எனக்கு வயது 33. திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லை. அதற்கான சிகிச்சைக்காக போனபோது, கர்ப்பப்பையில் தசைக்கட்டி இருப்பதாக சொன்னார் மருத்துவர். என் அம்மாவுக்கும் இதே பிரச்னை இருந்து, ஒரு கட்டத்தில் கர்ப்பப்பையை அகற்றி விட்டார். இது பரம்பரையாகத் தாக்குமா? கர்ப்பப்பையை அகற்றுவதுதான் இதற்கான தீர்வா?- சி.செல்வி, சேலம்-6.
பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்இனப்பெருக்க வயதில் இருக்கிற பெண்களில் 30 சதவீதம் பேருக்கு ஃபைப்ராய்டு எனப்படுகிற கர்ப்பப்பை தசைக்கட்டி இருக்கிறது. தாய்வழி உறவினர்களில் யாருக்கேனும் இருந்தால், அது சந்ததியினருக்கும் வரலாம். ஹார்மோன் கோளாறு, பருமன் என இதற்கு எத்தனையோ காரணங்கள்...
கட்டியின் அளவு 3 செ.மீ. வரை இருந்தால் பிரச்னை கொடுக்காது. பெரிதானால்தான் பிரச்னை. அதிக ரத்தப் போக்கு, வலி போன்றவை அறிகுறிகள். உங்கள் அம்மாவுக்கு இதே பிரச்னைக்காக கர்ப்பப்பையை எடுத்து விட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் காலத்தில் அது மட்டும்தான் இதற்கான ஒரே தீர்வு. இன்று லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப் சிகிச்சைகளின் மூலம் கட்டியை மட்டும் எடுத்துவிட்டு, கர்ப்பப்பையைப் பாதுகாக்கலாம். கட்டியின் அளவு மற்றும் இடத்தைப் பொறுத்தே சிகிச்சை தீர்மானிக்கப்படும். கர்ப்பப்பையின் உள்ளே கட்டி இருந்தால், கருவை வளரவிடாமல் அபார்ஷனில் முடியும். கட்டியை அகற்றினால்தான் கரு வளரும். கர்ப்பப்பைக்கு வெளியே இருந்தால், அது கர்ப்பப்பையை உறுத்திக்கொண்டே இருந்து, கர்ப்பப்பை சுருங்கி, குறைப்பிரசவம் நிகழக்கூடும். அதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே உங்களுக்கு இது தெரிந்ததற்காக சந்தோஷப்படுங்கள்.
அல்ட்ரா சவுண்டு மூலமாக கட்டியின் இருப்பிடத்தைப் பார்த்து, குறிப்பிட்ட கதிர்களை அதன் மேல் செலுத்தி, கட்டியை சுருங்கச் செய்கிற லேட்டஸ்ட் சிகிச்சைகள் இப்போது வந்து விட்டன. அறுவை சிகிச்சையே தேவையில்லை. பயம் வேண்டாம். எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்தப் பிரச்னை வராமல் தவிர்ப்பதற்கான மிக முக்கிய அட்வைஸ்!
டிரைவாஷ்தான் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட புடவைகள் சில வாங்கியிருக்கிறேன். அதை வீட்டிலேயே செய்ய முடியாதா? டிரைவாஷ் என்பது எப்படிச் செய்யப்படுகிறது?- வீ.ராஜலக்ஷ்மி, தஞ்சாவூர்-7.
பதில் சொல்கின்றனர் ஹை கேர் ஹவுஸ் கீப்பிங் நிறுவனத்தினர்* துணிகளை டிரை வாஷ் செய்வதற்கு வாஷிங் மெஷின் போன்ற தனி இயந்திரம் இருக்கிறது. வீட்டில் டிரை வாஷ் செய்வது கடினம். இந்த இயந்திரத்தில் பெர்க்ளோரோ எத்திலின், மினரல் டர்பன்டைன் போன்ற ஆர்கானிக் கரைப்பான்களைக் கொண்டு, துணிகளில் உள்ள அழுக்கும் கறையும் நீக்கப்படும். நெயில் பாலிஷ் ரிமூவர் வாசனையைப் போல டர்பன்டைனுக்கும் மணம் உண்டு. டிரை க்ளீன் செய்யப்பட்ட துணிகளில் அதை முகர முடியும்.
* டிரைவாஷ் மட்டுமே செய்ய வேண்டிய உடைகளாக இருந்தாலும், கறை பட்டுவிட்டால், உடனடியாக சிறிதளவு தண்ணீரால் துடைத்து விட வேண்டும். பிறகு துணியின் ரகத்துக்கு ஏற்ப சோப் அல்லது டிரை க்ளீன் மூலம் சுத்தப்படுத்தலாம்.
* கிரீஸ் போன்ற சில வகை கறைகள் காய்ந்துவிட்டால் டிரைவாஷிலும் கூட முழுமையாக நீக்க முடியாது.
* கறைகளோடு சேர்த்து துணியை அயர்ன் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் கறை நீங்காது.
கம்ப்யூட்டரில் வைரஸ் தொல்லை. ஏற்கனவே இருக்கிற ஆன்ட்டிவைரஸ் போதவில்லை போலிருக்கிறது. கூடுதலாக இன்னொரு ஆன்ட்டிவைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தி இரட்டிப்புப் பாதுகாப்பு கொடுக்கலாமா?- ர.ராஜா, சென்னை-31.
பதில் சொல்கிறார் கணிப்பொறி ஆலோசகர் கே.சதீஷ்குமார்உங்கள் கணிப்பொறி பயன்பாடுக்கு ஏற்ற நல்லதொரு ஆன்ட்டி வைரஸ் சாஃப்டவேரை தேர்ந்தெடுத்து, அதை மட்டுமே பயன்படுத்துங்கள். ஒரே கணிப்பொறியில் இரண்டு வெவ்வேறு ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்தினால் ‘கான்ஃப்ளிக்ட்’ என்று சொல்லக்கூடிய குழப்பங்கள் ஏற்படும். கணிப்பொறியின் வேகம் குறையவோ, முழுமையாகப் பாதிக்கப்படவோ செய்யலாம்.