நான்கு தலைமுறைகளாக தைப்பொங்கலின் வாசமே அறியாத சிங்கிலிபட்டி கிராமத்தில் இந்தாண்டு பொங்கல் பானைகள் பொங்க, குலவைச் சத்தம் கேட்கப் போகிறது. கரும்பும் மஞ்சளும் புதுப்பானையும் ஊருக்குள் நுழையப் போகிறது. வீடுகள் வெள்ளையாக, மாடுகள் கொம்பில் புது வண்ணம் பூசிக்கொள்ளப் போகின்றன. பொங்கலைக் கொண்டாடாமல் இருந்த சிங்கிலிபட்டி மக்கள் எப்படி மனசு மாறினார்கள்?
ஃப்ளாஷ் பேக்...எப்போது என்பது யாருக்கும் சரியாக நினைவில்லை. நாமக்கல் & திருச்செங்கோடு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சிங்கிலிபட்டியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக முடிந்து, மாட்டுப் பொங்கலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள் மக்கள். பசு, காளைகளுக்கு பூ, பொட்டு, மாலை அலங்காரம் செய்து பொதுமந்தைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும். மாடுகளுக்கு முன்பாக அடுப்பு கூட்டி பெண்கள் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் தயாரானதும் ஊர்ப் பெரியவரோ, மூத்த விவசாயியோ பூஜை செய்வார்.
அந்த ஆண்டும் இதே வழக்கப்படி பூஜைக்குத் தயாராக இருந்திருக்கின்றனர். ஊர்த்தலைவர் அந்த இடத்துக்கு வர கொஞ்சம் தாமதமாகியிருக்கிறது. அந்த நேரத்தில்தான் யாரும் கவனிக்காத வேளையில் அந்தப் பக்கம் வந்த நாய் ஒன்று, திறந்திருந்த பொங்கல் பானையில் வாய் வைத்து லேசாக ருசி பார்த்து விட்டது. மாடுகளுக்குப் படைத்து பூஜை செய்யும் முன் நாய் எச்சில் பண்ணி விட்டதை அபசகுனமாக, தெய்வ குற்றமாக நினைத்தார்கள் மக்கள். அன்றிலிருந்து மாட்டுப் பொங்கலுக்கு மட்டுமல்ல... பொங்கலுக்கும் சேர்த்தே தடை போட்டு விட்டனர். ‘மீறி யாராவது பொங்கல் வைக்க நினைத்தால் அவர்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நிகழும்’ என்கிற கட்டுக்கதையும் ஏதோ ஒரு காலத்தில் சேர்ந்து கொள்ள... நான்கு தலைமுறை ஆட்களால் சிங்கிலிபட்டியில் பொங்கல் பண்டிகையைப் பார்க்க முடியாமலேயே போய் விட்டது.
இன்று...எந்த மாட்டுப் பொங்கலால் பிரச்னை வந்ததோ அதே மாட்டுப் பொங்கலிலிருந்தே பண்டிகையை மீட்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இந்த ஊர் மக்கள் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. ‘மாட்டுப் பொங்கல் கொண்டாடுபவர்களின் மாடுகளுக்கும் ஆபத்து நேரும்’ என்கிற அவநம்பிக்கையை உடைத்து, சென்ற வருடமே மாட்டுப் பொங்கலைக் கொண்டாடி விட்டார் கிராமத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர் இளங்கோ. இவர் தந்த தைரியத்தால் இந்தாண்டு சுமார் 15 குடும்பங்கள் பொங்கலையும் மாட்டுப்பொங்கலையும் கொண்டாட ஆயத்தமாகி விட்டார்கள்.
‘‘விவசாயிகள் அதிகமா வசிக்கிற பகுதி இது. கால்நடைகள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிடலாம். அப்படி இருக்கறப்ப அறுவடை நாளான பொங்கலையும் மாடுகளைக் கும்பிடுற மாட்டுப் பொங்கலையும் வேணாம்னு சொன்னா அது எவ்வளவு பெரிய தப்பு? நானும் சொல்லிப் பார்த்தேன். யாரும் கேக்கற மாதிரி தெரியலை. ‘இதுக்காக என்னை ஊரை விட்டே ஒதுக்கி வச்சாலும் பரவாயில்ல’ன்னு போன வருஷம்தான் துணிஞ்சு பொங்கல் வைக்க முடிவெடுத்தேன். உடனே சிலர் வந்து, ‘வாசல்ல வைக்கக் கூடாது... வீட்டுக்குள்ள வேணும்னா வச்சுக்கோங்க’ ன்னாங்க. அப்படிச் சொன்னவரைக்கும் சரின்னு சந்தோஷமா வீட்டுக்குள்ளயே வச்சோம். ஆனாலும் மனசு அடங்கலை.
‘பாதிக் கிணறு தாண்டிய பிறகு பய மெதுக்கு’ன்னு தான் மறுநாள் மாட்டுப் பொங்கலை வீட்டு வாசல்லயே வைக்க முடிவு பண்ணுனோம். கேள்விப்பட்டு வந்தவங்ககிட்ட, ‘ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தா அது என் மாட்டோட போகட்டும். இதுல யாரும் தலையிடாதீங்க’ன்னு சொல்லிட்டு, வளர்ற ஒரு கன்னுக்குட்டியை வச்சுத்தான் பூஜை பண்ணினோம். இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லாத்தான் இருக்கு.
காலம் எங்கேயோ போயிருச்சு. ‘நாய் வாய் வச்சிடுச்சு... நரி மோந்து பார்த்துடுச்சு...’ங்கிற மாதிரியான உப்புக்கல் பெறாத காரணத்தை எல்லாம் இப்பவுமா நம்பிட்டிருக்கிறது? வருஷம் பூராவும் நம்ம பிழைப்புக்கு உதவுற அந்த வாயில்லா ஜீவன்களுக்கு நன்றி சொல்ற நாளைப் புறக்கணிக்கிறது பெரிய கொடுமையில்லையா? எனக்கு ஆதரவா சிலர் இந்த ஆண்டு அவங்க வீடுகள்லயும் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிட்டாங்க. அடுத்தடுத்து ஊரே சேர்ந்து கொண்டாடும்ங்கிற நம்பிக்கை வந்திடுச்சு’’ என்கிறார் இளங்கோ.
இந்தாண்டு பொங்கல் கொண்டாட இருப்பவர்களில் பால் வியாபாரம் செய்யும் சந்திராவும் ஒருவர். ‘‘ஊர்க் கட்டுப்பாடாலதான் நமக்கெதுக்கு வம்புன்னு இருந்தோம். மத்தபடி நாய் கதையில எல்லாம் நம்பிக்கை இல்லை. வாத்தியார் போன வருஷம் மாட்டுப்பொங்கல் வச்சதைப் பார்த்த பிறகுதான் இப்போ பண்ணலாம்னு நினைச்சிருக்கோம். வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடிக்கச் சொல்லியாச்சு. ஊர் உலகமே கொண்டாடுறப்ப நாம மட்டும் ஒதுங்கி நின்னா நல்லாவா இருக்கு?’’ என்கிறார் சந்திரா.
ஆக, பொங்கலுக்குத் தயாராகி விட்டது சிங்கிலிபட்டி!
அய்யனார் ராஜன்
படங்கள்: சுப்பிரமணியம்