வீட்டுப்பொங்கல் மாட்டுப்பொங்கல் கன்னிப்பொங்கல்... இது கொப்பி பொங்கல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       ‘வாய்பொத்தி கைபொத்தி வச்சேனடி கொப்பி
வைகையாத்துத் தண்ணியில போறியேடி கொப்பி
மே(ல்) வருஷம் இந்நாளைக்கும் வருவியாடி கொப்பி
வாய் பொத்தி கைபொத்தி வச்சேனடி கொப்பி’
- காற்றின் போக்கில் அலைகள் ஊடலாட, இதமாக அசைகிறது குளம். ஈரம் படர்ந்த கரையில் அடையையும் சாதத்தையும் வைத்து, சுற்றிலும் நின்று சுரம் தவறாமல் ‘கொப்பி’ கொட்டிப் பாடுகிறார்கள் பெண்கள்!

குளத்தை ஒட்டியிருக்கும் அய்யனார் கோயிலில் ஊரே கூடி நிற்கிறது. எங்கும் பக்தியும் பரவசமும் நிறைந்திருக்கிறது. சில நிமிடங்களில் கொப்பிச் சத்தம் அடங்க, குலவைச் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தத்தம் வீடுகளில் சேர்த்து வைத்த ‘அடை’யை பக்திச் சிரத்தையோடு குளத்தில் கரைக்கிறார்கள் பெண்கள். இதுதான் கொப்பிப் பொங்கலின் நிறைவுப்பகுதி.
பிறகு வேடிக்கை, விளையாட்டு என ஊர் களைகட்டும். தஞ்சையை ஒட்டியுள்ள சில கிராமங்களில், வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கன்னிப்பொங்கல் வரிசையில் கொப்பி பொங்கலும் வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது. பட்டுக்கோட்டையை ஒட்டியிருக்கும் பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தில் 200 வருடங்களாக இந்தப் பாரம்பரியம் உண்டு.

கொப்பி என்றால் கும்மி. கும்மிப்பாட்டு என்பது தஞ்சை மாவட்டத்தின் வாழ்க்கை கலை. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாச் சடங்கிலும் இடம்பெறும். அதன் வழிபாட்டு முகம்தான் கொப்பி பொங்கல்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘குழந்தைகளுக்கு நோய் நொடி வராம இருக்கணும், கால்நடைகள் நல்லவிதமா ஜீவிக்கணும், மழை தண்ணி பெஞ்சு ஊருல நாலு பச்சை பூக்கணும்... இதுக்காகத்தான் கொப்பி பொங்கல் கொண்டாடுறோம். மார்கழி மாதமே ஊரு தயாராயிடும். வீட்டுல அசைவம் புழங்காது. பெண்கள் நோம்பு தொடங்கிருவாங்க. தினமும் சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி எழுந்திரிச்சு, வீட்டு வாசலைப் பெருக்கி, துவளத் துவள பசுஞ்சாணம் தெளிப்பாங்க. புது வௌக்குமாத்தால கூட்டித்தள்ளிட்டு பெரிசா கோலம் போடுவாங்க. சாணத்தால ஒரு புள்ளையார் பிடிச்சு நடுவுல வச்சு, அது தலையில ஒரு பூசணிப்பூ, இல்லேன்னா பறங்கிப்பூ செருகிருவாங்க. இதுக்காகவே வீட்டுக்கு வீடு பூசணிச்செடி, பறங்கிச்செடி முளைச்சுக் கிடக்கும்...’’ என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஓவியர் செல்வராசு.

‘‘சூரியன் சாஞ்சதும், கோலத்துக்கு நடுவில வச்சிருக்கிற புள்ளையார வட்டமா தட்டி ஒரு மண்சட்டியில போட்டு வச்சிருவோம். சாதாரணமா சாணத்தை வட்டமாத் தட்டுனா ‘ராட்டி’ன்னு சொல்வாங்க. நாங்க தெய்வ நோக்கத்துல செய்றதால ‘அடை’ன்னுதான் சொல்லுவோம். மாட்டுப்பொங்கலுக்கு மறுநாளுதான் கொப்பி. நாலஞ்சு கூட்டுப் பொரியலோட சாதம் வடிச்சு, பெருமாளைக் கும்பிடுவோம். ஒரு பாத்திரத்தில சாதத்தையும், இன்னொரு பாத்திரத்தில சேகரிச்ச ‘அடை’யையும் எடுத்துக்கிட்டு மாட்டு மந்தைக்குப் போயிருவோம். அங்கே, ஊரே கூடி நிக்கும். தாரை தப்பட்டை அடிக்க, பொம்பளைங்க எல்லாம் கொப்பி கொட்டி பாட்டு பாடுவாங்க...’’ என்று காட்சியை கண்முன் நிறுத்துகிறார் காளியம்மாள்.

பெருவட்டமிட்டு பெண்கள் கொப்பி கொட்ட, மற்றவர்கள் பாடலுக்குப் பின்பாட்டு பாடுகிறார்கள். நல்ல நேரத்தில் ஊர்வலம் தொடங்குகிறது. இசைக் கருவிகள் சூழலை உக்கிரமாக்கி முன்செல்ல, குழுக்குழுவாக கொப்பி கொட்டியபடி பின் தொடர்கிறார்கள். பிற ஆண்களும் பெண்களும் ‘அடை’ பாத்திரத்தையும் சாதத்தையும் சுமந்து நடக்கிறார்கள். 
 
‘‘ஊரோட காவல் தெய்வம் பெரியகுளத்து அய்யனார். ஊர்வலம் நேரா அந்த அய்யனார் கோயிலுக்குப் போகும். மக்கள் கொண்டு வர்ற சாதத்தை அங்கே ஒண்ணாக்கி அய்யனாருக்கு பல்லயம் போடுவாங்க. கோயிலுக்கு முன்னாடி ‘அடை’ பாத்திரங்களை வச்சு, அதைச் சுத்தி பெண்கள் கொப்பி அடிப்பாங்க. இறுதியா அய்யனாருக்கு கற்பூர ஆரத்தி காமிச்சுட்டு அடையை குளத்துல கரைச்சு விடுவாங்க. அதோட நோம்பு முடியும்’’ என்கிறார் ஓவியர் செல்வராசு.

‘‘வெளியூருக்கு வாக்கப்பட்டுப் போன பொம்பளப்புள்ளைகளும்இந்த பண்டிகையைக் கொண்டாட இங்கே வந்திருவாங்க. ஊரோட காவல் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துறதோட, மக்களுக்குப் புத்துணர்வையும் தருது இந்தக் கொப்பி பொங்கல்...’’ என்கிறார் இவ்வூரைச் சேர்ந்த வி.என்.பக்கிரிசாமி.
 வெ.நீலகண்டன்
படங்கள்: கோட்டை தயா