‘அஞ்சாதே’, ‘கோ’ படங்களில் போட்டுக்கொண்ட வில்லன் மேக்கப்பைக் கலைத்து ஹீரோ அவதாரம் எடுக்கிறார் அஜ்மல். அதற்குக் களம் தந்திருக்கும் படம் சிருஷ்டி சினிமாஸின் ‘வெற்றிச் செல்வன்’. விளம்பர உலகிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் வரிசையில் சினிமாவில் காலடி பதிக்கும் படத்தின் இயக்குநர் ருத்ரன், விக்ரம் கே.குமாரின் ‘யாவரும் நலம்’ படத்தின் இணை இயக்குநரும் கூட. பேசினார் ருத்ரன்...
‘‘எல்லா இளைஞர்களுக்கும் அங்கீகாரம் தேவைப்படும் காலகட்டம் ஒண்ணு வரும். இதில அப்படி தங்கள் திறமைக்கான வாழ்க்கையைத் தேடும் மூணு இளைஞர்களைப் பற்றிச் சொல்றேன். அதை அவங்க எப்படி அடையறாங்கன்னு சொல்றதோட, நம்மைக் கடந்து போற வழியிலேயே அதை எப்படித் தவற விட்டுக்கிட்டிருக்கோம்னு இளைஞர்களுக்கான செய்தியாவும் சொல்றேன்.
இதுல அஜ்மலோட, ‘சிங்காரவேலனு’க்குப் பிறகு பாடகர் மனோ நடிச்சிருக்கார். தவிர ஷெரீப்னு புது இளைஞரையும் இதுல அறிமுகப்படுத்தறேன். இவங்களோட பிரபல இந்தி நடிகரும், மாடலுமான தினேஷ் லம்பா நடிக்கிறார். ‘உற்சாகம்’ படம் மூலமா ஏற்கனவே அவர் தமிழுக்கு அறிமுகமாகிட்டாலும், அவரோட அற்புதமான நடிப்பு இந்தப்படத்துல பேசப்படும்.
கஞ்சா கருப்பும் நடிச்சிருக்க படத்துல, ஹீரோயின் ராதிகா ஆப்டேவை பிடிச்சது தனிக்கதை.

ஹீரோயி னுக்கான தேடல்ல இருந்தப்ப ராம் கோபால் வர்மா வோட ‘ரத்த சரித்திரம்’ பார்த்தேன். அதுல விவேக் ஓபராய் ஜோடியா நடிச்சிருந்த நடிகை யோட கண்கள், பார்த்ததும் கொக்கி போட்டுத் தூக்கறது போல அத்தனை ஷார்ப்பா இருந்தது. விசாரிச்சப்ப அவங்க ராதிகா ஆப்டேங்கிறதும், அவங்க ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட்னும் தெரிய வந்தது. நல்ல ஸ்கிரிப்ட்டுகள்ல மட்டுமே நடிக்க ஆர்வமிருக்க ராதிகாவுக்கு ஸ்கிரிப்ட் சொல்ல அவங்க ஊரான புனே போனேன்.
வழக்கமா டைரக்டர் கதை சொல்ல வரும்போது சின்னதா மேக்கப் போட்டுக்கிட்டு காத்திருக்க நடிகைகள் மத்தியில, வீட்ல இயல்பா சமையலுக்கு கேரட் அரிஞ்ச கையோட வந்து கதவைத் திறந்து வரவேற்றாங்க ராதிகா. நறுக்கி வச்ச கேரட் காத்திருக்க, என்னோட ஸ்கிரிப்ட்டைப் பொறுமையா தெள்ளத் தெளிவா கேட்டு நடிக்க ஒத்துக்கிட்டு, அனுராக் காஷ்யப்போட ‘கேங்ஸ் ஆப் வசேப்பூரு’க்கு இடையில எனக்கும் தேதிகள் ஒதுக்கி நடிச்சுக் கொடுத்தது இந்தப் புராஜக்டுக்குப் பெருமையான விஷயம்.
அதேபோல நல்ல படங்களுக்கு மட்டுமே வேலை பார்க்கணும்னு பிடிவாதமுள்ள ‘தேசிய விருது’ எடிட்டர் கிஷோரையும் என் ஸ்கிரிப்ட்தான் ஒத்துக்க வச்சது. மணிசர்மாவோட இசைல கார்க்கி பாடல்களை இளமை ததும்ப எழுதியிருக்கார். ‘ஊமை விழிகள்’ல ஊர் விழிகளையெல்லாம் விரிய வச்ச ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார் இன்றைய சினிமாவுக்கு வேண்டிய அப்டேஷன்களோட மீண்டும் இதுல கேமராவை கையாண்டிருக்கார். அதுவும் படத்துக்கு பலமா இருக்கும்.
தேடறது திறமைக்கேத்த வாழ்க்கை ன்னாலும், அதுக்கு இடையில காதலுக்கும் இடம் ஒதுக்கித் தானே ஆகணும். அஜ்மல்கிட்ட ராதிகா ஆப்டே காதலைச் சொல்ற காட்சியை மூணார்ல எடுத்தோம். ‘‘என்னைப் பெற்றவங்களுக்கு 25 வருஷமா நல்ல மகளா வாழ்ந்தேன். இனி வர்ற காலத்துக்கு உனக்கு நல்ல மனைவியா இருப்பேன். என் காதலை ஏத்துப்பியா..?’’ன்னு ராதிகா உருகிக் கேட்டப்ப, கூடியிருந்த கேரள மக்களும் தற்காலிகமா முல்லைப்பெரியாறு பிரச்னையை மறந்து நெகிழ்ந்து போய்க் கைதட்டினாங்க..!’’
ஆரோக்கியமான காதல் அணையும், உடைக்கத் தேவையில்லாத உறுதி கொண்டதுதானே..!
- வேணுஜி