திருவள்ளுவர் தந்த திருக்குறளை உலகமே கொண்டாடுகிறது. ஏராள மொழிகள் குறளை தத்தெடுத்துப் போற்றுகின்றன. இரண்டே அடிகளில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நீதிகளையும் நயம்பட படைத்துள்ள வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்து போற்றுகிற தமிழினம், அவர் அருளிய குறளை மட்டும் வெறும் மனப்பாடப் பாடலாகவே மனதில் வைத்திருக்கிறது. அதன் சாரத்தை உள்வாங்கி, குறள்வழி வாழ்வோர் எண்ணிக்கை குறைவு. திண்டுக்கல் மாவட்டம் பழநியை ஒட்டியிருக்கும் பெரிய கலையமுத்தூர் கிராமத்துக்குப் போனால் இந்த எண்ணம் சற்று மாறிவிடுகிறது!
உள்ளடங்கி இருக்கும் ஊரின் முகப்பில், கலை ததும்பும் 23 அடி உயர கோபுரம் கொண்ட கோயில். கருவறையில், தமிழ்த்தாய் சகிதமாக, ஓங்கி உயர்ந்த வள்ளுவர் சிலை. கால் மடக்கி அமர்ந்த நிலையில் ஒரே கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது அச்சிலை!
தெருக்களின் பெயர்களில் தமிழ் மணக்கிறது. நவீனங்கள் மலிந்துவிட்ட இந்தக் காலத்திலும் மலர்க்கொடி, அமுதன், தமிழ்ச்செல்வி, தமிழ்வேள், வேந்தன், வள்ளுவன், இளைய வள்ளுவன், வாசுகி, தேன்மொழி என குழந்தைகளின் பெயர்களில் செந்தமிழ் வாசனை. வீட்டுக்கு வீடு பூஜையறையில் திருவள்ளுவரின் படங்கள். அந்தப் படங்களின் முன் எந்நேரமும் அகல் விளக்கு ஒளிர்கிறது. வேதப்புத்தகம் போல புனிதப்பொருளாக வைத்திருக்கிறார்கள் திருக்குறளை. 1330 குறளையும் சரளமாக சொல்லத் தெரிந்த பிள்ளைகளை வீதிக்கு வீதி பார்க்கலாம். சொல்வது மட்டுமல்ல... குறள் நெறி வழுவாமல் வாழவும் செய்கிறார்கள்.
திருவள்ளுவரையும், திருக்குறளையும் கொண்டாடிப் போற்றும் இவர்கள் யார்?
“எங்களுக்கு ஜோதிடம்தான் குலத்தொழில். நாங்க திருவள்ளுவரோட வழித்தோன்றல்கள். எங்களையும் வள்ளுவ குலம்னுதான் அழைப்பாங்க. இந்த ஊர்ல மட்டும் 220 குடும்பங்கள் இருக்கு. திருவள்ளுவர்தான் எங்க குலசாமி. அவரை மனசுல நினைச்சு சொன்னோம்னா, சொன்ன வாக்கு பலிக்கும். திருக்குறள்தான் எங்க மந்திரம். கோயில்லயும் சரி, வீட்டு விழாக்கள்லயும் சரி... திருக்குறள் ஓதித்தான் வழிபாடுகள் செய்வோம். பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் எல்லாத்துக்கும் குறள்தான்.

நோய், நொடி வந்தாக் கூட டாக்டர் கிட்ட வைத்தியத்துக்குப் போக மாட்டோம். அததுக்குன்னு சில குறள்கள் இருக்கு. அந்தக் குறள்களை ஓதித் தான் விரட்டுவோம். மழை, தண்ணி இல்லாம வறட்சி வந்துட்டா எங்க அய்யனை நினைச்சு, தேன், தினைமாவு படைச்சு திருக்குறள் படிப்போம். வானம் பொத்துக்குட்டு ஊத்தும். அந்த அளவுக்கு சக்தியுள்ளவர் எங்க அய்யன்...’’ என்று குறள் மணக்கப் பேசுகிறார் இச்சமூக அமைப்பின் செயலாளர் கண்ணன்.
குறி சொல்வதுதான் இவர்களது தொழில். கிளி ஜோசியம், கைரேகை பார்க்கிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் பயணிக்கிறார்கள். எங்கு சென்றாலும் தங்கள் இயல்பைத் தொலைக்காமல் வாழ்கிறார்கள்.
‘‘ஆரம்பத்துல மைனாவை வச்சு எங்க முன்னோர் குறி சொல்லியிருக்காங்க. காலப்போக்குல எலி, குரங்கு, பாம்பையெல்லாம் பழக்கி ஜோதிடம் பாத்திருக்காங்க. எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்தில பாம்பு ஜோதிடம்தான். கூடைக்குள்ள இருக்கிற பாம்பை கிளப்பிவிட்டு சீட்டெடுக்க சொல்வாங்களாம். ஏடு எடுக்கிறதோட இல்லாம, குங்குமத்தைத் தொட்டு குறி கேக்க வர்றவங்க நெத்தியில வைக்கவும் பாம்புகளை பழக்கியிருப்பாங்க. இப்போ அதெல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு. கிளிதான். கிளியை குழந்தை மாதிரி கவனமெடுத்து வளப்பாங்க. அதுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்கு தனியா பெரியவங்க இருக்காங்க. இப்போ கிளி ஜோசியத்துக்கு மதிப்பு குறைஞ்சுட்டதால, சில பேர் இந்தத் தொழிலை விட்டு வேறு வேலைகளுக்குப் போகத் தொடங்கிட்டாங்க...’’ என்கிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி.
தை மாதம் 15 அன்று வள்ளுவர் கோயில் திருவிழா. அப்போது பெரிய கலையமுத்தூர் களைகட்டி விடும். தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், இந்த நாளில் தங்கள் கிராமத்துக்கு வந்து விடுகிறார்கள் எல்லோரும். திருவிழா அழைப்பிதழைக்கூட பிறமொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் அடிக்கிறார்கள்.
திருவிழா அன்று முன்னோர் தங்களுக்கு தந்து சென்ற சொத்துகளான பழஞ் சுவடிகளை வைத்து, தேன், தினை, இளநீர், கனி வகைகள் என 48 வகை இயற்கைப் பொருட்களைப் படைய லிட்டு குறள் ஓதி வள்ளுவனை வழிபடுகிறார்கள். குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கலையும் வண்ணமயமாகக் கொண்டாடுகிறது இக்கிராமம். வள்ளுவர் கோயில் முன் நீண்ட அடுப்பு வெட்டிப் பொங்கலிட்டு, வள்ளுவருக்கு படையல் போடுகிறார்கள். கோயில் நெடுகிலும் அமர்ந்து அன்று ஒரு நாளைக்கு இலவசமாக கைரேகை, ஜோதிடம் பார்க்கிறார்கள். தங்களுக்குக் கலை போதித்த வள்ளுவனுக்குச் செய்யும் தொண்டாக அதைப் பார்க்கிறார்கள். ஊர் மந்தை என்றொரு பொது இடம். தினமும் மாலை நேரத்தில் அங்கு குழந்தைகள் கூடி குறள் பாடுகிறார்கள்.
பெரிய கலையமுத்தூர் கிராமத்தின் எல்லா திசைகளிலும் குறள் மணக்கிறது. காற்றினூடே உயிர்ப்புடன் உலவுகிறது வள்ளுவப் பெருந்தகையின் ஆத்மா!
- பா.கணேசன்