அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு நிறைய பொங்கல் வாழ்த்துகள் வரும். பொங்கலின் உற்சாகத்தை அவை முன்கூட்டியே அழைத்து வந்துவிடும். பச்சரிசிப் பற்களால் ஒரு பாப்பா கரும்பு கடிக்கும்; கூந்தலில் ஈரத்துண்டுடன் ஒரு பெண் கோலம் போடுவாள்; மண் குடிசை வாசலில் & மண் அடுப்பில் & மஞ்சள் கொத்துகள் கட்டிய மண் பானையில் ஒரு குடும்பம் சூரியனுக்கு முன்னால் பொங்கல் வைத்து வணங்கும்; வயல்வெளியில் மாடுகளுடன் நிற்கும் உழவர், நாற்று நடும் பெண்கள்... இப்படி அழகழகான சித்திரங்கள்.
சித்திரங்கள் இன்று ஊமைகளாகி விட்டன. அலைபேசிகளில் பரிமாறிக் கொள்ளப்படும் குறுஞ்செய்திகளாகி விட்டன வாழ்த்துகள்.
‘பொங்கல்’ என்ற சொல் தமிழில் சோறு பொங்குவதையோ பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொலிதல், நிறைதல், மிகுதி, கள் என்று பல அர்த்தங்கள் கொண்டு, உள்ளும் புறமும் உற்சாகத்தைப் பொங்க வைக்கும் ஒரு சொல் அது. மண்ணும் மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதைச் சொல்வது.
இயற்கையின் தலைப்பிள்ளைகள் உழவர்கள். அவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கிறார்கள். ஊர்ப் பசியைத் தீர்ப்பவர்கள் உறு பசியில் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கே 70 சதவீதத்துக்கும் மேலான மக்கள் உழவையும் அதைச் சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்கிறார்கள். 55 சதவீத உழவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. இவர்கள் ஒருபோதும் முன்னுக்கு வரமுடியாத கூலி விவசாயிகளாக வாழ்வை நகர்த்துபவர்கள்.
நகரமயமாதல் என்ற பெயரில் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இன்று காணாமல் போய்விட்டன. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்குகிறார்கள்.
உழவையும் சுகாதாரத்தையும் ‘தாய்த் தொழில்கள்’ என்று சொன்னார் காந்தியடிகள். இன்று இரண்டுமே பணத்தை முன் வைத்து நடக்கும் சூதாட்டத் தொழில்களாகி விட்டன. பருவங்கள் பொய்த்து, செயற்கை உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் பழக்கப்பட்டுப் பாழாகி விட்ட நிலத்தில் இன்று உழவன் கடன் வாங்கி விதைத்து, கடனையேதான் அறுவடை செய்கிறான்.
விளைபொருள்களுக்கேற்ற விலையும் கிடைப்பதில்லை. அன்னமிடும் உழவர்கள் இன்று அரசாங்கத்தின் மானியத்திற்காகவும் வங்கிகளின் கடனுக்காகவும் கையேந்தி நிற்கிறார்கள்.
தாய்த்தொழிலான உழவை இந்திய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் அணுகுகிறது.
தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமையுற்ற தலைவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தனது பாஸ்போர்ட்டில் கூட தன் தொழில் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் அவர் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது 1952&53ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீது தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
‘‘தங்களுக்கு என்ன அநீதி இழைக்கப்படுகிறது என்பதைக் கண்டு, அதை எதிர்த்து நிற்க சக்தியில்லாத நெல்லிக்காய் மூட்டை விவசாயிதான் இந்த தேசத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கிறவன். வெள்ளாமை செய்யும் செல்வத்தை வட்டிக்காரனுக்கும், வரியாக சர்க்காருக்கும் கொடுத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் நிற்பவன். மேலும் மேலும் வரி போட்டாலும் கூட, தான் படும் இன்னல்களை எடுத்துச் சொல்லத் தெரியாத வாயில்லா ஊமைகள் விவசாயிகள் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் சர்க்கார் செய்துகொண்டே போகலாம் என்று எண்ணினால், அதன் முடிவு என்ன ஆகும் என்பது தெரியுமா?’’ (‘சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்’ & கே.ஜீவபாரதி தொகுத்தது & குமரன் பதிப்பகம்).
தேவர் அன்று சட்டமன்றத்தில் கேட்ட கேள்வியை இன்று நாடாளு மன்றத்தில் கேட்கலாம். அறுபது ஆண்டுகளாக உழவர்களின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது.
நெருக்கடியால் நிலத்தை விட்டுப் பிரிந்து வேறு தொழில்களுக்குப் போகிற உழவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். நகரங்களில¢ வீட்டு வேலை செய்யும் பெண்களில் பலரும் விவசாயத் தொழிலிலிருந்து வேரறுக்கப்பட்டவர்கள்தான்.
பிரச்னைகளின்போது அரசாங்கம், உழவர்களின் கடனைத் தீர்த்துவிட்டால் போதாது. அவர்களை மறுபடியும் நிலத்திலேயே உழைக்க வைப்பதற்கான நம்பிக்கையையும் உறுதியையும் தர வேண்டும். ‘கவுன்சலிங்’ என்பது வெறும் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளைப் பற்றி மட்டும் சொல்வதல்ல.
இந்தியா விவசாய நாடாக இருந்தால்தான் அதன் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும். இங்கே வேளாண்மைக்கென்று தனியாக படிப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால் அவற்றில் படித்து வெளியேறும் மாணவர்கள் அதிகாரிகளாக இருக்க விரும்புகிறார்களே தவிர, விவசாயிகளாக வசிக்க விரும்புவதில்லை. கிராமத்து மக்களின் உழைப்பில் நகரத்து மக்கள் வாழ்வதற்கான படிப்பாக மண்ணைப் பற்றிய படிப்பு இருக்கக்கூடாது.
டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு மது விற்பனை 142 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் இந்தச் சூழலில், பொங்கலை முன் வைத்து தெளிவாக இரண்டு விஷயங்களையாவது நாம் சிந்திக்கலாம்...
விவசாயத்தின் முக்கியத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்காலத் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகளைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள், அவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று மண்ணையும் உழவையும் பற்றி எடுத்துச் சொல்லலாம்.
பி.பி.சி தொலைக்காட்சி கூட விவசாயத்தைப் பற்றிய நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கியுள்ளது. ஒன்றிரண்டு என்று இல்லாமல், நமது எல்லா தொலைக்காட்சிகளும் விவசாயத்திற்காக தினந்தோறும் அரை மணி நேரமாவது ஒதுக்கலாம்.
தொலைக்காட்சிகளின் ஆலோசனை நேரங்களில் செக்ஸ், வேலைவாய்ப்பு, ஷேர் மார்க்கெட் பற்றி எவ்வளவோ சந்தேகங்களைக் கேட்கிறோம். விவசாயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறோமா?
இதுவே நமது முதல் கேள்வியாகப் பிறக்கட்டும்.
கவிதை அப்பா மீரா, கவிதையின் ஒரு நதிப்பெருக்கு. இதன் படித்துறையில் மூழ்கிக் களிக்கும் எந்த மனமும் மீள முடியாமல் மீன்குஞ்சாக மாறிவிடும்.
திருவிழாவுக்குத் தன் குழந்தையைத் தோளில் தூக்கிச் செல்லும் தந்தையைப் போல, இளம் கவிஞர்களை உச்சி முகர்ந்து தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடியவர். அவரது ‘அகரம்’ வெளியீடும், ‘அன்னம்’ பதிப்பகமும் அன்பும் அணைப்புமாக இலக்கிய உலகில் ஒரு காலப்பறவையின் சிறகுகளாக விரிந்து நீந்தியவை.
‘கவிதை அப்பா’ என்று அவரது மகள் செல்மா அவரைப் பற்றிய தன் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். அகரம் வெளியீடு.
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி... மீராவோ இறந்த பிறகும் கவிதை எழுதுகிறார், அவருடைய மகளின் கைகளால்’ என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
‘ஒரு பண்பான கவிதை அப்பாவிற்கான ஓர் அன்பான கவிதை மகளின் புகழ்செய் நூல்’ என்கிறார் அறிவுமதி.
அப்பாவுடன் வாழ்ந்த மகள் செல்மாவின் நெகிழ்வான தருணங்கள் கண்களில் மின்னி வழியும் ஓர் ஈரத்துடன் எழுத்துப் பின்னலாகியிருக்கிறது...
‘ஒரு பெண்ணிற்கு
மறு ஜென்மம் என்பார்கள் பிரசவத்தை
என் பிரசவ வலிகளையும் தகர்த்தன
உங்களைப் பிரிந்த
அந்த அழுத்தமான தருணங்கள்
பயங்கள் நிறைந்த வலைப்பின்னல்
போன்றதொரு பரிதவிப்பாய்
மலைத்தொடரிலிருந்து உருண்டோடி விழும்
பாறையாகிப் போனது போல் என் நிலை’
(சலசலக்கும்...)
பழநிபாரதி