கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை ஆளும் அத்தனை முன்னணிக் கலைஞர்களும் கலந்துகொள்ள, களைகட்டியது அந்தத் திருமணமும், அதைத் தொடர்ந்த வரவேற்பும். கடந்த 45 வருடங்களாக தியேட்டர் தொழிலில் இருந்து வரும் ‘ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம்’ மகன் சதீஷுக்கும், வாசு ஸ்டூடியோஸ் நிறுவனர் வாசு மேனனின் பேத்தியான அஞ்சலிக்கும் கடந்த வாரம் நடந்த திருமண நிகழ்ச்சிதான் அது.
சூப்பர்ஸ்டார் தொடங்கி கமல், விஜய், விக்ரம், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, சரத்குமார், பரத், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வந்திருந்து வாழ்த்த, இயக்குநர்களில் கே.பாலசந்தர் தொடங்கி ஷங்கர், பி.வாசு, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சேரன், எஸ்.பி.ஜனநாதன், சுந்தர்.சி உள்ளிட்டவர்களுடன், வாராது வந்து சிலிர்க்க வைத்தார் இசைஞானி இளையராஜா.
காலையில் திருமணத்துக்கு வந்த ரஜினி, ராகவேந்திரர் படம் வழங்கி ஆசீர்வதித்ததுடன், ‘‘ஈவினிங் அம்மா வருவாங்க...’’ என்றதுபோலவே மாலை வரவேற்புக்கு வந்துசேர்ந்தார் லதா ரஜினிகாந்த். வரவேற்பில் கலந்துகொண்ட கமலிடம் கல்யாணம் நன்றி தெரிவித்தபோது, ‘‘நன்றி எல்லாம் எதுக்கு, இது நம்ம வீட்டுக் கல்யாணம்...’’ என்று நெகிழ வைத்தார் கலைஞானி. தம்பதியாக வந்த விஜய், எப்போதும் பார்த்திராத கோட், சூட்டில் கல்யாணத்தைப் பார்த்ததும், ‘‘சூட் சூப்பர்ண்ணா..!’’ என்று கலாய்த்தார்.
- ஜி