
பகல் முழுவதும் அரசாங்க ஜீப்பில் சுற்றும் மாவட்ட வருவாய் அதிகாரியான கவிதா ராமு, மாலை வேளைகளில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் வித்தியாசமான பெண். தமிழகத்தில் சப்-கலெக்டருக்கு சற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் வேறு யாராவது இப்படி நடனக்கலைஞராகவும் ஜொலிக்கிறாரா என்பது சந்தேகமே!
பிரம்ம கான சபாவில் நடந்த நாட்டிய உற்சவத்தில், திருவாரூர் தியாகராஜர் மீது காதல் கொள்ளும் நாயகியாக மெய் மறந்தார். ‘மோகமான என் மீது நீ இந்த வேளையில் மோடி செய்யலாமோ’ என்ற பொன்னையா பிள்ளையின் பழமையான வர்ணத்தை, சிற்பி அங்குலம் அங்குலமாக செதுக்குவது போல ஒவ்வொரு வரியையும் உள்வாங்கிக்கொண்டு ஆடினார். சிருங்கார ரஸத்தில் தாபம் இயல்பாக வரவேண்டும். கவிதாவுக்கு புதுக்கவிதையாகப் பொங்கியது. பாதங்கள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு நின்றன... நகர்ந்தன! ஒன்றரை மணி நேரம் எக்கச்சக்க எனர்ஜியோடு ஆடினார் கவிதா!
இசைக்குழுவில் கிரிஜா ராமசுவாமி இதயத்திலிருந்து பாடினார் என்றால் அன்றைக்கு வீணை, புல்லாங்குழல், வயலின் வித்வான்கள் அடக்கி வாசிக்காமல் அவ்வப்போது அலறவிட்டதைத் தவிர்த்திருக்கலாம்.
நாட்டிய உலகின் ‘இளம்புயல்’ ஐஸ்வர்யா நாராயணசுவாமி திருமணமாகி இப்போது ஐஸ்வர்யா பாலசுப்ரமணியாகிவிட்டார். ‘நாளைய அலர்மேல் வள்ளி’ என்று பரதநாட்டிய உலகில் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா, ஒரு முழுமையான டான்ஸர். சிலருக்கு விறுவிறுப்பாக ஆடத்தெரியும்... ஆனால், முகபாவங்கள் பரிதாபமாக இருக்கும். ஐஸ்வர்யாவுக்கு எல்லாமே அத்துப்படி!
பெத்தாட்சி ஆடிட்டோரியத்தில் தண்டாயுதபாணி பிள்ளையின் நவராக மாலிகையில் ‘சுவாமியை அழைத்தோடி வா’ என்று சிவனை அழைக்கச் சொல்லி சஹியிடம் மன்றாடுகிறாள் நாயகி. ‘அவரைப் பார்க்காமல் என் முகத்தில் அனல் வீசுதடி’ என்கிறாள். ஏக்கத்தோடு தன் எண்ண ஓட்டத்தைக் கொட்டித் தீர்க்கும் நாயகியாக ஐஸ்வர்யா தத்ரூபமாக ஆடி பிரமிக்க வைத்தார். அழகான உடல்வாகும் தீட்சண்யமான கண்களும் படபடக்கும் இமைகளும் இந்தப¢ பெண்ணுக்குப் பெரிய வரம். சங்கராபரணம், சாரங்கா, ஆரபி என்று ராகங்கள் ஜோராக மாறிக்கொண்டே இருக்க, ஐஸ்வர்யாவும் நவரசங்களுக்கு மாறிக்கொண்டே வந்தது ஆஹா... ஓஹோ! வேகமான பிருந்தாவணி தில்லானாவோடு திரை விழுந்தபோதும் கூட்டம் எழுந்திருக்க மனமில்லாமல் நகர்ந்தது உண்மை. ஸ்ரீதரன் பாட்டு ஸ்ருதி சுத்தம் என்றால், அக்காவுக்கு துளி கூட பதற்றம் இல்லாமல் கோர்வையாக ஜதி சொன்ன தங்கை சரண்யாவுக்கு தாராளமாக ‘ஓ’ போடலாம்!
தீப்தி ரவிச் சந்திரன், ஆளும் கம்பீரம்... ஆட்டமும் கம்பீரம்! பரத நாட்டிய உலகில் தனி முத்திரை பதித்த சுதாராணி ரகுபதியின் மாணவி என்பதே இவருக்குப் பெரிய வரப் பிரசாதம். தோடயமங்கலம் ‘ஜெய ஜெய சம்போ’வை ஜம்மென எடுத்துக்கொண்ட உடனேயே மேடை களை கட்டியது. தோடயமங்கலம் என்பது அற்புதமான பஜனை சம்பிரதாயம்! இப்போது பரத மேடைகளிலும் அது இளம்பெண்களால் நிறைய ஆடப்படுவது வரவேற்கத்தக்க விஷயம். மதுரை கிருஷ்ணனின் இந்த ராகமாலிகை, சிவன் மற்றும் நடராஜரின் அருளை வேண்டுவது. அனாவசிய சினிமாத்தனங்கள் எதுவும் இல்லாமல் பக்தி சிரத்தையுடன் ஆடினார் தீப்தி.
அன்று மெயின் அயிட்டம், மதுரை கிருஷ்ணனின் ‘ஆதரவும் நீயே, அடைக்கலமும் நீயே’ என்ற கரகரப்பரியா வர்ணம்! கிருஷ்ணனிடம் தான் கொண்ட காதலையும், அவன் வருகைக்காக வேறு சிந்தனையின்றி காத்திருக்கும் நாயகியையும் பற்றியது. உட்கருத்தைப் புரிந்துகொண்டு கௌரவமாக ஆடினார். இறுதியில் வந்த ‘சமயம் இதுவல்லவோ’ ஜாவளியும், தில்லானாவும் குறிப்பிடத்தக்கது என்றால், மகாகவி பாரதியின் ‘ஆசைமுகம் மறந்துபோச்சே’ மனதில் பரவசம் கலந்த சோகத்தை சட்டெனக் கொண்டு வந்தது.
ஐம்பதைக் கடந்த சூரியநாராயண மூர்த்திக்கு காலில் சலங்கை கட்டிவிட்டால் இன்றைய சிம்பு, ஜீவாக்களுக்கு சவால்விடும் அளவுக்கு உத்வேகம் பிறந்துவிடுகிறது. பாரதிய வித்யா பவனில் கலா ப்ரியதர்ஷினி சார்பில் மேடை ஏறிய அவரது ‘தசாவதாரம்’ ஒரு அமர்க்களம். பிரமிப்பான அங்க சுத்தம். கலாக்ஷேத்ராவில¢ பேராசிரியராகப் பணிபுரியும் அவரது ஒவ்வொரு அசைவிலும் அந்தப் பழமையான பள்ளியின் அழகான பாணி புரிந்தது. அதுவும் கிருஷ்ணாவதாரத்தை கண்டபோது மதுராவுக்குப் போய் வந்த ஆத்ம திருப்தி.
இரண்டு மாதமாக ஜல்ஜல் என்று ஒலித்த சலங்கைக்கு ஓய்வு தரும் நேரம் இது. சற்று திரும்பிப் பார்த்தால், எத்தனை எத்தனை திறமைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. இந்த மண்ணின் பாரம்பரிய வர்ணங்கள், பதங்கள் குறைவில்லாமல் மேடை ஏறியது சந்தோஷம்தான் என்றாலும், புதிய தீம்கள் பெரிய அளவில் கையாளப்படவில்லை.
தஞ்சை நால்வரையும் தண்டாயுதபாணி பிள்ளையையும் மறக்காமல் ஆடியவர்கள், நம் காலத்தில் வாழ்ந்த பல தரமான கவிஞர்களின் படைப்புகளையும் விட்டுவிட்டது வேதனை. மகாகவி பாரதி மீது இளம் வயதிலிருந்து கொண்ட தீராத காதலால் முழுக்க முழுக்க பாரதியின் வெவ்வேறு அற்புதப் பாடல்களைத் தொகுத்து ‘பாரதிக்கு ஓர் பரதாஞ்சலி’ என்று இரண்டு மணி நேர நிகழ்ச்சியை இந்தியா முழுக்க 98 முறை ஷோபனா ரமேஷ் நடத்தியது வெறும் சாதனைக்காக அல்ல. இளைய தலைமுறை பாரம்பரியத்தை விட்டு விடாமல், இம்மண்ணில் கவனிக்கப்படாத அறிஞர்களின் படைப்புகளையும் மேடை ஏற்ற வேண்டும் என்பதற்காகத்தான்!
அப்புறம் சொல்ல மறந்த விஷயம்... பரத மேடைகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் தஸ்புஸ் ஆங்கில வர்ணனை. நியூயார்க் மக்களா அரங்கத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள்? அல்லது ஆங்கில வர்ணத்துக்கா நீங்கள் ஆடுகிறீர்கள்? தமிழ் என்ன பாவம் செய்தது? உங்கள் சிந்தனைக்கு இவை.