சென்னைப் பசங்களின் கொண்டாட்டம்...





         ‘‘சினிமாவில மதுரைன்னா வீரம், கோவைன்னா மரியாதைன்னு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணர்வு, பண்பாட்டைப் பதிவு பண்ணியவங்க சென்னைன்னா மட்டும் ரவுடிகள் நிறைஞ்ச ஊராகவும், வெட்டு குத்துதான் தொழிலாவும் இருக்கிறதாவே பதிவு பண்ணியிருக்காங்க. சென்னையிலயும் அதோட சுற்றுப்புறங்கள்லயும் இருக்கிற இயல்பான மக்களோட முகங்கள் சரியா சொல்லப்படவேயில்லை...’’ என்கிறார் திருகுமரன் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘அட்ட கத்தி’ இயக்குநர் பா.இரஞ்சித்.

‘‘அதேபோல சினிமாக்கள்ல சென்னைத் தமிழ்னா ஒண்ணு கொலைகாரர்களோட மொழியா இருக்கு; இல்லைன்னா நகைச்சுவைக்கு இலக்காக இருந்திருக்கு. இதையெல்லாம் ஓரளவுக்கு மாற்றிச் சொல்லப்பட்ட படம் ‘சென்னை 600028’தான்...’’ என்று இரஞ்சித் பாராட்டுப் பத்திரம் படித்ததற்கு அவர் வெங்கட்பிரபுவிடம் சினிமாவைக் கற்றவர் என்கிற ஒரே காரணம் மட்டுமே இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை. அதை மீறி சென்னையின் உண்மையான முகத்தைக் காட்டவேண்டும் என்கிற வேகம் அவரது பேச்சிலேயே தெரிந்தது.

‘‘மேற்படி சென்னையின் புறநகர்ப் பகுதிகளோட மொழி, பண்பாட்டுப் பதிவுகளை படத்தோட களமா வச்சுக்கிட்டு, இங்கே இருக்கிற இளைஞர்களோட சந்தோஷ வாழ்க்கையைச் சொல்லியிருக்கேன். குறிப்பா ஒரு இளைஞனோட மூணு வருஷ வாழ்க்கைப் பதிவுகள்தான் கதை.
அவனுடைய விருப்பங்கள், அவனுடைய குடும்பம், நண்பர்கள், அவர்கள் பார்வையில காதல், அதை அவர்கள் அணுகும் முறைகள்னு பல விஷயங்களைப் பதிவு பண்ணி யிருக்கேன். இதுக்குள்ள ஹீரோவோட ஒரு காதலும், அது தொடர்பான பல காதல்களோட நிகழ்வுகளும் சொல்லப்பட்டிருக்கு.

படத்துல வில்லன் யாரும் இல்லை. காதல் தோல்வின்னா அழுகையோ, சோகமோ கிடையாது. வாழ்க்கையின் பல நிகழ்வுகளையும் சந்தோஷமா அணுகும் பசங்களோட கொண்டாட்டத்தைப் படம் சொல்லுது. ‘ஆடுகளத்’துல தனுஷோட காதலுக்குப் போட்டியா வந்த தினேஷ்தான் இதுல ஹீரோ. அவரோட ஜோடியா கன்னட ஸ்வேதாவை தமிழ்ல அறிமுகம் செஞ்சிருக்கேன். இவங்களோட, ஒளிப்பதிவாளரா பி.கே.வர்மா, எடிட்டிங்குக்கு ஆன்டனியோட உதவியாளர்களா இருந்த லியோ ஜான்பால், கலைக்கு த.ராமலிங்கம், இசைக்கு சந்தோஷ் நாராயணன்னு எல்லா பின்னணிக் கலைஞர்களும் அறிமுகமாகறாங்க.

இசையிலும் எலக்ட்ரானிக் தாக்கம் இல்லாத இயல்பான வாத்தியக் கருவிகளோட புதுசான ஒலியை டிசைன் பண்ணிப் பாடல்களை உருவாக்கினோம். அதுல கானாவுக்கும், பறை இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும்...’’ என்ற இரஞ்சித்திடம் ‘அட்ட கத்தி’க்கு விளக்கம் கேட்டால், ‘‘கத்தி மாதிரி உருவத்தோட சரி; வெட்ட உதவாதுங்கிற அப்பாவியான ஹீரோவைத்தான் அப்படிச் சொல்றேன்...’’ என்கிறார்.
வேணுஜி