‘‘எக்ஸ்கியூஸ் மீ’’ என்ற குரலைக் கேட்டதுமே சடாரென விஜயா திரும்பிவிட்டாள். இதை எதிர்பார்க்காத அந்த மெடிக்கல் ரெப் கொஞ்சம் தடுமாறினான். சில நொடிகள் அவனால் பேச முடியவில்லை.
‘‘சொல்லுங்க...
என்ன வேணும்?’’ என்றாள் விஜயா. இந்தமுறை அவளது குரலில் பரவசமோ பதற்றமோ துளிக்கூட இல்லை.
‘‘அன்னிக்கு உங்ககிட்ட சொன்னேனே...’’ என்று ஆரம்பித்தவனை நிறுத்தினாள் விஜயா.
‘‘முதல்ல உங்க பேரு என்னன்னு சொல்லுங்க... மெடிக்கல் ரெப்னு நினைவுல வெச்சுக்கறது கஷ்டமா இருக்கு...’’ என்றபோது அவளையும் அறியாமல் லேசாகச் சிரித்துவிட்டாள்.
அந்தச் சிரிப்பு அவனுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது. பதற்றத்தில் உலர்ந்து போயிருந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பேசினான்.
‘‘பேரு சுகுமார்... மத்த விஷயங்களெல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கேன்... எனக்கு உங்க தங்கை ராதாவை ரொம்பப் பிடிக்கும்... நீங்கதான் எப்படியாவது பேசி...’’ என்று இழுத்தான்.
விஜயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘தன்னுடைய முதல் சந்திப்பிலேயே தகுதிக் குறைவைச் சொல்லி நிராகரித்த ஒரு பெண் மீது இவன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறானே... இதற்குப் பெயர்தான் காதலா’ என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது அவளுக்கு.
‘‘நீங்க அன்னிக்குச் சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன்... உண்மைதான், உங்க தங்கச்சியை லவ் பண்றேன்னு உங்ககிட்டயே சொல்றது தப்புதான்... ஆனா, அவங்ககிட்ட பேசறதுக்குத் தயக்கமா இருக்கு. அவங்க கொஞ்சம் முரட்டுத்தனமாப் பேசிடறாங்க... என்னால அதைத் தாங்கிக்க முடியலை. அதான், உங்க மூலமா பேசிப் பார்க்கலாம்னு வந்தேன்...’’ தயங்கித் தயங்கித்தான் பேசினான்.
விஜயா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கென்று தனியாக ஒரு கார், தனி பங்களா, சுற்றிலும் வேலையாட்கள் என்ற கனவில் இருக்கும் ராதா எங்கே... டார்கெட்டை முடிப்பதற்காக தெருத்தெருவாக அலைய வேண்டியிருக்கும் இவன் எங்கே... ஆனால், காதலுக்கு அதெல்லாம் தெரியாதே... இவனிடம் இருக்கும் வெள்ளந்தித் தனம் உண்மையாக இருக்கிறது. அதோடு ராதா மீது அளவற்ற காதலோடு இருக்கும் இவன், நிச்சயமாக ராதாவை நல்லவிதமாக வைத்துக் கொள்வான். பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
‘‘சரிங்க சுகுமார்... நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க... உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா, உங்க ஆசையை?’’ என்றாள்.
‘‘நீங்க ஓகேன்னா நாளைக்கே கூட நான் வீட்டுல பேசிடுவேன்... எங்க வீட்ல எந்த பிரச்னையும் இருக்காது’’ என்றான் சுகுமார் படபடப்பாக.
‘‘நான் எதுக்குங்க ஓகே சொல்லணும்... நீங்க என் தங்கையைத்தானே காதலிக்கிறீங்க..?’’ என்று நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் விஜயா.
சுகுமாருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பேச்சற்று நின்றான்.
‘‘ஓகே சுகுமார்... வர்ற ஞாயிற்றுக்கிழமை காலைல பதினோரு மணிக்கு உங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க... நான் வீட்டுல பேசி வைக்கிறேன்... வீடு தெரியும்ல..?’’ என்றாள் மீண்டும் நமுட்டுச் சிரிப்போடு.
சுகுமாருக்கு மீண்டும் வெட்கம் வந்தது. அந்த வெட்கத்தோடு லேசாகத் தலைகுனிந்தபடி தலையாட்டினான்.
‘‘ஞாயிற்றுக்கிழமை வாங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்...’’ என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு விஜயா பள்ளிக்குள் நுழைந்தாள்.
விஜயா ஆசிரியர் அறைக்குள் நுழையும்போதே ஈஸ்வரி உட்கார்ந்திருந்தாள்.
‘‘என்ன ஈஸ்வரி... ஆச்சரியமா இருக்கு... இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே..?’’ என்றபடி நெருங்கிப் போன விஜயா, ஈஸ்வரியின் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்து பேச்சை நிறுத்திவிட்டாள்.
‘‘என்ன ஈஸ்வரி... உடம்புக்கு ஏதும் முடியலையா..?’’ என்றாள். ஈஸ்வரி அமைதியாக இருந்தாள்.
‘‘சொல்லு ஈஸ்வரி...’’ என்று ஆதரவாகத் தோளைப் பற்றினாள். அதற்காகவே காத்திருந்தது போல விஜயாவின் மீது சாய்ந்து விசும்பத் தொடங்கினாள் ஈஸ்வரி.
‘‘நேத்து ராத்திரியில இருந்து வீட்ல சண்டை... என்னை அடிச்சுப்புட்டாரு...’’ & மீண்டும் விசும்பினாள்.
‘‘ஏன்... என்னத்துக்கு சண்டை..?’’ விஜயாவுக்குக் கேட்பதற்கு சங்கடமாக இருந்தாலும் ஈஸ்வரிக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகக் கேட்டாள்.
‘‘எனக்கு மீன் புடிக்காதுன்னு உனக்கே தெரியும்... ஆனா, ஊருலயிருந்து அவங்க அக்கா வந்திருக்குன்னு சொல்லி மீன் வாங்கிட்டு வந்தாரு. எனக்குனு தனியா சமைச்சுக்கறேன்னு சொன்னப்போ, ‘எதுக்கு ரெண்டு குழம்பு... மீன் பிடிக்கலைன்னா குழம்பு மட்டும் ஊத்திக்கிட வேண்டியதுதானே’ன்னு அவங்க அக்கா சொல்ல, இவரு அதையே புடியா புடிச்சுகிட்டாரு. ராத்திரி மீன் குழம்பு ஊத்தித்தான் சாப்பிடணும்னு சண்டை...’’ ஈஸ்வரியால் தொடர்ந்து பேசமுடியவில்லை.
விஜயாவுக்கு இந்தப் பிரச்னை கொஞ்சம் விநோதமாக இருந்தது.
‘‘ராத்திரி வம்படியா தின்னது வாந்தியாகிடுச்சு... அதுக்கும் சண்டை... அடிச்சுப்புட்டாரு... காலைல இட்லிக்கும் மீன் குழம்புதான் வெச்சாங்க... அவங்க என் மேல அன்பா இருக்கறதைக் காட்டறதாச் சொல்லி கழுத்தறுக்கறாங்க... ஆசைப்பட்டதைத் திங்கறதுக்கும் வேண்டாததைத் திங்காம இருக்கறதுக்கும் கூட உரிமையில்லாத இந்தக் கல்யாணக் கருமாந்தரத்தை நினைச்சா பத்திக்கிட்டு எரியுது... நீயெல்லாம் மகராசி... உன் இஷ்டத்துக்கு இருக்கே...’’ என்றபடி எழுந்த ஈஸ்வரி, ‘‘நான் கிளாஸுக்கு போறேன் விஜயா... இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்...’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
விஜயாவுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அன்பைக்கூட இவ்வளவு வன்முறையாகவா காட்டுவார்கள்... ஒரு உணவுப் பொருள் வேண்டாம் என்பதா இங்கே பிரச்னை. ‘என்னுடைய விருப்பப்படிதான் நீ இருக்க வேண்டும். எனக்குப் பிடித்ததுதான் உனக்கும் பிடிக்க வேண்டும்’ என்ற ஆதிக்க மனப்பான்மைதானே பிரச்னை.
‘இவள் என்னில் பாதி... என்னுடைய சுக துக்கங்களில் அவளுக்கும் பங்கிருக்கிறது. அவளுடைய சுக துக்கங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன்’ என்றெல்லாம் சொல்லி, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, இந்திரன் சாட்சியாக, அக்னி சாட்சியாக மூன்று முடிச்சுப் போட்டு திருமணம் செய்து கொண்டவன் அடிப்பான் என்றால்... எந்த நம்பிக்கையோடு திருமண பந்தத்துக்குள் நுழைவது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
இந்த சுகுமாரும் ராதா மேல் அன்பாக இருப்பதாகச் சொல்கிறானே... ஒருவேளை நாளைக்கு இவனும் அடிப்பானோ என்று கவலையாக வந்தது. கொஞ்சம் அவசரப்பட்டு அவனை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டோமோ... நாளைக்கு ராதா இதேபோல் வந்து நின்றால்..? சரி, பார்க்கத்தானே வருகிறான்... ஞாயிற்றுக்கிழமைக்குள் நன்றாக விசாரித்துவிடலாம் என்ற சமாதானத்தோடு விஜயாவும் வகுப்புக்கு புறப்பட்டாள்.
‘‘மாப்பிள்ளை கொஞ்சம் நகைப்பிரியர்... அதைப் பத்தி நமக்கு என்ன இருக்கு..? அவரு ஆசை... அவரு நகை... அவரு போட்டுக்கிடப் போறாரு... அதோட அவரு பண்ற ஃபைனான்ஸ் தொழிலுக்கு இப்படி இருந்தால்தான் சரி...’’ என்று போட்டோவை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார் ரத்தினவேல்.
அவரிடமிருந்து போட்டோவை வாங்கிப் பார்த்த விஜயாவின் அப்பா, அப்படியே அம்மாவிடம் கொடுக்க... அம்மா பார்த்துவிட்டு சோமசுந்தரத்திடம் கொடுத்தாள். சோமசுந்தரம் போட்டோவைப் பார்த்துவிட்டு, ‘‘ஆளெல்லாம் நல்லாத்தான் இருக்காரு... ஆனா, விஜயா வேலைக்குப் போறவ... அதனால், வேலைக்குப் போற மாப்பிள்ளை யாராவது பார்ப்போமே...’’ என்றான்.
அந்த நொடியில் நாற்காலியை பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்த ரத்தினவேல், ‘‘கரெக்ட்தான்... கலெக்டர் மாப்பிள்ளை பார்த்து நீங்களே முடிச்சுக்கோங்க...’’ என்று சொல்லிவிட்டு மங்கை பக்கம் திரும்பி, ‘‘இங்கரு... ‘என் தங்கச்சிக்கு நீங்க மாப்பிள்ளை பாருங்க வைங்க’ன்னு இனிமே சொன்னே... தொலைச்சுப்புடுவேன்...’’ என்று கோபமானார்.
விஜயாவின் அப்பா இடைமறித்து மகனை அதட்டினார். ‘‘சோமு... மாப்பிள்ளைகிட்டே என்ன பேசறதுன்னு ஒரு கணக்கு வேண்டாம்? மாப்பிள்ளை அவர் சொந்தத்துல ஒரு இடம் கொண்டு வந்திருக்கார்னா, நாம மேக்கொண்டு எதுவும் விசாரிக்கத் தேவையே இல்லை. அதை யோசிக்க வேண்டாமா? மாப்ளை... நீங்க உட்காருங்க...’’ என்று ரத்தினவேலை அமைதிப்படுத்தினார்.
வெறுப்போடு உட்கார்ந்தார் ரத்தினவேல். சோமசுந்தரம் முகத்தை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான்.
ஏற்கனவே ‘ஃபைனான்ஸ் தொழில் செய்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டுதான் சம்பந்தம் பேச இந்த வீட்டுக்குள் வந்தார் ரத்தினவேல். லட்சக்கணக்கில் வெளியில் வட்டிக்குக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். தவிர சொத்துகள் கிடப்பதாகவும் சொன்னார். எல்லாமே உண்மைதான். ஆனால், சொத்தில் நாலு சித்தப்பாக்களுக்கு பங்கு இருப்பதைச் சொல்லவில்லை. லட்சக்கணக்கில் வட்டிக்குக் கொடுத்திருப்பதும் உண்மைதான்... ஆனால், வெளியில் குறைந்த வட்டிக்கு வாங்கித்தான் இவர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லவில்லை.
விஜயாவின் அப்பாவும் மாப்பிள்ளை சங்கடப்படுகிறார் என்று உண்மைக் காரணத்தைச் சொல்லாமல், ‘மகளைப் பிரிந்து இருக்கமுடியவில்லை’ என்று சொல்லி வீட்டுக்குப் பக்கத்திலேயே குடி வைத்துவிட்டார். அதிலிருந்து பாதி நேரம் எல்லோரும் இங்கேதான்!
எல்லாம் தெரிந்தும் சோமசுந்தரம் இதுவரை எதுவும் சொன்னதில்லை. இப்போதுகூட அதனால்தான் அப்பா அதட்டியதும் அமைதியாகி விட்டான்.
அப்போதுதான் விஜயா பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
‘‘அவகிட்டேயும் வேணா ஒரு தடவை கேட்டுருவோமா... உனக்குத்தான் மாப்பிள்ளை... இந்த இடம் முடிஞ்சிடும்... உங்களுக்கு ஓகேன்னா நான் அவங்க வீட்டுல எல்லாரையும் பொண்ணு பார்க்க வரச் சொல்லி சொல்லிவிட்றவா... வர்ற ஞாயித்துக்கிழமை காலையில பத்து மணிவாக்குல வரச் சொல்லிடுதேன்...’’ என்று ரத்தினவேல் சொல்ல, விஜயா அதிர்ந்து நின்றாள்.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்