கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு, வியாபாரம் என தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நெருக்கமான வாழ்வியல் தொடர்புகள் உண்டு. அந்தத் தொடர்புகளை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது முல்லைப் பெரியாறு விவகாரம். ‘அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர்தான் பாலாகவும் காய்கறிகளாகவும் மாறி கேரளத்துக்குத் திரும்பவும் வருகிறது’ என்ற உண்மையை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் உணர்வுரீதியான குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் சக்திகளின் காதுகளில் இது விழவில்லை.
தமிழகத்தை நம்பி வாழும் மலையாளிகளையும், கேரளத்தை நம்பி வாழும் தமிழர்களையும் அச்சுறுத்தும் இச்சூழல் எப்போது மாறும் என்று புரியவில்லை.
இப்பிரச்னையில் எதிர்பாராத பாதிப்பு ஐயப்ப பக்தர்களுக்கு. ஐயப்பனை நாடி சபரிமலை செல்லும் பக்தர்கள் மீது சில இடங்களில் நிகழும் தாக்குதல்களும், அவமானப்படுத்தும் செயல்களும் தமிழகத்தில் மிகப்பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சி தமிழக கோயில்களிலேயே விரதத்தை நிறைவு செய்கிறார்கள். தாக்குபவர்களுக்குத் தெரியாது, ‘சபரிமலை ஐயப்பனுக்கும் தமிழகத்துக்கும் இருக்கும் உறவு!’
கடந்த 50 ஆண்டுகளில் சபரிமலை யாத்திரை, தமிழர்களின் வாழ்வோடு கலந்த ஒன்றாக மாறியிருக்கிறது. அதற்குமுன் தென்னிந்தியாவின் முக்கிய யாத்திரைத்தலமாக விளங்கியது பழநிதான். கேரளாவில் பலரும் பழநிமலை முருகனை குலதெய்வமாகவே கருதினர். இன்றும் கூட முருக தரிசனத்துக்காக தள்ளாத வயதிலும் மலையேறும் கேரள பக்தர்களை பழநியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் சபரிமலை யாத்திரையை பிரபலப் படுத்தியது நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை. தனது ‘ஸ்ரீமதுரை தேவி பாலவினோத நாடக சபா’ மூலம் ‘ஐயப்பன்’ நாடகத்தை ஊர் ஊராக நடத்தினார். அந்நாடகத்தில் ஐயப்பனின் பெருமை, வழிபடும் முறை, யாத்திரை செல்வதால் கிடைக்கும் பலன் என பல செய்திகள் இடம் பெற்றிருந்தன. அதிலும் அவர் நாடகத்தில் பல்வேறு புதுமைகளையும் திகில் காட்சி களையும் கையாள் வார். திடீரென நதி பிளக்கும். புலி மேல் அமர்ந்து ஐயப்பன் வருவார். இதுபோன்ற காட்சிகள் மக்களை பரவசத்தில் ஆழ்த்தின.
முருகனின் சகோதரன் என்பதால் இயல்பாகவே தமிழக மக்கள் ஐயப்பனை குலக்கடவுளாகக் கருதி வணங்கத் தொடங்கினர். விரதம் இருக்கும் நாட்களில் குடி, புகைப்பழக்கத்தைக் கைவிடுவார்கள் என்று கருதி, ஆண்கள் சபரிமலைக்கு மாலையிடுவதை பெண்களும் ஊக்குவித்தார்கள்.
‘‘ஒரு காலத்தில், சபரிமலை யாத்திரை சென்றால் திரும்புவது நிச்சயமில்லை. பெரிய பாதையில் இப்போதிருக்கும் ஒத்தையடிப் பாதை கூட அப்போது கிடையாது. டயர், தீப்பந்தங்களை கொளுத்திக்கொண்டுதான் நடக்க வேண்டும். யாத்திரை செல்பவர்கள் கையில் சிறிய கத்தியையும் எடுத்துச் செல்வார்கள். இடையில் மறிக்கும் செடி, கொடிகளை வெட்டி பாதையமைத்துக் கொண்டே நடப்பார்கள். சொல்லப்போனால் கடும் மலைகளில் பாதை களை அமைத்ததே நம் பக்தர்கள்தான். இன்று ஐயப்பனை தரிசிப்பதில் ஏற்பட்டுள்ள இடையூறு, எங்களைப் போல பாரம்பரியமாக மாலையிட்டுச் செல்பவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் நிர்வாகி நவநீதகிருஷ்ணன்.
தமிழர்களுக்கும் ஐயப்பனுக்கும் இன்னுமொரு பந்தமும் இருக்கிறது. 1949&ல் ஐயப்பன் கோயிலில் தீயசக்திகள் சிலர் தீவைத்து விட்டனர். சிலைகள் உள்பட கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மனம் வருந்திய கேரள பக்தர்கள் சிலர், ஐயப்ப பக்தரும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தையுமான பி.டி.ராசனிடம் கோரிக்கை விடுத்தார்கள். அவரும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்பன் திருவுருவச்சிலை ஒன்றைச் செய்தார்கள். சிலை செய்யும் பணி கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் நடந்ததாகச் சொல்கிறார்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஐம்பொன் சிற்பக்கலைஞர் வித்யாஷங்கர் ஸ்தபதி, ‘‘நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். சுவாமிமலையில் செய்யப்பட்ட ஐயப்பனின் திருவுருவச்சிலை ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தோட்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தமிழகமெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சபரிமலையில் நிறுவப்பட்டது’’ என்கிறார்.
‘தமிழ்வேள் பி.டி.ராசன் வாழ்வும் வாக்கும்’ என்ற நூலை எழுதியுள்ள பேராசிரியர் க.ந.சொக்கலிங்கம் அந்நூலில் இதை மேலும் விரிவாகக் குறிப்பிடுகிறார்... ‘‘ஐயப்பன் திருவுருவச்சிலை தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு ‘ஐயப்ப சாமி திக்விஜயம்’ என்று பெயரிடப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள கோயிலில் வைத்து ஐயப்பனுக்கும் கோயில் மூலவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பல கோயில்களில் ஐயப்பனை வைதீகர்கள் அனுமதிக்கவில்லை. ‘எல்லைச்சாமியான அய்யனார்தான் ஐயப்பன். எனவே அவரை அனுமதிக்க முடியாது’ என்றார்கள். பி.டி.ராசன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஊர்வலத்தை சிறப்பாக முடித்து சபரிமலைக்கு ஐயப்பனைக் கொண்டு சென் றார்’’ என்று குறிப்பிடுகிறார் சொக்கலிங்கம்.
‘‘ஐயப்பன் திருவுருவச் சிலையை செய்தவர் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதிதான்’’ என்கிறார் சேகர் ஸ்தபதி. இவர், ராமசாமி ஸ்தபதியின் பேரன். ‘‘எங்க தாத்தா ஐம்பொன் சிற்பங்கள் செய்வதில் பெரும் பெயரெடுத்தவர். இவர் செய்த விக்கிரகங்கள் பல நாடுகள்ல இருக்கு. நெய்வேலியில இருக்கிற பிரமாண்டமான நடராஜர் சிலை தாத்தா செஞ்சதுதான். ஐயப்ப விக்கிரகம் இங்கேதான் தயாராச்சு. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்லதான் கண் திறந்தாங்க. எங்க அப்பா அருணஜடேஸ்வரரும் கேரளாவுக்கு நிறைய சிலைகள் செஞ்சு கொடுத்திருக்கார். இப்போதும் கேரளாவுக்காக சுவாமிமலையில் நிறைய சிலைகள் தயாராகுது’’ என்கிறார் சேகர்.
இப்படி ஆதியும் அந்தமுமாக ஐயப்பனோடும் கேரள மக்களோடும் பந்தம் கொண்ட தமிழர்களை தண்ணீருக்காக வஞ்சிப்பதும், பக்தர்களை அசிங்கப்படுத்துவதும் நியாயமா? இதுதான் தமிழர்கள் எழுப்பும் கேள்வி.
கல்வி நிறைந்த, மனிதநேயம் ததும்பும் இலக்கியங்கள் நிறைந்த, அறிவாளிகள் நிறைந்த, சகோதரத்துவம் நிறைந்த கேரள மக்கள் இந்த கேள்வியில் உள்ள நியாயத்தை உணர்வார்கள் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு!
வெ.நீலகண்டன்,
பாலசரவணக்குமார்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்