நல்லி குப்புசாமி செட்டியார் ‘‘எண்-2, செட்டி தெரு, சின்ன காஞ்சிபுரம் என்கிற முகவரியிலிருந்து எங்கள் முன்னேற்றம் தொடங்குகிறது. நெசவுத் தொழில் செய்து வந்த தாத்தா சின்னசாமி, பிள்ளைகளுக்குப் படிப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை மாற்றினார். அதிலிருந்து எங்களின் வாழ்க்கை மாறியது. இன்று உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி இருக்கும் ‘நல்லி சில்க்ஸ்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவும், அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையும்தான் முக்கிய காரணம்.
நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதால்தான், ஐந்து தலைமுறைகளுக்குமேல் எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான உறவு தொடர்கிறது, வளர்கிறது. இந்தியாவின் பட்டு பாரம்பரியத்தை ஆராய்ச்சி செய்தால், நூற்றாண்டு நோக்கி வெற்றி நடை போடுகிற நல்லி சில்க்ஸ் அதில் முக்கியமான இடம் பெறும்!’’
- வார்த்தைகளால் வரலாறு நெய்கிறார் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார். முன்னோர் தந்த வர்த்தக அறிமுகத்தை, இன்று தென்னிந்தியாவின் அடையாளமாக மாற்றிக் காட்டியது அவரது சாதனை. பாரம்பரியத்தின் பெருமையை ரசித்துப் பேசுகிறார் குப்புசாமி.
‘‘காஞ்சிபுரத்துக்குப் போயிட்டா காலாட்டிக்கிட்டே பொழைச்சிக்கலாம் என்பது பழமொழி. கால் வலிக்க தறி ஓட்டி பிழைக்கிற ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில், அவர்களில் ஒருவராக இருந்தார் சின்னசாமி தாத்தா. கிருஷ்ண தேவராயர் காலத்தில் எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரம் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக நெசவு தான் தொழில். ஏதோ ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதால், ஜவுளித் தொழிலுக்கு வரவில்லை. சிற்பி சிலை செய்வது போல, ஓவியன் வரைவது போல, நெசவுத்தொழிலும் கலையின் அடையாளம். அதுவும் ஒருத்தர் மட்டும் செய்வது சாத்தியமில்லை. கணவன், மனைவி, குழந்தைகள், முதியவர்கள் என குடும்பமே சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
பௌத்தர்கள், சமணர்கள், சைவர்கள், வைணவர்கள் என எல்லா சமயத்தவரும் அதிகாரம் செலுத்திய காஞ்சிபுரம், தமிழக வரலாற்றில் முக்கியமான அதிகார, ஆன்மிக மையம். தொண்டை நாட்டின் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்தில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருக்கும் பகுதி பெரிய காஞ்சி. சிவ காஞ்சி என்றும் அழைப்பார்கள். வரதராஜ பெருமாள் கோயில் இருக்கிற பகுதி சின்ன காஞ்சி. அதை விஷ்ணு காஞ்சி என்றும் அழைப்பார்கள். சின்ன காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் ஒட்டுமொத்தமாகக் குடியிருப்பார்கள். அந்தப் பகுதியில் தாத்தா வீடு இருந்தது. ‘நேர்த்தியான நெசவும், நேரத்திற்குத் தருகிற உழைப்பும்’ அவரை ஊரில் பிரபலமாக்கியது. ஊரில் உள்ள 6 ஆயிரம் தறிகளை மூன்றே குடும்பத்தினர் வைத்திருந்த அந்தக் காலத்தில் தாத்தா சொந்தமாக தறி ஓட்டினார். புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவது, சவாலான டிசைன்களை உருவாக்குவது போன்ற தனித்
துவமான குணங்கள் அவருக்கென்று தனி வாடிக்கையாளர்களை உருவாக்கியது.
எட்டு வயதுக்குப் பிறகு பிள்ளைகள் படிக்கிற வாய்ப்பு நெசவாளர் குடும்பங்களில் பெரும்பாலும் இருக்காது. நெசவு வேலைக்குப் பழக்கமாகிவிடுவார்கள். தாத்தாவுக்கு தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க விருப்பம். அதனால் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகில், படித்தவர்கள் அதிகம் இருக்கிற செட்டித் தெருவுக்கு 1911ம் ஆண்டு குடி பெயர்ந்தார். பிராமணர்கள் பகுதி என்பதால், விரும்பிச் சாப்பிட்ட அசைவத்தை விட்டு சைவமாக மாறியது குடும்பம். பெரிய காஞ்சிபுரத்தையும் சின்ன காஞ்சிபுரத்தையும் இணைக்கிற முக்கிய சாலைக்கு இடம் மாறியது முதல் திருப்புமுனையானது.

கோயிலுக்கு வருபவர்கள், தங்கள் வீட்டு விசேஷங்களுக் கான ஆர்டரை தந்துவிட்டுப் போனால், துணியை நெய்து முடித்து நேராக சென்னைக்கே டெலி வரி தந்துவிடுவார். நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப டிசைன்களை நெய்து தந்ததால் சின்னசாமி தறிக்கு தனி மரியாதை இருந்தது. 1911ம் ஆண்டு, அன்றைய இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் வைஸ்ராயின் தர்பாருக்கு என் தாத்தா நெய்து கொடுத்த பட்டு, ‘தர்பார் பார்டர்’ என்ற தனிப்பெயரை உருவாக்கி பெரிய பாராட்டைப் பெற்றதாகச் சொல்வார்கள்.
தாத்தாவின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சென்னை மயிலாப்பூரில்தான் வசித்தனர். படித்த, பணக்காரர்கள் அதிகம் இருந்த பகுதி அது. காஞ்சிபுரத்து கோயில்களுக்கு இவர்கள் பலர் வந்து போவது வழக்கம். கோயிலுக்கு வருபவர்கள் அப்படியே பட்டு வாங்கும் பழக்கம் இருந்தது. ஒருமுறை தாத்தா நெய்து வைத்திருந்த ஒரு திருமணச் சேலை இன்னொரு வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப் புடவை வேண்டும் என்று கேட்க, வேறொருவரின் ஆர்டர் எனத் தயங்கினார். முகூர்த்த புடவையாக அதுதான் வேண்டும் என்று மறுக்கமுடியாதபடி வலியுறுத்தினர்.
இன்னொருவருக்கு நெய்த சேலையைத் தரமுடியாது என்று சொன்னவர், நான்கு நாட்களில் நெய்து தரவேண்டிய முகூர்த்தப் புடவையை, 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்து நெய்து தந்தார். பழைய வாடிக்கையாளரையும் விட்டுவிடாமல், புதிய வாடிக்கையாளரையும் ஈர்க்கிற தாத்தாவின் உழைப்பையும் ஆளுமையையும் பலர் நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் 2 ஆயிரம் தறி வைத்திருந்த கந்தசாமி ஷா என்கிற முதலாளியிடம், ‘கெமிக்கல் டை’ மூலம் சாயம் போடும் நவீன முறை பற்றி விளக்க சுவிட்சர்லாந்து நிறுவனம் வந்தது. ‘புது முயற்சி என்றால் சின்னசாமியிடம் போய் விளக்குங்கள். அவர்தான் பொருத்தமானவர்’ என்று அனுப்பி வைக்கிற அளவு ஊரில் தாத்தாவின் மேல் மதிப்பு இருந்தது.
ரயில் பாதைதான் அப்போது பட்டணத்திற்கு முக்கியமான போக்குவரத்து. பாரிமுனை வரை செல்லும் ரயில், மாம்பலத்தில் மட்டும்தான் நிற்கும். அந்தப் பக்கம் மாம்பலம், இந்தப்பக்கம் தி.நகர் என இருந்தது இந்த ரயில் நிறுத்தத்தின் சிறப்பு. தாத்தா தி.நகரில் இறங்கி, நடந்து மயிலாப்பூர் போய் டெலிவரி கொடுத்துவிட்டு வருவார். நாளடைவில் நிறைய ஆர்டர்கள் வந்ததால், அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியதானது. அதனால், நெசவு வேலை தடைப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கும் காஞ்சிபுரம் வந்து ஆர்டர் தருவது சிரமமாக இருந்தது.
‘சென்னையில் ஒரு கடை போடலாமே சின்னசாமி’ என்று ஒருவர் முதல் பொறியைத் தந்துவிட்டுப் போனார். பயணத்திலேயே நிறைய நேரம் வீணானதை உணர்ந்த தாத்தாவும், மகளின் கணவரைப் பொறுப்பாக நியமித்து சென்னையில் கடை திறந்தார். தி.நகரில் ஜவுளித் துறையில் முதன்முதலாக கிளை திறந்த பெருமை நல்லி சில்க்ஸுக்குத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். ரயில் நிலையம் அருகில் ஒரு கடையும், குடோனும் வைத்துக்கொள்ள எடுத்த முடிவு, நூற்றாண்டை நெருங்கும் நல்லி சாம்ராஜ்யத்திற்கு முக்கியமான திருப்புமுனையானது.
சென்னைக்கு வருவது அந்தக் காலத்தில் நெசவாளர்களுக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம். மக்களின் மானம் மறைக்கிற உடையை நெய்கிற நெசவாளர்களுக்குத் தங்கள் தொழில் பற்றிய கௌரவம் அதிகம் இருக்கும். அதனால் இன்னொருவர் இடத்திற்குப்போய் தறி ஓட்ட மாட்டார்கள். கூலி குறைவாக வந்தாலும், இருக்கிற இடத்திலிருந்தே வேலை செய்வார்கள். அந்த இலக்கணத்தை உடைத்தார் தாத்தா. என்னுடைய அப்பா நாராயண சாமியை அந்தக்காலத்திலேயே மும்பைக்கு அனுப்பி வேலை பழக்கினார். முழுக்க பெண்களே நிர்வாகம் செய்த ‘ஜானகி வேர் ஹவுஸ்’ என்கிற கடையில் வேலை பார்த்தபோது, மும்பை வணிகர்களின் வியாபார நுணுக்கங்களைக் கற்றார் அப்பா. ஜவுளித் தொழிலில் ‘நல்லி சில்க்ஸ்’ அடுத்த அடி எடுத்து வைக்க அப்பாவின் மும்பை வாழ்க்கை உதவியது.

இன்று இந்தியாவின் முக்கியமான வர்த்தகப் பகுதியாக விளங்கும் தி. நகர், அன்று பெரிய ஏரி இருந்த, நரிகள் உலாவிய பகுதி. பாண்டி பஜார் பகுதிதான் மக்கள் வந்து போகும் பஜார் வீதி. அங்கங்கே ஒன்றிரண்டு வீடுகள்தான் இருக்கும். திருமணத்திற்கு வேண்டிய தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், விருந்துக்கு வேண்டிய மளிகைப் பொருட்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் கிடைக்கும். எங்கள் கடைக்கு அருகில் இருந்த டி.பி. ஜெயின் ஜுவல்லரியின் முதலாளி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார். எல்லா பொருளும் ஒரே இடத்தில் கிடைக்கிற ‘ஷாப்பிங் மால்’ உத்தியை அன்றே தி.நகரில் அறிமுகப்படுத்தினார்.
அதில் ஜவுளி விற்பனைக்கான இடத்தை ஒதுக்கி, எங்களை அங்கு கடை போடச் சொன்னார். பனகல் பார்க் எதிரில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாறினோம். பட்டு மட்டுமின்றி, மற்ற துணிகளும் விற்பனை செய்யத் தொடங்கினோம். தாத்தா காஞ்சிபுரத்தில் செட்டில் ஆகிவிட, மும்பையிலிருந்து திரும்பிய அப்பா கடையின் பொறுப்பு களை ஏற்றுக்கொண்டார்.
புதிய யுக்திகளுடன் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்த நேரம்... 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் சென்னையில் குண்டு வீசப் போவதாக பரபரப்பு கிளம்பியது. ஒட்டுமொத்த சென்னையையும் காலி செய்யு மாறு அறிவுறுத்தினர்.. இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்து என்ற நிலை...
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்
த.செ.ஞானவேல்