இசையமைப்பாளராகத் தொடங்கி, பாடகியாகி, பின் நடிகையானதில் ஸ்ருதி ஹாசனிடம் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்பாவைப் போலவே சகலகலாவல்லி. நடிகையாகவும் வடக்கில் தொடங்கி, தெற்கில் நதியாகப் பாய்ந்தவருக்கு தமிழில் இரண்டாவது படம் '3’. தனுஷுக்கென்றே ஆர்டர் கொடுத்துச் செய்தது போன்ற ஸ்லிம் உடற்கட்டுடன் பொருத்தமான ஜோடியாகியிருக்கிறார் ஸ்ருதி.
படம் ஆரம்பிக்கப்பட்ட பொழுதில் ஹீரோயினாக அறிவிக்கப்பட்டவர், பின்பு இல்லை. வேறு ஒரு நடிகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவும் மாறி மீண்டும் ஸ்ருதியே நடிக்க ஆரம்பித்தார். என்ன நடந்தது இடையில்..?
‘‘தேதிகள் ஒதுக்கிற பிரச்னைதான். முதல்ல என்னை நடிக்க கேட்டப்ப ஸ்கிரிப்ட் ரொம்பப் பிடிச்சிருந்தது. இது அவ்வளவு சாதாரணமா தவிர்க்கக்கூடிய படம் இல்லைன்னும் புரிஞ்சது. தமிழைப் பொறுத்தவரை அறிமுகப்படமே எனக்கு ஏ.ஆர்.முருகதாஸ் படமா அமைஞ்சு, நல்ல தொடக்கத்தையும், பாஸிட்டிவ்வான விமர்சனங்களையும் கொடுத்தது. அடுத்து வந்த இந்தப்படம் என்னோட இரண்டாவது படமா அமைஞ்சது நல்ல சாய்ஸ்தான். சொல்லப்போனா இந்தப்படத்துல நான் இருந்தாகணுமேன்னு ஆசைப்பட்டேன்.
ஆனாலும் இரண்டு தெலுங்குப் படங்கள் ஒத்துக்கிட்டிருந்ததில, இவங்க கேட்ட தேதிகள் என்கிட்ட இல்லை. பிறகு அங்கேயும் இங்கேயும் தேதிகள் அட்ஜஸ்ட் ஆக... என் விருப்பப்படியே இந்தப்படம் கிடைச்சது. நானும் இப்போ இந்தப்படத்துல இருக்கேன்ங்கிறது சந்தோஷமான விஷயம். இது தவிர்க்க முடியாத படமும் கூட...’’ என்ற ஸ்ருதி, ஹீரோ தனுஷ், இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ் பற்றியும் பேசினார்.
‘‘இயக்குநரா அறிமுகமாகிற ஐஸ்வர்யாவுக்கு இந்தப்படம் பொருத்தமானதுதான். அவங்களுக்கு என் வாழ்த்துகள். தனுஷைப் பற்றிச் சொன்னா, தேசிய விருது வாங்கிய நல்ல நடிகர். அவர்கூட நடிக்க ஆசைப்பட்டதும், நடிச்சதும் நல்ல அனுபவங்கள். தன் நடிப்புன்னு பிரிச்சுக்காம, என் நடிப்பும் நல்லா வரணும்னு என்கரேஜ் பண்ணியதுல நல்ல கோ ஆர்ட்டிஸ்டும் கூட. அவர்கிட்டேர்ந்து கத்துக்கவும் முடிஞ்சது...’’
‘‘நேஷனல் அவார்ட் ஆர்ட்டிஸ்ட்டான அவரோட நடிக்கிற உங்களுக்கும் ஒரு அவார்ட் வாங்கற சான்ஸ் இருக்கா..?’’
‘‘யாருக்கு எவ்வளவு வாய்ப்பு, ஹீரோவோட போட்டி போடற பங்கு இருக்கான்னெல்லாம் என் கேரக்டருக்கு நான் அளவு வச்சுக்கிறதில்லை. என்னைப் பொறுத்தவரை என் கேரக்டர் அஞ்சு நிமிஷம் வர்றதோ, அஞ்சு சீன்ல வருதோ அதுக்கான நேர்மையும், முக்கியத்துவமும் இருக்குதான்னு மட்டும் பார்ப்பேன். அந்த அளவில இந்தப்படத்துல எனக்கு முக்கியமான கேரக்டர்தான்...’’
‘‘படத்தோட ஸ்டில்கள்ல எல்லாம் தனுஷோட செம ரொமான்ஸ்ல இருக் கீங்களே..?’’
‘‘ ரொமான்ஸு க்கு முக்கியத் துவம் தர்ற காட்சிகள் படத்துல இருக்கு. ஆனா அது எதுக்கு, என்னன்னு விவரமா சொல்ல முடியாது. இருந்தாலும் கதைக்கு கன்வின்ஸிங்காதான் இருக்கும் எல்லாமே. இந்தப்படத்துல என்னோட ரொமான்ஸை ரசிகர்கள் ஏத்துக்குவாங்கன்னு உறுதியா நம்பறேன்...’’
‘‘உலகமே போடு போட்ட ‘கொலவெறி’யைக் கேட்டா உங்க கொலவெறியைச் சொல்லித்தான் தனுஷ் பாடறார்னு புரியுது. உங்களுக்கு ஏன் இந்தக் கொலவெறி..?’’
‘‘அது ஜாலியான மூடுல சொல்லப்பட்ட கொலவெறிதான். உலகமே வியந்து அந்தப் பாடல் பாப்புலரானதுல எனக்கும் சந்தோஷம்தான். அந்தப் பாடல்ல என் பங்கு எதுவும் இல்லை. அதுல நானும் நடிச்சிருக்கேன்ங்கிற விஷயம்தான் எனக்கு சந்தோஷத்தைத் தருது. ஆனா இன்னொரு பாடலான ‘கண்ணழகா’வை நான் பாடியிருக்கேன். இதுவரை குரலை உயர்த்தியே பாடிக்கிட்டிருந்த எனக்கு அழகான மெலடியான அந்தப் பாடலை அனிருத் தந்தது இன்னும் மகிழ்ச்சியைத் தர்ற விஷயம். மெலடியில என் குரல் எப்படி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க..!’’ ஸ்ருதி ஹாசன்
வேணுஜி