மகர ராசிக்காரர்கள் கொஞ்சம் வேகமாக இருப்பார்கள் என்றால், கும்ப ராசிக்காரர்களான நீங்கள் சாந்தமாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்ணாக இருப்பீர்கள். அப்படித்தான் வீட்டு விஷயத்திலும் நடந்து கொள்வீர்கள். முதல் செலவு, முதல் கடன் வீடு வாங்குவதற்காக மட்டுமே இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். நண்பர்கள் சொல்வதை வேதவாக்காக உங்களில் பலர் எடுத்துக் கொள்வீர்கள். எனவே, நண்பர்களோடு சேர்ந்து இடங்களைப் பார்த்துக் கொண்டு வருவீர்கள். ‘‘அவன் ஒரு இடம் சொல்றான். நானும் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. அட்வான்ஸ் கொடுத்துட்டு வரேன்’’ என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்வீர்கள்.
கட்டிய வீட்டை வாங்காது, வீடு கட்டத் தொடங்கும்போது அந்த இடத்தைப் பார்த்து வாங்குவீர்கள். அந்த இடத்திற்கு பில்டர் அஸ்திவாரம் போடும் நாளிலிருந்து தினமும் சென்று பார்த்துப் பார்த்து கட்டச் சொல்வீர்கள். சுற்றிலும் மரங்கள் இருந்தால் அந்த இடம் உங்களுக்குப் பிடித்துப் போகும். நகரமாக இருந்தாலும் நிழற்சாலைகளையே பெரிதும் விரும்புவீர்கள். அதேபோல, ‘‘அந்த கோடி வீட்ல இருக்கற மாதிரியே கருங்கல்லா வச்சு காம்பவுண்ட் கட்டணும்’’ என்று ஆசைப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தை சுக ஸ்தானம் என்றும், வாகன ஸ்தானம், வீட்டு ஸ்தானம் என்றும் அழைப்பர். இதற்கு சுக்கிரனே அதிபதியாக வருவதால், ‘அலுவலகம் கூட ஆலமரத்தின் கீழ் இயற்கையாக இருந்தால் எப்படியிருக்கும்’ என்று யோசிப்பீர்கள். கட்டுவது சிறிய இடமாக இருப்பினும் பங்களாவின் அழகைக் கொண்டு வர முயற்சிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சுக்கிரனே கட்டிடகாரகனாக வருவதால் பொதுவாகவே உங்களுக்கு வீடு, சொத்தெல்லாம் எளிதாகவே அமையும். பூமிகாரகனான செவ்வாய் உங்கள் தைரிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், பற்றாக்குறையிலும் துணிந்து வீடு வாங்குவீர்கள். ‘‘இந்த வீடு அஸ்திவாரம் போடும்போது கையில பத்து லட்சம்தான் இருந்தது. பட்ஜெட் என்னவோ நாப்பது லட்சம். அப்புறம் எப்படியோ புரட்டிட்டோம். பகவான் புண்ணியத்துல வீடு அமைஞ்சுது’’ என்பீர்கள். ஆனால், நீங்கள் அடிக்கடி வீட்டை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். உங்களில் யாரேனும் வாடகை வீட்டில் இருந்தால் நாலு வருஷத்துக்கு ஏழு வீடு கூட மாறுவீர்கள்.
கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரத்தின் 3, 4 பாதங்களும், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களும் அடங்குகின்றன. முதலில் அவிட்ட நட்சத்திரத்தைப் பார்ப்போம். கும்ப ராசியில் வரும் அவிட்டத்தில் பிறந்தவர்களின் புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும். எதிலும் நுனிப்புல் மேய்ச்சலாக இல்லாமல் ஆழமாக இறங்குவீர்கள். உங்கள் நட்சத்திரத்தின் அதிபதியே செவ்வாய்தான். அதனால் வீடு பற்றி கவலையே படாதீர்கள். ஆனால், வீடு வாங்கும் விஷயத்தில் கொஞ்சம் தள்ளிப் போட்டுத்தான் முடிவெடுப்பீர்கள்.
சுகவாசியான நீங்கள் எதையும் இழுத்தடித்துத்தான் முடிப்பீர்கள். வீடும் அதற்கு விதிவிலக்கல்ல. முதன்முதலாக வாங்கிய வீட்டிற்குப் பிறகுதான் வீடு பற்றிய ஆசை பன்மடங்கு அதிகரிக்கும். உங்கள் ராசியாதிபதியான சுக்கிரன் கட்டிடகாரகனாக இருப்பதால் வீடு எப்படியும் உங்களுக்கு அமையும். பூர்வீகச் சொத்துக்களை அப்படியே வைத்திருக்கவே விரும்புவீர்கள். ‘‘சாண் நிலமாவது சொந்த ஊர்ல இருக்கணும்’’ என்று உறுதியோடு சொல்வீர்கள். முதலில் வீட்டை வாங்கும்போது மனையாக வாங்கி கட்ட முடியுமா என்று யோசியுங்கள். அதேபோல சனி உங்களை ஆள்வதால் குடிசைகளுக்கு மத்தியில் வீடு கிடைத்தால் வாங்கி விடுங்கள்.
தரை தளம் உங்களுக்கு ஏற்றது. பெரும்பாலும் தொகுப்பு வீடுகளைத் தவிர தனி வீடு கட்டியே குடிபுக நினைப்பீர்கள். தென் கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. வட கிழக்கு வாசல் வைத்து வீட்டைக் கட்டாதீர்கள். ராணுவக் குடியிருப்பு, தீயணைப்பு நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடோ, அடுக்ககமோ கிடைத்தால் நல்லது. மணலும் செம்மண்ணும் கலந்த பூமியாக இருந்தால் மிகவும் நல்லது. அதேபோல காடு, மலையை அழித்து புதிதாக உற்பத்தி ஆகும் நகர்களில் வீடு வாங்குங்கள். நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே குன்று அல்லது மலை தெரிந்தால் நல்லது. அஸ்வினி, ரோகிணி, பூசம், சுவாதி, அனுஷம் போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள்.
கும்ப ராசியிலேயே சதயம் நட்சத்திரத்திற்குத் தான் ஆடம்பர வீடுகள் பிடிக்கும். ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ‘‘இந்த தெருவிலயே கடைசி வீடு அவரோடதுதான்’’ என்று வந்தால் உங்களுக்கு ராசியாக இருக்கும். பொதுவாகவே ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் நவீனமும் பழமையும் கலந்த வீடுகளைத்தான் விரும்புவார்கள். வெள்ளை மண், மணல், செம்மண், விளைநிலம், பூந்தோட்டமாக இருந்தது என்று சொல்லும்படியான பூமி எல்லாமும் உங்களுக்கு ராசியானதாகும். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைக் காட்டிலும் தெரியாத விஷயத்தில்தான் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதனால், ‘‘எல்லாரும் அந்த ஏரியாவிலயே வீடு வாங்கணும்னு ஓடறாங்க. ஆனா, இதைவிட அதுதான் பெஸ்ட்’’ என்று வேறொரு புதிய ஊரை நோக்கி ஓடுவீர்கள். ‘‘நாம இடம் வாங்கிட்டா, நம்மள பார்த்துப் பத்து பேரு வாங்குவாங்க. அவ்ளோதான்’’ என்று புதுக் கணக்கு போடுவீர்கள். சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டை எல்லாம் விரும்ப மாட்டீர்கள். ‘‘தெருவிலேயே பெரிய வீடு அவருதுதாங்க’’ என்கிற அளவுக்கு ஆசை இருக்கும். பார்க்கிற தூரத்தில், கூப்பிடும் தூரத்தில் கடைகள் இருக்க வேண்டும். வீடு வாங்குவதற்கு முன்பு வியாபாரத்தில் முதலீடா, வீட்டில் முதலீடா என்று பலமுறை யோசிப்பீர்கள். இந்த விஷயத்தில் வாழ்க்கைத் துணையோடு பிரச்னை வந்து நீங்கும்.
அரசு வங்கிக் கடனைவிட தனியார் வங்கிக் கடன்தான் உங்களுக்கு சீக்கிரமாகக் கிடைக்கும். வீட்டின் தலைவாசல் வடக்கு, மேற்கு திசையை நோக்கி வைத்துக் கட்டுங்கள். நீங்கள் வசிக்கும் நகரின் இதே திசையில் மனை கிடைத்தால் வாங்கிப் போடுங்கள். தரை தளத்தை மட்டும் தவிர்க்கப் பாருங்கள். உங்களில் சிலர் 16 வயதிலிருந்தே வீடு பற்றி திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். 31 வயதிற்குள்ளேயே வீட்டையும் கட்டுவீர்கள். அதேபோல வாங்கியதை அவ்வளவு சீக்கிரம் விற்க மாட்டீர்கள். ‘‘அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. அதை வித்து என்ன பண்ணப் போறோம்’’ என்று அடிக்கடி சொல்வீர்கள்.
ஏன், நகைகளை விட இடத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது தைரியமாக வீடு வாங்குங்கள்; இல்லையெனில் வேறு ஏதேனும் வீண் செலவுகள் வரலாம். சினிமா தியேட்டர், அரிசி மண்டி, அறவை நிலையம், லேத் பட்டறை, பிரியாணி ஸ்டால், காய்கறி கடை போன்ற இடங்களுக்கு அருகில் வீடு கிடைத்தால் வாங்குங்கள். அடுத்தடுத்து விருத்தியாகும். மருத்துவமனை இருந்தால் தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரம் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
பத்திரப்பதிவையும் புதுமனை புகுவிழாவையும் ரோகிணி, மிருகசீரிஷம், பூரம், பூசம், அனுஷம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி குரு ஆவார். கட்டிடகாரகனான சுக்கிரனுக்கு எதிர்மறை கதிர்வீச்சாக வருகிறது. அதனாலேயே அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்காக யாரிடமும் போய் கடன் கேட்பது கூடாது என்று நினைப்பீர்கள். ‘‘எல்லாரும் வீடு வாங்கறாங்கன்னு நாமளும் வாங்கணுமா என்ன’’ என்று திருப்பிக் கேட்பீர்கள். ‘‘இந்த சம்பளத்தை வச்சுக்கிட்டு வீடு, வாசல்னு அகலக்கால் வைக்கணுமா என்ன’’ எனக் கேட்டு அமைதியாக இருப்பீர்கள். ஆனால், வாழ்க்கைத்துணையின் வற்புறுத்தலின் பேரில்தான் வீட்டுக் கடனுக்காக சம்மதிப்பீர்கள். உங்கள் நட்சத்திர நாயகனான குருவிற்கு பூமிகாரகனான செவ்வாய் நட்பாக வருவதால், தயங்கித் தள்ளாடியாவது வீட்டை வாங்கி விடுவீர்கள்.
வீடு விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். ஆழம் பார்த்து காலை விடுவதில் அதிபுத்திசாலிகள். பல விஷயங்களில் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி இருப்பீர்கள். ஆனால், திடீரென்று வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வருவீர்கள். நீங்கள் வீட்டை வாங்கித்தான் ஆக வேண்டும். இல்லையெனில் அடுத்தடுத்த முன்னேற்றமும் மெதுவாகத்தான் இருக்கும். உங்கள் பெயரில் இல்லையென்றாலும் வாழ்க்கைத்துணையில் பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோ வாங்கிப் போடுங்கள். 28, 32, 33 வயதில் வீடு கட்டுவீர்கள். வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு திசையை நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ, அந்த ஊரின் வடக்கு, வடகிழக்கு திசையிலேயே வீட்டை வாங்கிப் போடுங்கள். பள்ளி, கோயில், வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு போன்ற இடங்களுக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது.
மூன்று வகையான மண் உள்ள பூமி அமையும். மேல் மண் மணல் போல இருந்து பாறை இருக்கும் பூமியாகக் கூட இருக்கலாம்; விட்டு விடாதீர்கள். பெரும்பாலும் மொட்டை மாடி வருகிற தளத்திற்கு அருகில்தான் வசிக்க விரும்புவீர்கள். மிருகசீரிஷம், பூசம், சுவாதி, அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகத்தைத் தருபவர் ரிஷபச் சுக்கிரன் ஆவார். கட்டிடகாரகனான சுக்கிரனும் உங்களுக்கு எளிதாக வீட்டு யோகத்தை அருள்வார். மேலும், சனி பகவான் ராசியாதிபதியாக இருப்பதால் பெருமாள் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வந்தால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதனால், பூமியையே மீட்டெடுத்த வராஹரை வணங்க... நிலம் மற்றும் வீடு வாங்கும் பாக்கியம் உடனே கிட்டும். இந்த வராகரைத்தான் பூவராகர் எனும் திருப்பெயரிட்டு அழைப்பர். இந்த பூவராகர் ஸ்ரீமுஷ்ணம் எனும் தலத்தில் மூலவராக அருள்கிறார்.
இத்தலம் கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. விருத்தாசலம் & கும்பகோணம் சாலையில் ராஜேந்திரப் பட்டிணத்திலிருந்து இடது புறம் 6 கி.மீ. பயணிக்க ஸ்ரீமுஷ்ணத்தை அடையலாம். வராகரை வணங்க, வீட்டுக்கனவு நிஜமாகும்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்