அரிசி மாவிலும் மாக்கல்லிலும் கோலம் போட்ட காலம் மாறி, ஸ்டிக்கர் கோலம் வந்தது. ஸ்டிக்கரை வாங்கினோமா, வேண்டிய இடத்தில் ஒட்டினோமா என கோலம் இன்று செம ஈஸி! தினப்படிக்கு ஸ்டிக்கர் கோலமும், பண்டிகை மாதிரியான விசேஷ தினங்களில் மட்டும் மாவுக்கோலமுமாக மாறிப் போய்விட்டது வாழ்க்கை.
இப்போது, முக்கியமான நாள்களிலும் கை வலிக்க, கால் கடுக்க உட்கார்ந்து கோலம் போடத் தேவையில்லை. அதற்கும் வந்துவிட்டது ரெடிமேட் கோலம்!
சென்னையைச் சேர்ந்த ஸ்வர்ணா, விதம்விதமான ரெடிமேட் கோலங்கள் செய்வதில் நிபுணி.
‘‘நிறைய கைவினைப் பொருள்கள் செய்யத் தெரியும். அப்படி செய்யறப்ப, ஒட்டி, வெட்டி வீணாகற பொருள்களை வச்சு சும்மா ஏதோ டிசைன் பண்ணிட்டிருந்தேன். கோலமா பண்ணினா என்னன்னு பொறி தட்ட, நானாவே கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி, இந்த ரெடிமேட் கோலங்களை உருவாக்கியிருக்கேன். இந்தத் தலைமுறைப் பெண்கள் பலருக்கும் கோலம் போடத் தெரியாது. வீடுகள் எல்லாம் டைல்ஸ் மயமானதால, மாவுக்கோலம் போட்டாலும் தெரியாது. இல்லைனா சீக்கிரமே அழிஞ்சிடும். அதுக்குத்தான் இந்த ரெடிமேட் கோலங்கள். சாமி அலமாரி, பூஜை ரூம், கொலுப்படின்னு வேண்டிய இடத்துல இந்தக் கோலத்தை அப்படியே செட் பண்ணிட்டு, தேவையில்லாதப்ப எடுத்து வச்சிடலாம். பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்’’ என்கிற ஸ்வர்ணா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டத் தயாராக இருக்கிறார்.
என்னென்ன தேவை? முதலீடு? ‘‘கிளாஸ் பெயின்ட், பிளாஸ்டிக் ஷீட்டுகள், கிளிட்டர் , முத்து, கல், சமிக்கி மாதிரியான அலங்காரப் பொருள்கள், பசைன்னு வெறும் 500 ரூபாய் முதலீடு போதும்.’’