சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ‘கோச்சடையான்’ வேலைகள் பரபரப்பாக ஆரம்பமாகிவிட்டது. ரசிகர்களின் ராஜ எதிர்பார்ப்புடன் தொடங்கிய ‘ராணா’ எதிர்பாராமல் பயணத்தைத் தள்ளி வைக்க நேர, அதற்கு முன்பாக வரும் படமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கோச்சடையானி’ன் வேலைகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈராஸ் என்டர்டெயின்மென்ட், மீடியா ஒன் குளோபல் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்தில் சௌந்தர்யா ரஜினியே இயக்குநராகி இருப்பது சுவாரஸ்யம்.

ஏற்கனவே ஆக்கர் ஸ்டூடியோவில் ‘சுல்தான் தி வாரியர்’ பட அனிமேஷன் வேலைகளில் ஒரு இயக்குநராகவே செயல் பட்டிருக்கும் சௌந்தர்யா வுக்கு களப்பணியாக அமைந்த படம் ஷாரூக் கானின் ‘ரா ஒன்’ என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும். ஆனால் அதுதான் உண்மை. ‘ரா ஒன்’னில் ரஜினி தோன்றும் காட்சிகளை மோஷன் கேப்சரிங் உத்தியில் இயக்கித் தந்தவர் சௌந்தர்யாவேதான். படத்துக்கு ஸ்கிரிப்ட்டை எழுதியிருப்பதுடன், இயக்கத்தை மேற்பார்வை செய்யவிருப்பவர் கே.எஸ்.ரவிகுமார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி.
படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளியே தெரியாமல் வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டேயிருந்தன. இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் கோச்சடையானுக்காக இசைத்த பாடல் ஒன்று கடந்த 17ம் தேதி மும்பையில் பதிவு செய்யப்பட்டது. இசைப்புயல் இசை அமைத்ததே பிரமாண்டம் என்கிற நிலையில், இந்தப் பாடலுக்காக மட்டும் 120 இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி இசைத்து ஒரு சிம்பனியையே மீட்டியிருக்கிறார்கள். இந்தப் பாடல்தான் முதலில் படமாகும் எனத் தெரிகிறது.
‘ராணா’ வுக்கு தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல், அதன் ப்ரீகுவலான ‘கோச்சடையானு’க்கு நாயகி தேடும் படலமும் நடந்து, கடைசியில் கத்ரீனா கைஃப் முடிவாகியிருக்கிறார். சூப்பர்ஸ்டாருடன் நடிக்க அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்ட நிலையில், அவரது தேதிகளைக் கேட்டு அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார்கள். அதுவும் ஒத்துவரும் பட்சத்தில் ‘கோச்சடையான்’ நாயகி, மிஸ். கத்ரீனாவாகத்தான் இருப்பார் என்று உறுதிசெய்து கொள்ளலாம்.
ஏற்கனவே படத்தில் ரஜினியின் தங்கையாக நடிப்பதாக நம்பப்பட்ட சினேகா இப்போது இதில் இல்லை. ஆனால் ரஜினியுடன் நடிக்க சரத்குமார் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார். ‘சிவா’ படத்துக்குப் பிறகு ஷோபனாவும் ரஜினியுடன் இதில் நடிக்கவிருக்கிறார். உறுதி செய்யப்பட்டிருக்கும் இன்னொரு நடிகர் நாசர்.
ஜி