‘‘இந்தியாவின் நலனுக்காக மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குச் செல்ல வேண்டும்’’ என்கிறார் ஒரு அமைச்சர்...
குடிசைப் பகுதி வாழ்வோரை மும்பையில் ஒரு நீதிபதி, ‘நகர்ப்புற பிக்பாக்கெட்டுகள்’ என்றார்...
இரண்டு இளம்பெண் குற்றவாளிகள். அவர்களின் பெயர்கள் ருக்மணி, கமலி அல்லது மெஹருன்னிசா, ஷாபானு என்று இருக்கலாம். ஒரு போக்குவரத்துக் குறுக்குச் சாலையில் நின்ற பளபளப்பான காரின் தோல் இருக்கைகளுக்கும் அணிந்திருந்த கூலிங்கிளாசுக்குமிடையில் அடைபட்டிருந்த பெண்ணை நெருங்கினார்கள். கார்க்காரி அவர்களுக்கு 10 ரூபாயைக் கொடுத்து, ‘பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று போய்விட்டாள். ருக்மணியும் கமலியும் ரோமானிய அடிமை வீரர்களைப் போலச் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
இந்தியா குடியரசான அறுபத்திரண்டாம் ஆண்டு விழாவின்போது, இந்திய ஆயுதப் படைகள் அணி வகுப்பில் தங்கள் ஆயுதங்களைக் காட்சிக்கு வைத்தன. பலமுனை எறிகணை வீசிகள்... போர் விமானங்கள்... லேசான ஹெலிகாப்டர்கள்... வானத்தின் உயரத்தில் ஜெட் விமானங்கள் தங்கள் பளிச்சிடும் பக்கவாட்டில் ருக்மணி-கமலியின் மரணப் போராட்டத்தின் பிரதி பலிப்பை ஏந்திச் சென்றன. ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். குடியரசுத் தலைவர் தமது முந்தானையால் தலையைச் சுற்றி மூடிக்கொண்டு வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்.”
அருந்ததி ராயின் ‘நொறுங்கிய குடியரசு’ நூலைப் படித்தபோது, எனக்குள் கண்ணீர் உடைந்து விழும் சப்தம் கேட்டது. அவர் இணைய தளத்திலிருந்து செய்திகளை இறக்குமதி செய்யும் எழுத்தாளர் அல்ல. களங்களில் கால் வலிக்க நடப்பவர்; அந்தந்த மக்களின் சுக துக்கங்களை அவர்களோடு வாழ்ந்து எழுதுபவர்.
‘நொறுங்கிய குடியரசு’ நூல் வெளியீட்டு நிகழ்வின்போது அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. அதைப் பொறுக்காத யாரோ சிலர் அருந்ததி ராயை தாக்க முற்பட்டார்கள். உண்மையை எழுதினால், பேசினால் யாராவது தாக்குவார்களா? ‘சத்தியத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்; ஆனால், எதற்காகவும் சத்தியத்தை இழந்துவிடக்கூடாது’ என்ற விவேகானந்தர் பிறந்த இந்த தேசத்தை நினைத்து எனக்குச் சிரிப்பு வந்தது.
ஜனநாயக ரீதியாக அரசியல் அமைப்பையும், அரசியல் சட்ட உரிமைகளையும் மக்களுக்கு அர்ப்பணித்த நாள்தான் குடியரசு தினம். ஆனால், ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கள் வாழ்வியல் உரிமைகளை அறிந்து கொள்ள இயலாமல் - அறிந்து வைத்திருந்தாலும் அனுபவிக்க முடியாமல் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒற்றுமையுடனும் பிறருக்காக உழைக்கும் மனத்துடனும் வாழும் விவசாயிகளும் தொழிலாளிகளுமான மக்கள், கிராமங்களில்தான் நிறைந்திருக்கிறார்கள். ராட்சதமான தொழிற்சாலைகளுக்காக, கனிமச் சுரங்கங்களுக்காக, அணைகளுக்காக, அனல் மின் நிலையங்களுக்காக, சுற்றுலா நகரங்களை உருவாக்குவதற்காக அவர்கள் கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்வியல் ஆதாரமான தங்கள் நிலங்களை விட்டு நீங்கிச் செல்லும் மக்கள் எங்கே சென்றார்கள்; என்ன ஆனார்கள் என்றே தெரிவதில்லை. அவர்களுக்குத் தொழில் செய்யும் சூழல் இருக்கிறதா, அவர்களது தொழில்களைத்தான் அவர்கள் செய்கிறார்களா? அல்லது தரையில் தூக்கிப்போட்ட மீன்களாக மூச்சடைத்துப் போகிறார்களா என்பதெல்லாம் யாருக்குமே தெரிவதில்லை. நகரங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. கிராமங்களிலிருந்து நகரத்திற்குள் வந்து பாதையும் தெரியாமல் பயணமும் புரியாமல் பரிதவிக்கும் மக்களின் அழுகுரல்கள் நமது டி.வி, சினிமா சத்தத்தில் வெளியே கேட்பதில்லை. அவர்கள் புல்டோசரில் நசுங்கிய மண்புழுக்களாக, கார் சக்கரங்களில் சிக்கிச் சிதைந்த பச்சைத்தவளைகளாகக் காணாமல் போய்விடுகிறார்கள்.

‘‘வன்முறை தவிர்த்த அடிப்படையில் இயங்கி வந்த சமூக அமைப்பு முந்நாளைய இந்தியக் கிராமக் குடியரசு எனலாம். அது மிகவும் செப்பமுறாதது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய விளக்கத்தையும் கருத்தையும் ஒட்டிய அஹிம்சை அதில் பொதிந்திருக்கவில்லை என்பதை நானறிவேன். ஆனால் உயிரணு அங்கே இருந்தது’’ என்றார் மகாத்மா காந்தி.
நாம் காந்தியின் கண்ணாடியை வைத்திருக்கிறோம்; அவரது பார்வையை மறந்துவிட்டோம். அவரது காலணியை வைத்திருக்கிறோம்; பாதையைத் தொலைத்துவிட்டோம். ‘குடியரசு’ என்றதும் நமக்கு ஆனந்தம் பொங்குகிறது. துணை ராணுவப் படை, அதிரடிப்படை, 25 ஆயிரம் போலீஸ்காரர்கள், 160 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இவற்றின் உச்சகட்ட பாதுகாப்பில், 9 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடி, மற்ற ரயில்களை அரை நாள் நிறுத்திவைத்து நமது குடியரசு தினத்தைக் கொண்டாட வேண்டியிருக்கிறது.
‘வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடி உயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயரும்’
என்று குலோத்துங்க சோழன் முடிசூடியபொழுது ஔவையார் வாழ்த்தினாராம். இந்தியாவில் இப்பொழுது வரப்பு, நீர், நெல், குடி, கோல் எதுவுமே உயரவில்லை; உயர்ந்ததெல்லாம் விலைவாசிதான்.
வட இந்தியாவின் பல கிராமங்களில் அடிப்படையான குடிநீர் வசதிகூட செய்து தரப்படவில்லை. பசியால், நோயால், வறுமையால், பருவகால மாற்றங்களால் மக்கள் மெலிந்து மறைந்து கரைந்துபோய் விடுகிறார்கள். பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் அறியாமையும் வறுமையும் அதிகம். இந்த இரு மாநிலங்களில்தான் நாடாளுமன்றத் தொகுதிகளும் அதிகம்.
வட கிழக்கு மாநிலங்களில் வாழ்வதற்கு இடமில்லாமல் மக்கள் வெளியேறிக் கொண்டி ருக்கிறார்கள். காஷ்மீரில் எல்லைப் பிரச்னைகளும் உள் மாநிலப் பிரச்னைகளும் மக்களின் நிம்மதியைக் குறி பார்த்துச் சுட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரிசா, சட்டீஸ்கரில் அரசால் தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் மாவோயிஸ்ட்களுக்கும் ராணுவப் படைக்குமான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மும்பையில் தொடர் வெடிகுண்டு நிகழ்வுகளும் வசிப்பிடங்களுக்கான நெருக்கடியும் மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. தெலங்கானா பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று தெரியவேயில்லை.
ஈழத்தமிழர்களை லட்சக் கணக்கில் ஒட்டுமொத்தமாகக் கொன்றழித்த பிறகும் இலங்கையோடு இந்திய அரசு நடத்தும் சமரசப் பேச்சு நீண்டுகொண்டே போகிறது. இலங்கை கடற்படையினரால், மீனவர்களால் தாக்கப்படும் தமிழகத்தின் மீனவர்கள் யாரிடம் முறையிடுவதெனத் தெரியாமல் அலைபாய்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, ‘பலமானதா... பலவீனமானதா...’ என்கிற பட்டிமன்றத் தலைப்பாகி ஒரு தாய் பிள்ளைகளை அடித்துக்கொள்ள வைத்திருக்கிறது. கூடங்குளம் அணு உலை வேண்டாமென்று போராடுகிறவர்கள் தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் தங்கள் தொழில் வலையை இங்கே வசதியாக விரித்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் லாபம் கொழிக்கும் கரங்கள் நமது மலைகளை உடைக்கின்றன; காடுகளை அழிக்கின்றன; கிராமங்களை மண்மேடுகளாக்குகின்றன. ஏழைகள் காணாமல் போகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
கோலாகலமான குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு இடையிலும் அங்கும் இங்கும் சில ஓலங்கள் ஓயாமல் ஒலிக்கின்றன.
‘‘நம் நாட்டில் நடைபெறும் இன்றைய ஜனநாயக முறையில் திருத்தப்பாடு ஏற்பட முடியவில்லையானால் நாடு எதிர்காலத்தில் கொலைக்களமாகிவிடும் என்பதில் அய்யமில்லை’’ என்றார் பெரியார்.
காணாமல்போன ஏழைகளும் தற்கொலை செய்து கொண்ட உழவர்களும் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்கள்.
(சலசலக்கும்...)
பழநிபாரதி