ளாகக் குத்தின. பெண் பார்க்க வந்த இடத்தில் எப்படிக் கூச்சமில்லாமல், ‘தங்கையை வேண்டுமானால் கட்டிக் கொள்கிறேன்’ என்று கேட்க முடிந்தது? அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் ராதாவின் போன் அடிக்க... எடுத்துப் பார்த்த சீதா, போனைக் கொண்டு வந்து விஜயாவிடம் கொடுத்தாள். சுகுமாரின் எண் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு போனை ஆன் பண்ணினாள்.

‘‘சொல்லுங்க சுகுமார்...’’ என்றாள்.

‘‘மேடம்! பதினோரு மணிக்கு வரச் சொல்லியிருந்தீங்க... நாங்க ரெடியாக இருக்கோம். இப்போ வந்தா சரியா இருக்குமான்னு கேட்டுக்கத்தான் கூப்பிட்டேன்...’’ என்றான்.

ஒரு கணம் கண்ணை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்ட விஜயா, ‘‘வாங்க சுகுமார்’’ என்று சொல்லிவிட்டு போனை அணைத்தாள்.

அப்பாவைப் பார்த்தாள். அப்பா அம்மாவைப் பார்த்தார். அம்மா ராதாவைப் பார்த்தாள். விஜயாவிடம் திரும்பி, ‘‘உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? இங்கே என்ன நடந்துகிட்டிருக்கு... இப்போ போய் பொண்ணு பார்க்க வரச் சொல்றே? இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்லு!’’ என்றாள்.
‘‘இல்லைம்மா... பிளான் பண்ணினதை நிறுத்த வேண்டாம். நீ போய் ரெடியாகு...’’ என்று சொல்லிவிட்டு எழுந்தாள் விஜயா. ராதா அவள் பின்னால் போனாள்.

ரத்னவேலிடம் திரும்பிய அப்பா, ‘‘அவங்களும் வந்துட்டுப் போயிடட்டும், என்னன்னு அப்புறம் பேசிக்கலாம்’’ என்றார்.

உள்ளே போக முயன்ற விஜயாவை தோளைப் பிடித்து இழுத்து நிறுத்திய ராதா, ‘‘என்ன... பெரிய தியாகி வேஷம் போடுறியா? ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்த்துட்டுப் போறவங்க ‘பிடிக்கலை’ன்னு சொல்லும்போது எனக்குப் பெரிய வருத்தம் இருக்காது. ஆனா இன்னிக்கு ஒருத்தன், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் இந்தப் பவுடருக்கு பதிலா அந்தப் பவுடரை வாங்கற மாதிரி, புளூ கலர் சட்டைக்கு பதிலா வெள்ளை கலர் சட்டை எடுக்கற மாதிரி, விஜயாவுக்கு பதில் சீதான்னு சொல்றான்...
 அவன் மட்டும் என்னைக் கேட்டிருக்கணும்! வாயிலேயே போட்டிருப்பேன்... நீ என்னடான்னா அடுத்த ஆளை வரச் சொல்றே? அதுவும் எனக்குப் பிடிக்காத ஆளை என்னைப் பார்க்க வரச் சொல்றே...’’ என்றாள்.

நிதானமாக ராதாவின் கைகளை தோளில் இருந்து எடுத்துவிட்டு, ‘‘இதிலே ரெண்டு விஷயம் நீ புரிஞ்சுக்கணும் ராதா! வரப் போறவர் என்னைப் பார்க்க வரலை... ஒரேநாள்ல ரெண்டு பேர் என்னைப் புடிக்கலைனு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கவலைப்படுறதுக்கு! அடுத்த விஷயம், அவருக்கு உன்னை நல்லாத் தெரியும்... அதனால், வேண்டாம்னு சொல்லிட்டுப் போக வாய்ப்பே இல்லை. எல்லாத்துக்கும் மேலே, சங்கடமான ஒரு விஷயம் நடந்திருக்கும்போது அதை மாத்தி கலகலப்பா ஆக்கறதுக்கு உடனடியா ஒரு வாய்ப்பு வருது. இன்னிக்கே இந்த விஷயம் நடந்தா நம்ம வீட்டோட மூடு மாறிடும்...’’ என்றாள் விஜயா.

அம்மாவும் அப்பாவும் கிட்டே வந்தார்கள். ‘‘அவகிட்ட என்ன பேச்சு? போய் ரெடியாகும்மா!’’ என்று ராதாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார் அப்பா.

விஜயா பக்கம் திரும்பிய ராதா, ‘‘நீ சொல்றது எல்லாம் சரிதான்! உனக்காக இந்தப் பெண் பார்க்கும் படலத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனா, இந்த ரிசல்ட்டும் சங்கடமாகத்தான் முடியப் போகுது. முதலில் வந்தவன் உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னான். இப்போ வர்றவனை நான் பிடிக்கலைன்னு சொல்லப் போறேன். இன்னிக்கு காலண்டர்ல உனக்கும் அந்த சுகுமாருக்கும் ஒரே ராசிபலன்’’ என்று சொல்லிவிட்டு உடைமாற்ற உள்ளே போனாள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘எங்களுக்கு சுகுமார் ஒரே பையன்... கல்லுக்கட்டி பக்கத்துல வீடு சொந்தமா இருக்கு. நான் எல்.ஐ.சி. ஏஜென்ட்டா இருக்கேன். பையன் வேலைக்குப் போன பிறகுதான் கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம். உங்க பொண்ணைப் பத்தி பையன் சொன்னான். வாழப் போற அவன் ஆசைதான் முக்கியம். அதனால், சரினு சொல்லிட்டேன்... பொண்ணைப் பார்க்கணும்னுகூட எங்களுக்கு அவசியமில்லை. ஆனா, சம்பிரதாயத்தை மீற வேண்டாமேன்னு வந்தோம். அதோட, உங்க ஸ்வீட் ஸ்டால் மைசூர்பாவுக்கு நான் பெரிய விசிறி!’’ என்று சிரித்தார் சுகுமாரின் அப்பா.

‘‘அடடே! தெரியாமப் போச்சே... இன்னிக்கு நான் லட்டு செய்யச் சொல்லிட்டேன். ஞாயித்துக்கிழமைங்கறதால கடையிலே சரக்கும் இருக்காது... இருந்தால்கூட ஓடிப் போய் எடுத்துட்டு வரச் சொல்லிடுவேன்’’ என்றார் கோபாலகிருஷ்ணன். சூழ்நிலை சட்டென்று கலகலப்பானது.

‘‘ஐயோ! நம்ம கடை பலகாரத்தை ஏதோ ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு ரேஞ்சுக்கு புகழறாங்களே... இவங்க வீட்டுக்கு நான் இல்லை, என் மேல பட்ட காத்துகூட போகக் கூடாது... நான் போய் எனக்கு இதிலே இஷ்டமில்லைன்னு சொல்லிடட்டுமா...’’ என்று உள்ளே இருந்து பல்லைக் கடித்தாள் ராதா.

‘‘இந்தா... அமைதியா இரு! பேசிக்கிட்டுதானே இருக்காங்க. நம்ம கடை பலகாரத்தோட அருமை உனக்கு எங்கே தெரியப் போகுது’’ என்றாள் விஜயா.

‘‘ஆமா... நீயும் நம்ம கடை மசாலா கடலைக்கு விசிறி ஆச்சே!’’ என்று மேலும் எரிச்சலைக் கொட்டினாள் ராதா.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘அவரு யதார்த்தமா பேசற ஆளு... நீங்க தப்பா எடுத்துக்காதீங்க! சொல்லப் போனா அவருக்கு ஷுகர்... எதையுமே சாப்பிடக் கூடாது! ஆனா, வாயைக் கட்ட மாட்டேங்கறார் மனுஷர்’’ என்றார் சுகுமாரின் அம்மா.

‘‘அதனால என்னங்க... நம்ம வீட்லதானே பேசுறாரு! ஷுகர் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்... ஆசைக்குச் சாப்பிட நாளைக்கு அரைக் கிலோ கொடுத்துவிட்டாப் போச்சு! எங்க கடையிலே லட்டும் நல்லாத்தான் இருக்கும். தினம் தினம் போடுற சரக்குங்கறதால் டேஸ்ட் மாறாம இருக்கு... எல்லாருக்கும் இனிப்பு பலகாரம் கொடும்மா...’’ என்றார் அப்பா.

சுகுமார் கொஞ்சம் தவிப்போடு உட்கார்ந்திருந்தான். மங்கை தட்டுகளில் இனிப்பையும் காரத்தையும் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தாள். சுகுமாரின் அம்மா ஒரு தட்டில் கொஞ்சமாக லட்டை உடைத்து வைத்து, அதை சுகுமார் அப்பாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு தட்டை மங்கையிடம் திரும்பக் கொடுத்தாள்.

‘‘இருக்கட்டும்...’’ என்று மங்கை சொல்ல, ‘‘எடுத்துட்டுப் போயிடும்மா... இருந்தா சாப்பிடலாம்னு தோணும்!’’ என்று வலுக்கட்டாயமாகக் கொடுத்து அனுப்பினாள்.

கோபாலகிருஷ்ணன் உள்ளே திரும்பி, ‘‘காபியைக் கொடுத்து விடுங்கம்மா...’’ என்றதும் சுகுமார் கொஞ்சம் அலர்ட் ஆனான். கையில் காபி டம்ளரோடு வந்த ராதா, வரிசையாக எல்லோருக்கும் கொடுத்தாள். சுகுமாரின் அம்மாவும் அப்பாவும் திருப்தியாகச் சிரிக்க, சுகுமார் கொஞ்சம் பதற்றமாக காபியை எடுத்து லேசாகத் தட்டில் சிந்தினான்.

‘‘போய் லெட்டர் போடுறோம்... போன் பண்றோம்னு சொல்ற அளவுக்கான நிலைமையில் எங்க பையன் எங்களை வைக்கலை. இவளுக்கு மூத்த பொண்ணு ஒண்ணு இருக்குன்னு சொன்னான். அதுக்கு முடிச்சதும் தகவல் சொல்லுங்க... நம்ம சம்பந்தத்துக்கு நாள் பார்த்துடலாம்! என்ன சொல்றீங்க?’’ என்றார் சுகுமாரின் அப்பா.

ராதா நிதானமான குரலில், அதே சமயம் சத்தமாக, ‘‘நான் ஒரு விஷயம் சொல்லலாமா..?’’ என்றாள்.
(தொடரும்...)
மெட்டி ஒலி திருமுருகன்