‘‘எனக்கு எப்போதுமே தியாகராஜர் கீர்த்தனைகளில் அலாதி ஈடுபாடு உண்டு. ராமர் மீது அவர் கொண்ட பக்தி ஆத்மார்த்தமானது. அதைக் கொண்டு வரும் விதத்தில் தியாகராஜரின் சில மணியான கீர்த்தனைகளைத் தொகுத்து வர்ணமாக்கினேன். அவை வெறும் தொகுப்பாக இல்லாமல் அர்த்தபூர்வமாக இருக்க விரும்பினேன்’’ என்று புருவங்களை உயர்த்தி மென்மையாகப் புன்னகைத்தார் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம். இந்த சீசனில் நாரத கான சபாவில் அவர் அரங்கேற்றிய ‘தாசரதி’ உருக்கமானது. அவரைப் போலவே அழகானது.
‘நகுமோமு’, ‘நன்னுவிடச்சி’, ‘நன்னுபாலிம்ப’, ‘கனு கொண்டினி’ உள்பட நெஞ்சை வருடும் கிருதிகள் அணிவகுத்து வர, ஸ்ரீநிதி லயித்து ஆடினார். ஸ்ரீநிதியின் முகபாவங்களில் துளிகூட மிகை இருக்காது. தன் வீட்டு விசேஷத்துக்கு ராமரின் பட்டாபிஷேக படத்துடன் ஒரு சீடர் வரும்போது, ராமரே தன் வீட்டுக்கு வருவது போல தியாகப்ரம்மம் பரவசமாகும் ‘நன்னுபாலிம்ப’ கீர்த்தனையின்போது பாட்டும் பரதமும் நம்மை அசர வைத்தன.
இந்தக் கலியுகத்தில் நிகழும் ஜாதி, மத கோர தாண்டவத்துக்கு ஸ்ரீநிதி சொல்லும் தீர்வு, ‘அந்த ஸ்ரீராமர் இன்னொருமுறை இங்கே வரவேண்டும்’! சுஜாதா விஜயராகவனின் இந்த அற்புதமான பதத்தில், ‘ராமா... நீயோ பதவியையே அலட்சியமாகத் துறந்தாய். இன்று இவர்களோ உனக்குக் கோயில் கட்டுவதற்காக அடித்துக் கொள்கிறார்கள்’ என்று பொருள்படும் வரிகள் ஆழமானவை. நெகிழ்ந்து ஆடினார் ஸ்ரீநிதி. சுவாமிமலை சுரேஷும், ராதா பத்ரியும் மனமுருகிப் பாடினார்கள்.
பிரம்ம கான சபாவுக்காக பெத்தாச்சி ஆடிட்டோரியத்தின் லேசான உதறும் குளிரில் உள்ளே நுழைந்தபோது மேடையில், அட... வாணி கணபதி! குளிர்சாதனப் பெட்டியில் எட்டிப் பார்க்கும் ஆப்பிளைப் போல ஃப்ரஷ்ஷாகத் தோன்றிய வாணியின் இடுப்பில் கிலோக்கள் ஏறவில்லை என்பது அந்த சுறுசுறுப்பிலேயே புரிந்தது. நடனப்பெண்களுக்கு வயதாகாதோ? ‘மாமோக லாஹிரி, மீரதே என்ன செய்குவேன்’ என்ற மிகவும் பாரம்பரிய கமாஸ் வர்ணத்தை எடுத்துக் கொண்டார்.
முருகப் பெருமானைப் பார்க்கத் தவிக்கும் நாயகி, சஹியிடம் தூது அனுப்புகிறாள். ‘தான் (முருகன்) மாத்திரம் தனியாக இருக்கும் சமயம் பார்த்து வாடி, போடி’ என்று சஹியிடம் சொல்லி அனுப்பும் இடத்தில் மனதின் அடித்தளத்தில் இருக்கும் அபிலாஷையை கொட்டித் தீர்க்கும்போது & பிரமாதம் வாணி!
பெங்களூரில் குடியேறிவிட்ட அவர், சீசன் நேரத்தில் வருடா வருடம் இரண்டு மூன்று சபாக்களிலாவது ஆடிவிடுகிறார். பரத வைராக்கியம்!
பாரதிய வித்யா பவனில் வைஜெயந்திமாலாவின் நடனம். ‘மோகமாகினேன்’ என்ற தண்டாயுதபாணி பிள்ளையின் ராகமாலிகை வர்ணத்தில் நாற்பது நிமிடங்கள் அசராமல் ஆடினார். சற்று தொலைவிலிருந்து பார்த்தால், எழுபதைக் கடந்த பெண்மணி ஆடுகிறார் என்று யாருமே சொல்ல முடியாது. காலில் சலங்கை ஏறிவிட்டால் அப்படியொரு வேகம், உறுதி எங்கிருந்து வருகிறது என்று அவரேதான் சொல்ல வேண்டும். முதுமை காரணமாக பலர் மூட்டுவலியால் அவதிப்படும்போது அரைமண்டியெல்லாம் தீர்க்கமாகப் போடுகிறார். பாதங்களில் துளிகூட தடுமாற்றம் இல்லை. தாளம் தப்பவில்லை. ‘வஞ்சிக்கோட்டை வாலிபனி’ல் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனத்தை இப்போதும் காண்பது போன்ற வியப்பு. வைஜெயந்தி போன்ற அதிசயக் கலைஞர்களை விமர்சிப்பதைவிட பிரமிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமோ!
‘அன்னமே அருகில் வா... அந்தரங்கம் ஒன்று சொல்வேன்’ என்று நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியில் அன்னத்தை அம்சமாக அழைத்தார் ப்ரியா ஜெயராமன். இசை விமர்சகர் சுப்புடுவின் அற்புதமான வலஜி ராக வர்ணம். மிக இளம் வயதிலேயே ‘கலைமாமணி’ விருது பெற்ற துடிப்பான ப்ரியாவுக்கு சவாலான வர்ணங்கள்கூட சர்க்கரைப்பொங்கல் சாப்பிடுவது மாதிரிதான் என்று தோன்றியது. இந்தப் பெண்ணுக்கு உடம்பிலேயே லயம் இருப்பதால் ஒவ்வொரு அசைவும் நறுக்குத் தெறித்தாற் போன்று இருந்தது. ஏக்கம், கோபம் என முகபாவங்களில் உணர்வுகளைப் பிரதிபலித்து, ப்ரியா அந்தப் பாத்திரத்தோடு ஐக்கியமானார்!
படங்கள்: புதூர் சரவணன்
பாலக்காடு பரணி