அரிசியும் பாசிப் பருப்பும் கலந்து செய்த பொங்கலின் இனிப்புக்கும் தித்திப்புக்கும் காரணம் வெல்லம். அரிசி எப்படிக் கிடைக்கிறது என்பது அறிந்த விஷயம். வெல்லம்? ‘கரும்பு விளையும் பூமியைச் சுற்றிலும் கனஜோராக நடக்கிறது வெல்லத் தயாரிப்பு’ என்று கேள்விப்பட்டு, கரும்புக் காடுகளை நோக்கிப் பயணித்தோம்.
நாமக்கல், சேலம், பரமத்தி பகுதிகளில் நான்கு நாள் சுற்றியதில் ‘ஆலைக்கொட்டகை’ பற்றி அத்தனை செய்திகள்!
‘‘தமிழ்நாட்டுல வெல்லத்தோட விலையை நிர்ணயிப்பதே சேலம்தான். அரசே கொள்முதல் பண்ணணும்னாகூட அங்க வச்சுத்தான் டெண்டர் விடுவாங்க. சுற்று வட்டாரத்துல உள்ள ஆலைக்கொட்டகைகள் தயாரிச்ச வெல்லத்தை சேலம் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து, மண்டிகள்ல வச்சு ஏலம் விடப்படுது. ஏல மண்டிகளுக்கு நல்ல லாபம்னாலும் கொட்டகைகளுக்கும் நஷ்டம் இருக்காதபடி தான் போயிட்டிருக்கு. இப்ப கொட்டகைக்காரங்க நேரடியா ஏலம் விடற சந்தைகளும் வந்திடுச்சு. பரமத்தியை அடுத்த பிலிக்கல்பாளையம் அப்படிப்பட்ட சந்தைதான்’’ என்று வெல்லத்தின் மார்க்கெட் நிலவரம் பற்றியே விவரித்துக் கொண்டிருந்த ஜேடர்பாளையம் நடராஜனின் பேச்சை ஆலைக்கொட்டகை பக்கம் திருப்பினோம்.
‘‘வெல்லத் தயாரிப்பு மையங்களான கூரைக்கூடாரங்களைத்தான் ஆலைக்கொட்டகைன்னு சொல்றோம். ஒரு கொட்டகையில ஆணும் பொண்ணுமா பத்து பேருக்கு வருஷம் பூராவும் வேலை இருக்கும். கரும்புக்கு மட்டும் சில வேளைகள்ல தட்டுப்பாடு வரலாம்ங்கிறதால ஸ்டாக் வச்சிருப்போம். குடிசைத் தொழிலா நடக்கிற வெல்லத் தயாரிப்புல லேபர் பிரச்னை எப்பவும் இருந்துட்டேதான் இருக்கு. தினம் 300 ரூபா வரை கூலி. ஆனாலும், நிரந்தரமா ஆட்கள் கிடைக்க மாட்டேங்குறாங்க. வர்றவங்க மூணு மாசம் வேலை பார்க்குறாங்க... அப்புறம் ஏதாச்சும் காரணம் சொல்லிட்டுக் கிளம்பிடுறாங்க’’ எனும் ஆலைக்கொட்டகை ஒன்றின் உரிமையாளரான நடராஜனின் பேச்சு மூச்செல்லாம் பிசினஸ் மீதுதான்!
இதெல்லாம் சரி... வெல்லம் எப்படித் தயாராகுது?
கட்டுக்கட்டாக கரும்பை உள்ளே இழுத்து சாறாக்கும் கம்ப்ரஸ்ஸர்தான் ஆலைக்கொட்டகையின் முதல் இயந்திரம். அங்கிருந்து வெளிவரும் சாறு பெரியதொரு ரப்பர் டியூப் மூலம் அடுப்பிலுள்ள அகண்ட பாத்திரத்துக்குச் செல்கிறது. மண்ணில் தோண்டி அமைக்கப் பட்டிருக்கிறது அடுப்பு. தொடர்ந்து நெருப்பில் 3 மணி நேரத்துக்குக் கொதிக்க வைக்கப்படுகிறது சாறு. கொதிக்கும்போதே அழுக்குகளை அகற்ற ஃபில்டர் செய்யப்படுகிறது. கலருக்கான பவுடர் தூவி இறக்கப்பட்டதும் வெல்லம் ரெடி. பிறகு தேவைப்பட்ட வடிவங்களில் உருவாக்கிக் கொள்கிறார்கள். அச்சு, உருண்டை வடிவ வெல்லமாகப் பிரித்ததும் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து 120 கிலோ வரை வெல்லம் எடுக்க முடியும் என்கிறார்கள்.
‘‘வருஷம் முழுக்க வேலை இருக்குதுதான். ஆனா, ஒரு பக்கம் அனல்லயும் இன்னொரு புறம் பிசுபிசுப்புக்கு இடையிலயும் வேலை பண்ணிட்டிருக்கோம். இதனாலயே உடல்ரீதியா பிரச்னைகள் வருது. அதனாலதான் தொடர்ந்து வேலை பார்க்க முடியலை’’ என்கிறார் கபிலர்மலையைச் சேர்ந்த ஆலைக்கொட்டகை தொழிலாளி சுமதி.
பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனைச் சங்கத்தின் தலைவரான ரவிச்சந்திரனிடம் பேசினோம்...
‘‘வெல்லத் தயாரிப்புத் தொழில் இந்தப் பகுதியில ஒரு நிரந்தர வேலைவாய்ப்பை தருது. சிறுசிறு ஆலைக்கொட்டகைக்காரங்க சேர்ந்து உருவாக்குனதுதான் இந்தச் சந்தை. மண்டிகள்ல விக்கும்போது முழு லாபமும் வெல்லம் தயாரிக்கறவங்க கைக்கு வர்றதில்லை. தயாரிக்கிற வியாபாரிக்கு தான் ஏமாத்தப்படலைங்கிற நம்பிக்கையோட, பண்ற தொழில்ல லாபமும் கிடைக்குதுன்னு நம்பி இங்க வர்றாங்க. புதன், சனிக்கிழமைகள்ல சுற்றுவட்டாரத்துல இருந்து நூத்துக்கணக்கான கொட்டகைக்காரங்க வந்து ஏலத்துல கலந்துக்கிடுறாங்க’’ என்கிறார் ரவிச்சந்திரன்.
தமிழ்நாட்டின் மற்ற சில இடங்களிலும் சிறிய அளவில் வெல்லத் தயாரிப்பு நடந்தாலும் பெரும்பாலும் இந்தப் பகுதிகளிலிருந்தே தமிழகத்தின் அனைத்துப் பகுதிக்கும் வெல்லம் செல்கிறது என்கிறார்கள். ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்களுக்கும்கூட ஏற்றுமதியாகிறது.
‘‘போன வருஷம் அரசு இலவச பொங்கல் பொருட்கள் தர்றதுக்காக மொத்தமா கொள்முதல் பண்ணுனதுல ஓரளவு லாபம் கிடைச்சது. இந்தாண்டு அதுக்கான அறிகுறியே தெரியலை. வெல்லம் அவசியப்படுற ஒரே பண்டிகை பொங்கல். நாலு காசு பார்க்க முடியறது இந்த சீசன்ல மட்டும்தான். அதனால வருங்காலத்திலயாவது எங்களுக்கு பிசினஸ் ஆகிற மாதிரி ஏதாவது நடக்கும்னு நம்புறோம்’’ என்கிறார் நடராஜன்.
அய்யனார் ராஜன்
படங்கள்: சுப்பிரமணியம்