சூரிய ஒளியின் உதவியால் செடி, கொடிகள் வளர்கின்றன. மேகங்கள் சேர்ந்து மழை பொழியச் செய்கிறது. அதுபோல இரு ஜீவன்கள் இணைந்து குழந்தை பிறக்கிறது. இந்த இணைதலே இயற்கையின் தூண்டலில் நிகழும் அழகிய அற்புதம். ஆண் - பெண் பரஸ்பர ஈர்ப்புக்குப் பின்னால் அறிவியல் காரணங்கள் உண்டு. அதே சமயம் உயிர் உருவாவதற்கு இந்த ஈர்ப்பும் வசீகரமும் அடிப்படையான விஷயங்கள். இதையும் விஞ்ஞான காரணங்கள் கூறி விளக்கலாம்.
ஆனால் அதையும் தாண்டி இயற்கைப் பந்துகளான கிரகங்கள் செயல் புரிகின்றன. கிரகங்களின் கதிர்வீச்சு கண்ணுக்கு எளிதில் புலப்படாத, கருவிகளாலும் கணக்கிடமுடியாத வீரிய சக்தியாகும். காந்த அலைகள் பரப்பும் நிலா காய்ந்தால் மனிதர்களுக்குள் மோகம் பிறக்கிறது. மெல்லிய இருளில் ஈர்ப்பு உருவாகிறது. சுக்கிரனின் வீச்சு அதிகமானால் தோற்றத்தில் பொலிவு கூடுகிறது. கிரகங்கள் எப்படியெல்லாம் நம்மை ஆக்கிரமிக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் இப்படி நிறைய சொல்லலாம்.
நட்சத்திர ரீதியாக, அதன் உள்பிரிவான பாதவாரியாக, பாதங்கள் நடத்திச் செல்லும் தசா புத்திகள் என்கிற துல்லிய கணக்குகள் வாயிலாக குழந்தை பாக்கியம் பற்றியும், சிலருக்கு ஏன் தாமதமாகிறது என்பது பற்றியும் கூற முடியும்.
முதலில் மேஷ ராசிக்காரர்களின் குழந்தை பாக்கியத்தைப் பற்றிப் பார்ப்போம்...
பூமிக்கும், ரத்த பந்தத்திற்கும் உரிய கிரகமான செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். வீடு, மனை, சொத்துக்கு செய்வதைவிட குழந்தைகளுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். ‘‘எதிர்பார்த்த ஏரியாவுல நல்ல வீடு விலைக்கு வந்திருக்கு... வாங்கிடலாமா’’ என்று மனைவி கேட்டால், ‘‘கொஞ்சம் பொறு! பையன் பிளஸ் 2 படிச்சிட்டு இருக்கான். நம்ம குறிக்கோளே அவன டாக்டர் ஆக்கறதுதான். திடீர்னு இரண்டு, மூணு மார்க் குறைஞ்சா பேமென்ட் சீட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கும்’’ என்று வாயைக் கட்டுவீர்கள்.
உங்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவதும், பூர்வ புண்யஸ்தானமுமான 5ம் இடத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். அதாவது சிம்மச் சூரியனே உங்களின் குழந்தை பாக்கியத்தையும் தீர்மானிக்கிறார். எனவே உங்கள் சொந்த ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் ராசிநாதனுக்கு சூரியன் அதிநட்பாக இருப்பதால், பொதுவாக குழந்தை பாக்கியம் சீக்கிரமே கிடைக்கும். ஆண் வாரிசு அதிகமாக இருக்கும். குருவின் பார்வையோ, சேர்க்கையோ சூரியனுக்குக் கிடைத்து விட்டால், உங்கள் பிள்ளையால் புகழ் பெறுவீர்கள். இன்னாரின் தந்தை என்று உங்களை சுட்டிக் காட்டிப் பேசுவார்கள்.
‘‘கல்யாணமே கடன் வாங்கித்தான் நடந்தது, சொல்லிக்கிற மாதிரி கூட்டமும் இல்ல, வாடகை வீட்லதான் குடியேறினாங்க. ஆனா பையன் பிறந்தபிறகு மளமளன்னு வளர்ந்துட்டாரு. சொந்த வீடு, காரு, பதவி, புகழ்னு அவரு ரேஞ்சு எங்கேயோ போயிடுச்சு’’ என்று பலரும் வியக்கும்படி, குழந்தை பிறந்தவுடன் வசதி, வாய்ப்புகள் பெருகுவதுண்டு. புத்திரகாரகன் குரு உங்களுக்கு பாக்கியாதிபதியாக வருவதால், உங்களை விட உங்கள் பிள்ளைகள் அதீத புத்திசாலிகளாகவும், அதிர்ஷ்டவான்களாகவும் இருப்பார்கள். சூரியன் உங்களுக்குக் குழந்தை ஸ்தானத்திற்குரியவராக வருவதால், உங்கள் பிள்ளைகள் அதிகார பதவியில் அமர்பவர்களாகவும், தனியார் நிறுவனம் என்றால் அதில் தலைமைப் பதவி வகிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.

‘மேஷ ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் சூரியன் வலிமையாக இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, நான் என்ன செய்ய வேண்டும்?’
இது உங்கள் கேள்வியாக இருந்தால், சூரியனை பலப்படுத்த அதன் தானியமான கோதுமையிலான பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுங்கள். கோதுமை தானம் செய்யுங்கள். தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். உங்கள் தந்தை மற்றும் முன்னோர்களின் மனம்கோணாமல் நடந்து கொள்ளுங்கள். அரசங்கன்றை சாலையோரம் நட்டுப் பராமரியுங்கள். உயிரியல் பூங்காவில் சிங்கம் அல்லது சிறுத்தையை பராமரிக்க ஆகும் செலவில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று யோசியுங்கள். சூரியன் கண் பார்வைக்கு அதிபதியாக வருகிறார். விபத்தால் பார்வையிழந்தவர்களின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்களேன். முடிந்தால் கண் தானம் செய்வதாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. எனவே உங்கள் ஜாதகத்தில் சூரியன், குருவுடன் சனி சேர்ந்திருந்தாலோ, சனியின் நட்சத்திரத்தில் சூரியன், குரு அமர்ந்திருந்தாலோ குழந்தை பாக்கியம் தடைபடும். அடிக்கடி கர்ப்பச் சிதைவும் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காமல் போகக்கூடும். சிலரது பிள்ளைகள் விடுதியிலேயே தங்கிப் படிக்க நேரிடும். ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 5ம் இடத்தில் சனி இல்லாத வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டு.
அசுவனி நட்சத்திரக்காரர்கள் 24 முதல் 29 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் உடனே குழந்தை உண்டு. ஏனெனில் ஏறக்குறைய 30க்கு மேல் சந்திர தசை வருவதால் சற்றே தாமதமாகக்கூடும். அதன்பின் 40லிருந்து செவ்வாய் தசை வரும்போது இன்னொரு குழந்தைக்கான வாய்ப்பும் உண்டு.
பரணி நட்சத்திரக்காரர்கள் 25 முதல் 34 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்குமேல் ராகு தசை வருவதால் மகப்பேறு தடைபடும். அல்லது குறைப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும். சிலருக்கு மருத்துவ உதவியுடன் செயற்கை கருத் தரிப்பு முறை மூலம் பெற்றுக் கொள்ள வேண்டி வரும்.
கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 22 வயது முதல் ராகு தசை வருவதால் சற்றே தாமதமாக குழந்தை வாய்க்கும். பலருக்கு 30 முதல் 37 வயதுக்குள் குழந்தை வாய்க்கும். ஜாதகம் பார்த்து ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களின் தசை நடைமுறையில் இல்லாத வாழ்க்கைத்துணையுடன் மணம் முடித்தால் உடனடி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மேஷ ராசிக் காரர்களுக்கு சூரியனே பூர்வ புண்யாதிபதியாக வந்து குழந்தை பாக்கியத்தை அருள்கிறார். ஆனால், அந்த சூரியனே பலமிழந்தபோது திருமீயச்சூர் லலிதாம்பிகை யை வணங்கி முழு பலம் பெற்றார். சூரியன் பலம் பெற்ற தலத்தில், சூரியனுக்கு பேரருளை அளித்த தேவி லலிதாம்பிகையை கண் குளிர தரிசித்து வாருங்கள். குழந்தை வரத்தை தட்டாது தருவாள். இத்தலத்திற்கு மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற இடங்களிலிருந்து செல்லலாம்.
அடுத்தது ரிஷபம்...‘‘ஒரு ஹோட்டல்ல பரோட்டா சாப்பிட்டேன். ரொம்ப சாப்ஃட்டா வாயில போட்ட உடனே கரைஞ்சுது. பொண்ணு பரோட்டான்னா விரும்பிச் சாப்பிடுவாளேன்னு ஒரு செட் பார்சல் வாங்கிட்டு வந்துட்டேன்’’ என எதையும் பிள்ளைகளுக்கும் கொண்டு வந்து கொடுக்கும் பாசக்காரர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரனாக வருவதால், பிள்ளைகளை படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலோ, வாய்ப்பாட்டிலோ, நாட்டியத்திலோ பிரபலமாக்குவதில் ஆசைப்படுவீர்கள். பிள்ளைகளின் சுதந்திரத்தில் அவ்வளவாக தலையிட மாட்டீர்கள். கடன் வாங்கியாவது, யார் காலைப் பிடித்தாவது புகழ்பெற்ற பள்ளியில் சேர்ப்பீர்கள். நண்பனைப் போல பிள்ளைகளை நடத்துவீர்கள்.
உங்கள் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியாக புதன் வருவதால், அறிவு, அந்தஸ்துள்ள குழந்தை பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். புதன் உங்கள் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால், செஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் உங்கள் பிள்ளைகள் புகழடைவார்கள். புதன் சுக்கிரனுடன், சனியுடன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தால் மாநில ரேங்க் வாங்கும் அளவுக்கு உங்கள் பிள்ளைகள் புத்திசாலியாக இருப்பார்கள். ஆனால் புதன் செவ்வாயுடனோ, குருவுடனோ சேர்ந்திருந்தால் கூடா பழக்க வழக்கங்களால் பாதை மாறுவார்கள். தவறான நண்பர்களுடனும், சமூக எதிர்க் குழுக்களுடனும் சேரும் ஆபத்து இருக்கிறது.

பூர்வபுண்யாதிபதியான புதன் வலுவடைய என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. வித்யாகாரகனாக புதன் விளங்குவதால், ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்தி அவர்களின் உயர் கல்விக்கு உதவலாம். உணவில் பச்சைப் பயறு சேர்த்துக் கொள்ளலாம். புதன் நரம்புகளுக்கும், பின்மூளைக்கும் உரிய கிரகமாக இருப்பதால், மனவளம் குன்றிய பிள்ளைகளுக்கு இயன்ற உதவிகள் செய்யலாம். புதன் தாய்வழி ரத்த பந்தங்களான அத்தை, தாய் மாமாவுக்குரிய கிரகமாக வருகிறார். எனவே அத்தகைய உறவினர்களுக்கும் உதவலாம். படித்த பழைய பள்ளியை புதுப்பிப்பதன் மூலமாகவும் புதனின் வலிமை உங்களுக்குக் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3 மற்றும் 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சற்றே தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். குறிப்பாக 28 வயது முதல் 37 வயதுக்குள் அமையும். சிலருக்கு முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி அதிக வருடங்கள் இருக்கும். சிலருக்கு 40 முதல் 43 வயதிற்குள் குழந்தை அமைய வாய்ப்பிருக்கிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் குழந்தை தங்குவது கொஞ்சம் அரிதுதான். அதாவது, ‘ஒரு மாதம் தள்ளிப் போனது...’, ‘ஐம்பது நாள் கழித்து அதுவே கலைந்து விட்டது...’ என்கிற மாதிரி நிலை நேரலாம். 30 வயது முதல் 46 வயதிற்குள் அறிவு, அழகுள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் கொஞ்சம் தாமதப்பட்டாலும், மழலை பாக்கியம் விரைந்து கிடைக்கும். காரணம், புத்திகாரகன் குருவின் தசை ஏறக்குறைய 23 வயது முதல் தொடங்குவதுதான். 33 வயதிற்குள் சிக்கல் இல்லாமல் குழந்தை கிடைக்கும்.
ரிஷப ராசிக்கு பூர்வபுண்யாதிபதியாக புதன் வருகிறார். அந்த புதனையே ஆளும் தெய்வமான பெருமாளை வணங்குதல் நலம். அதிலும் குறிப்பாக ரிஷப ராசிக்காரர்கள் தேரழுந்தூரில் அருள்பாலிக்கும் கோசகன் எனும் ஆமருவியப்பனை தரிசியுங்கள். இத்தலத்தையே குழந்தை வரம் அருளும் கிருஷ்ணனின் பெயர் கொண்ட ‘கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்’ என்றுதான் அழைப்பார்கள். உற்சவ மூர்த்திகளில் சந்தானகிருஷ்ணனின் அழகான விக்ரகமும் உண்டு. எனவே ஆமருவியப்பனையும், சந்தானகிருஷ்ணனையும் ஆசையாக தரிசித்து வாருங்கள். அழகான குழந்தை பிறக்கும். இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்