பொங்கலுக்கு காப்பு கட்டுவோம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        வாசலில் ஸ்டிக்கர் கோலத்துடனும், வீட்டினுள் கேஸ் அடுப்பில் பொங்கல் வைப்பதுமாகத்தான் நகரங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றன. நாகரிகமும் நகரமயமாக்கலும் பாரம்பரிய விஷயங்களைப் புறந்தள்ளத் துடிப்பதன் விளைவு இது. பண்டிகையோ, சடங்கோ... ஆண்டாண்டு கால வழக்கங்களை கிராமங்கள் இன்னும் விடுவதில்லை. பொங்கலன்று சூரிய உதயத்துக்கு முன்னதாகவே வீடு, காடுகளில் காப்பு கட்டும் பழக்கமும் அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம்தான்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது இந்த வழக்கம்.

‘‘நாயுருவிங்கிற ஒரு செடி, தும்பை, கன்னிப்புள்ள (இதுவும் செடிதான்), வேப்ப இலை... இந்த எல்லாத்தையும் சேர்த்துக் கட்டறதுக்குப் பேர்தான் காப்புக் கட்டுதல். வீட்டு நிலை, முகப்புகள்ல செருகி வைப்பாங்க. காடுகள்லயும் அன்னிக்கு விடிகாலையில கொண்டு போய் எங்காச்சும் ஒரு மூலையில வச்சிருவாங்க. ஆடு மாடுகள் தங்குற தொழுவம் இருந்தா, அங்கயும் கண்டிப்பா கட்டி வைக்கணும். நாலு நாள்ல அது காய்ஞ்சு போனாக்கூட, கட்டி வச்ச காப்பு அடுத்த பொங்கல் வரைக்கும் பத்திரமா இருக்கணும்னு நினைப்பாங்க. ஏன் எதுக்குன்னு எங்க தலைமுறைக்குத் தெரியாட்டாலும், காலங்காலமா கடைப்பிடிக்கிற வழக்கத்தை மறக்க முடியுமா? இப்பவும் எங்க பகுதிகள்ல ஜனங்க தவறாம இதைப் பண்ணிட்டிருக்காங்க’’ என்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணக்குமார். 

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘பொங்கலுக்கு முந்தைய நாள் மத்தியானமே காப்புச்செடி பிடுங்கறதுக்காக காட்டுப்பக்கமா கிளம்பிடுவோம். பத்து மைல் தூரம்னாலும் நாலு நாலு பேரா சேர்ந்து போவோம். நாலு செடியில ஏதாச்சும் ஒண்ணு கிடைக்கலைன்னாக்கூட அப்படியே வந்துட முடியாது. தேடி அலைஞ்சு அதையும் பறிச்சுட்டுத்தான் திரும்பணும். முதல் நாள் ராத்திரியே எல்லாத்தையும் கலந்து, சின்னச் சின்னக் கட்டுகளா முடிஞ்சு வச்சிருப்போம். பொங்கலன்னிக்கு விடிகாலையில வீட்டு ஆம்பளைகளுக்கு முதல் வேலை காப்பு கட்டறதுதான்’’ என்கிறார் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த அப்பம்மாள்.
அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்த பிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப் போகாமல் பத்திரமாக இருந்து அந்த வீட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே வீடுகளில் காப்பு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள் தமிழாய்வாளர்கள். ‘விளைகிற நிலங்களும் அதில் விவசாயிகளுடன் சேர்ந்து பாடுபடும் கால்நடைகளும்கூட பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்ற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்கிறார்கள் இவர்கள்.

‘‘காப்புங்கிறதுக்கு பொதுவான அர்த்தம் பாதுகாப்புதான். மனுஷங்கள் லயே பயப்படுற சிலருக்கு கையில, இடுப்புல காப்பு கட்டற தில்லையா? ‘பொங்கல் காப்பு’ பத்தி அகத்திணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள்லயே சொல்லப்பட்டிருக்கு. ‘விவசாயிக்கும் விவசாயத்துக்கும் பாதுகாப்பு’ன்னு இதைச் சொல்லிக்கலாம். இந்தப் பழக்கமும், இதுக்குச் சொல்லப்படுற காரணமும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்தும் சின்னதா வேறுபடலாம். பிழைப்புக்காக நகர்ப்புறங்களுக்குப் போனவங்ககூட எப்பாடு பட்டாவது பொங்கலுக்கு சொந்த ஊர் வந்துடறாங்க. வசிக்கும் ஊரில் பொங்கல் கொண்டாடுவதை விட, சொந்த ஊரில் இருக்கும் வீடு, நிலங்களுக்குக் காப்புக் கட்டுவதை முக்கியமானதாகக் கருதுகிறவர்களும் இருக்காங்க. ஏன்னா, காப்பு கட்டாம பூட்டிக் கிடக்கிற வீடுகளுக்குக் கிராமங்கள்ல பேரு & பேய் வீடு’’ என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவசுப்ரமணியன்.
 அய்யனார் ராஜன்
படங்கள்: கண்ணன்