சூப்பர்ஸ்டார் பவரில் இயங்கும் வெப்சைட்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                சிம்கார்டே போடாமல் செல்போனில் பேச முடியுமா?

அயர்ன்பாக்ஸே இல்லாமல் இஸ்திரி போட முடியுமா?

பெட்ரோலே இல்லாமல் டூவீலர் ஓட்ட முடியுமா?

எல்லாவற்றுக்கும் ‘முடியாது’ என்பீர்கள்!

இப்படி இன்டர்நெட் இணைப்பே இல்லாமல் வெப்சைட்டை பார்க்க முடியாது! ஆனால், ஒரே ஒரு வெப்சைட்டை மட்டும் அப்படிப் பார்க்க முடியும். காரணம், அது இன்டர்நெட் பவரில் இயங்கவில்லை; ரஜினி பவரில் இயங்குகிறது!

சட்டையில் உரசி சிகரெட் பற்ற வைப்பது, எரிந்துகொண்டிருக்கும் சிகரெட்டை தூக்கிப்போட்டு லாவகமாக உதட்டுக்குக் கொண்டுவருவது, அதிவேகமான சண்டைகள், வசனம் பேசுவதில் புதுமை என திரையில் நம்பமுடியாத விஷயங்களை செய்துகாட்டியவர் ரஜினி. லேட்டஸ்ட்டாக அவரது பவரில் மட்டுமே செயல்படக்கூடிய இன்டர்நெட் இணைப்பு இல்லாத வெப்சைட்டை உருவாக்கி உலக ரசிகர்களை இப்போது கலங்கடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர்.

டிஜிட்டல் ஏஜென்சி ஒன்றின் க்ரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் குர்பாக்ஷ் சிங் என்ற ரஜினி ரசிகர், உலகம் முழுக்க இருக்கும் மக்கள் ரஜினியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு வெப்சைட் வடிவமைத்தார். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே பார்க்கக்கூடிய வெப்சைட் இது என்பதால், ஒரே நாளில் மாத்திரம் இந்த வலைத்தளத்துக்கு விசிட் செய்த ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம். இந்த வலைத்தளத்தின் முகவரியை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ரசிகர்கள் இணைப்பு கொடுத்ததால், கம்ப்யூட்டர் வைரஸைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வெப்சைட். வலைத்தளத்தின் பெயர், ‘ஆல் அபவுட் ரஜினி’ (www.desirnartini.com/allaboutrajini.htm)

க்ளிக் செய்தவுடன் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் கார்ட்டூன் வடிவத்தில் தோன்றும் ரஜினி, தன் கையில் மல்டிபேரல் மெஷின் கன்னுடன் நம்மை வரவேற்கிறார். ‘இவர் சாதாரண மனிதருமல்ல; இந்த வெப்சைட்டும் சாதாரணமானது அல்ல’ என்ற வாசகம் கண்சிமிட்டுகிறது. அதற்குக் கீழே, ‘இந்த தளத்துக்குள் நீங்கள் நுழைய வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு வயர்களைப் பிடுங்கி விடுங்கள்’ என்ற குறிப்பு தென்படுகிறது.

இணைய இணைப்பை துண்டித்தால்தான் மேலே படிக்க முடிகிறது. ‘தி மேன்’, ‘தி ஸ்டார்’, ‘தி லெஜண்ட்’ என்ற மூன்று பிரிவுகளில் ரஜினியைப் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகிறது தளம். முதல் பிரிவில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றையும், இரண்டாவதில் திரைப்பட வரலாற்றின் சுவாரஸ்ய சம்பவங்களையும், மூன்றாவதில் ‘ரஜினியால் மட்டுமே முடியும்’ என்று ரஜினி குறித்த ஜாலியான கலாட்டா ஜோக்குகள், பஞ்ச் டயலாக்குகள் என பலப்பல. சாம்பிளுக்கு சில இங்கே... 

 ரஜினி ஒருமுறை வங்கிக்கு செக் கொடுத்தாராம். கொடுத்ததில் பேங்க்கே பவுன்ஸ் ஆகிவிட்டதாம்!

 ரஜினி தன் விரலைக் காண்பித்தாலே, எதிரில் இருப்பவர் தான் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கப்போறோம் என கணக்குப் போட்டாக வேண்டும்!

 ஒருமுறை அம்மாவிடம் கோபித்துக் கொண்டு சாப்பாட்டுத் தட்டுகளை தூக்கி வீசினாராம் ரஜினி. ‘வேற்று கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டுகள் வருகின்றன’ என்று அதையெல்லாம் பார்த்துத்தான் உலகம் முழுக்க பலரும் சொல்கிறார்கள்.

 நூறு வருஷங்களுக்கு முன்பாக ரஜினி பிறந்திருந்தால், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்காக பிரிட்டிஷார்தான் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.

 ரஜினி கைக்கடிகாரம் அணிவதில்லை. காரணம், நேரத்தைத் தீர்மானிப்பவரே அவர்தானே!

இன்டர்நெட் இணைப்பு துணையுடன் முதல் பக்கத்தை ஓப்பன் செய்ததும்தான் இணைப்பை துண்டிக்கக் கட்டளையிடுகிறது இத்தளம். இணையம் துண்டிக்கப்பட்டதும்தான் மற்ற பக்கங்களைப் பார்க்க முடிகிறது. இது எப்படி என சென்னையைச் சேர்ந்த வலைத்தள வடிவமைப்பு நிபுணரான ரகுநாத்திடம் கேட்டோம்.

‘‘இந்த வலைத்தளம் அடோப் ஃப்ளாஷ் மென்பொருள் அடிப்படையில் இயங்குகிறது. இன்டர்நெட் துணையுடன் முதல் பக்கத்தை ஓப்பன் செய்ததுமே அந்த வலைத் தளத்திலுள்ள எல்லா பக்கங்களையும் இந்த மென்பொருள் நமது கம்ப்யூட்டருக்கு லோட் செய்துவிடும். பொதுவாக நாம் எந்த வலைத்தள பக்கத்தைப் பார்த்தாலுமே, பார்க்கப்பட்ட பக்கங்கள் நமது கம்ப்யூட்டர் மெமரியில் சில காலம் பதிந்திருக்கும். அதேபோலத்தான் இதுவும்.

 ஆனால், முதல் பக்கத்தைப் பார்த்ததுமே இன்டர் நெட் இணைப்பைத் துண்டித்தபிறகு மற்ற பக்கங்களை பார்க்கக்கூடிய வகையில் ரஜினி வலைத்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்டர்நெட் இணைப்பே இல்லாமல் பார்க்கக்கூடிய வெப்சைட் என்றால் முதல் பக்கமே ஓப்பன் ஆகாதே! இந்த வெப்சைட்டை மேஜிக் என்று சொல்வதைவிட, ரஜினியைப் போல் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்லலாம்’’ என்றார்.

ரஜினியின் வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் போலவே இந்த வெப்சைட்டும் நம்பமுடியாத - ரசித்து மகிழக் கூடியதாக இருப்பதால் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு ஜிலேபிதான்!
- டி.ரஞ்சித்