அமுதம் விஷமாகிறது; விஷம் மருந்தாகிறது. அளவுதான் எல்லாவற்றிலும் நன்மை தீமைகளை முடிவு செய்கிறது. தினமும் நாளிதழைத் திறந்தால் கள்ளக்காதலும், கொடூரக் கொலையும் தவிர்க்க முடியாத செய்திகளாகின்றன. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவியை செல்போனில் ஆபாசப் படம் எடுத்து மிரட்டுகிறான். பதினாறு வயது பள்ளி மாணவி, பெற்றோரை மறந்து யாரோ ஒருவனை நம்பி ஊரைவிட்டு ஓடத் தயாராக இருக்கிறாள்.
காமம் பற்றிய சரியான புரிதலை நம் சமூகம் கொண்டிருக்கவில்லை என்பதன் சாட்சிகள் இவை. தோலை வெள்ளையாக்க ஃபேஸ் கிரீம் வாங்கத் தெரிகிற கிராமத்துப் பெண்ணுக்கு, சுகாதாரத்திற்காக நாப்கின் வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. அறியாமைக்கும் அறிவின்மைக்கும் நடுவில் காமம் குற்றமாகவும், குற்றவுணர்ச்சியாகவும் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. காமம் பற்றிய முப்பதாண்டு கால ஆராய்ச்சியில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டிருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. உலக பாலியல் மருத்துவர்கள் மத்தியில் மதிப்பு பெற்ற இந்தியர்கள் இரண்டு பேர். மும்பையைச் சேர்ந்த பிரகாஷ் கோத்தாரி ஒருவர்; இன்னொருவர் நாராயண ரெட்டி.
‘‘1982, பிப்ரவரி 3ம் தேதி, நாட்டின் முதன்மையான ‘செக்ஸாலஜிஸ்ட்’ என்ற பேர் எடுக்க விரும்பினேன். கனவு செயலாக முப்பதாண்டுகள் போதவில்லை. மருத்துவத் துறையில் உயர் படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், ஆராய்ச்சி செய்ய அனுமதி வாங்கவே மூன்றாண்டுகள் ஆனது. பிஎச்.டி படிப்பிற்கு வழிகாட்டும் பேராசிரியர்கள், என்னுடைய ஆராய்ச்சிக்கு வழிகாட்ட மறுத்துவிட்டனர். ஹார்மோன் பற்றி ஆராயும் ‘என்டோக்ரைனாலஜி’ துறையின் தலைவர் கோவிந்தராஜன் ஒரு நிபந்தனையோடு வழிகாட்ட ஒப்புக்கொண்டார். ஆய்வுக்குத் தேவையான குறைபாடு உள்ளவர்களை நானே கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்டு ‘ஆண்களின் பாலியல் பிரச்னைகள்’ என்ற என் ஆய்வை முடித்தேன்.
மற்றவர்கள் தேர்ந்தெடுக்கத் தயங்கும் ஒரு துறையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்கிற பெருமை எனக்குள் எப்போதும் இருந்திருக்கிறது. மற்றவர்கள் போட்ட பாதையில் போகாமல், எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொள்வதில் இருந்த சவால் என்னை மிகவும் கவர்ந்தது. ‘அதெப்படி முடியாம போயிடும்?’ என்கிற கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொள்வேன். என்னையும் நிரூபித்துக் கொண்டே, நான் எடுத்துக் கொண்ட துறையையும் பிரபலப்படுத்த வேண்டிய சவால் இருந்தது. இது இரட்டை சவால். மற்ற மருத்துவர்களுக்கு அவர்கள் துறையை மக்களிடம் பிரபலப் படுத்தும் வேலை இல்லை.
ஒரு தனியார் மருத்துவமனையில், மற்ற டாக்டர்களைப் போல நானும் பிராக்டீஸ் செய்ய அனுமதித்தாலும், என்னை ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ ஆகவே வேலை செய்யச் சொன்னார்கள். பாலியல் குறைபாடு சிகிச்சைக்கு வருபவர்களை என்னிடம் அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ‘செக்ஸாலஜிஸ்ட்’ என்று பெயர்ப் பலகை வைக்க அனுமதி இல்லை. மற்ற நோயாளிகள் அந்த மருத்துவமனைக்கு வரத் தயங்குவார்களாம். ‘ஆட்கள் வரத் தயங்குவார்கள் அல்லது வரமாட்டார்கள் என்பதால் அந்தத் துறையே வேண்டாம்’ என்று மருத்துவ உலகமும், ‘அதற்கெல்லாம் எங்கே டாக்டர் இருக்கிறாங்க?’ என்ற ஏக்கத்தில் மக்களும் இருப்பதை அனுபவபூர்வமாகப் பார்த்தேன். வரிசையாக என்னிடம் சிகிச்சைக்காக வந்தவர்கள் அதை நிரூபித்தார்கள்.
‘இந்தத் துறையில் எப்படி ஜெயிக்கப் போகிறோம்’ என்ற பயம் இதுவரை ஒரேயொரு முறைதான் வந்திருக்கிறது. ‘இந்தியா முழுவதும் உள்ள ஸ்பெஷலிஸ்ட்டுகளைக் கூட்டி ஒரு மாநாடு போட்டால், தமிழகத்தில் இந்தத் துறையைப் பிரபலப்படுத்த முடியும்’ என்று சொன்னார்கள். மாநாட்டு கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளைத் திரட்டி புத்தகம் போடுவார்கள். அதில் வருகிற விளம்பர வருவாய் மூலம் மாநாட்டுக்கு ஆகிற செலவை ஈடு செய்யமுடியும். பொதுவாக இதுபோன்ற கருத்தரங்கத்திற்குப் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வார்கள். ‘செக்ஸ் பற்றி பேசுற புத்தகத்துல எப்படி விளம்பரம் தர முடியும்?’ என்று அவர்களும் மறுத்து விட்டார்கள். கையிலிருந்து பணம் போட்டுத் தாங்க முடியுமா என்று பயம் வந்தது. டாக்டர் பிரகாஷ் கோத்தாரியும் என்னுடைய உறவினர் ஒருவரும் விளம்பரங்களை வாங்கித் தந்தனர். ‘இந்த ஊர்ல எப்படி பொழைக்க முடியும்’ என்ற கேள்வி முதலும் கடைசியுமாக அப்போதுதான் வந்தது.
வேத காலத்திலேயே செக்ஸை அறிவியலாக அணுகியவர்கள், இன்று அதைப் பற்றி பேசக்கூட அவமானமாகக் கருதுவதை நினைத்து வேதனை எழுந்தது. செக்ஸ் பற்றி பேசுவதும், படிப்பதும், விவாதிப்பதும், எழுதுவதும் அவமானம் அல்ல; அவசரத் தேவை என்பதை மருத்துவ உலகிற்குப் புரிய வைக்க முயற்சிகள் எடுத்தேன். 1985ம் ஆண்டு உலகில் உள்ள மிக முக்கியமான செக்ஸாலஜிஸ்ட்டுகளை இந்தியாவுக்கு வரவழைத்து டெல்லியில் மாநாடு நடத்தினோம். மருத்துவத் துறையில் நல்ல அங்கீகாரம் பெற்றுத் தந்தது அந்த மாநாடு. பல்துறை மருத்துவர்கள் வந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர்.
மத்திய மந்திரி வந்து தொடங்கி வைத்தார். எதிர்பார்த்தபடி ஓரளவு ஆங்கில நாளேடுகளில் கவரேஜ் கிடைத்தது. ஆனாலும், தமிழ்ப் பத்திரிகைகளில் மௌனம் நீடித்தது. எது எதற்கோ சந்தேகம் கேட்டு வாசகர்கள் கடிதம் எழுத, பாலியல் சந்தேகங்களைக் கேட்டு எழுதலாம் என்ற யோசனையுடன் பல பத்திரிகை அலுவலகங்களுக்கு ஏறி இறங்கினேன். ஒரு பத்திரிகையில் எழுத ஆரம்பித்ததும், எல்லா பத்திரிகையிலும் செக்ஸ் தவிர்க்க முடியாத பக்கமாக மாறியது.
1996ல் சன் டிவியில் ‘ஆலோசனை நேரம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பத்து ஆண்டுகள் போராடியும் என்னால் கொண்டு சேர்க்க முடியாத விழிப்புணர்வை, 40 வாரத்தில் சன் டி.வி. சர்வ சாதாரணமாக செய்து காட்டியது. ‘செக்ஸ் பற்றி பேசுவது அசிங்கம் இல்லை’ என்பதை மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் புரிய வைப்பதில் மீடியாக்களுக்குப் பெரிய பங்கு இருந்தது. காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிடுவது போல, பாலியல் குறைகளுக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டால் சரியாகிவிடும் என்பதை உணர்த்த முடிந்தால், ஒளித்து மறைத்துப் பேசுகிற தவறு நடக்காது.
என்னிடம் கணவன் சிகிச்சைக்கு வந்தால், மனைவியை அழைத்துப் பேசுவேன். மனைவி வந்தால் கணவனை அழைத்துப் பேசுவேன். சில நேரம் வீட்டுப் பெரியவர்களை அழைத்துப் பேச வேண்டி இருக்கும். மருந்து, மாத்திரைகள் தேவைப்படாமல், பத்து நிமிட கவுன்சிலிங்கில் தீர்ந்துவிடுகிற பிரச்னையை விவாகரத்து வரை கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். வழிதவறிப் போகிற இளைஞர்களுக்கு முறையான பாலியல் கல்வி இருக்குமானால், நாட்டிற்கும் வீட்டிற்கும் பல நன்மைகள் நடக்கும். புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே பாலியல் விழிப்புணர்வு வேண்டும் என்கிற நினைப்பும் நம் சமூகத்தில் இருக்கிறது. குழந்தை பிறந்துவிட்டால், அதன்பிறகு செக்ஸ் அவசியமில்லை என்கிற மூடநம்பிக்கை கணவனுக்கோ, மனைவிக்கோ இருந்துவிட்டால்
துரோகம், சண்டை, ஏமாற்றம், ஏக்கம் போன்ற பல கேடுகள் சூழ்ந்து விடும். காமம் அடக்கி ஆள வேண்டிய உணர்வு அல்ல; ஒரு அழுகையைப் போல, சிரிப்பைப் போல அனுபவித்துக் கடந்து வரவேண்டிய உணர்வு.
எந்த மருத்துவமனையிலும் ‘செக்ஸாலஜிஸ்ட்’ என்று பெயர்ப் பலகை வைக்க அனுமதிக்காதபோது, முதல்முறையாக அப்பல்லோ மருத்துவமனை அந்த சுதந்திரத்தைக் கொடுத்தது. தனியாக க்ளினிக் வைத்த பிறகு, ‘டாக்டர் நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்’ என்று கம்பீரமாக பெயர்ப் பலகை வைத்தேன். ஒரு நேம் போர்டு வைப்பதையே சாதனையாகக் கருதும் சூழலில், அதை ஒரு துறையாக எடுத்து முழுநேரத் தொழிலாக செய்ய நினைப்பதில் எவ்வளவு சவால்கள் இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. உயிர்களின் தேவையாக இருக்கும் ஒரு துறையை தேர்ந்தெடுத்துப் படித்து ஸ்பெஷலிஸ்ட் ஆக, இன்று தமிழகத்தில் வாய்ப்பு இல்லை. காசு வாங்காமல் சொல்லித் தர நான் தயாராக இருந்தும் கற்றுக்கொள்ள ஆள் இல்லை. மருத்துவப் பல்கலைக்கழகம் ‘செக்ஸாலஜி’யை ஒரு துறையாக அங்கீகரித்து முறையான மேற்படிப்புக்கு வாய்ப்பு தந்தால்தான் படிக்க வருவார்கள். அதற்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது.
நம்முடைய முன்னோர்கள் செக்ஸை அறிவியலாகப் பார்த்தனர் என்பதற்கும், ஆண் பெண் உறவில் பல நுணுக்கங்களைக் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் ரிக் வேதத்திலிருந்து சான்றுகள் இருக்கின்றன. மேல் நாட்டிலிருந்து காப்பியடிக்காமல், காமத்தைத் தனிக்கலையாகக் கருதிய முன்னோர்களின் அறிவுச் செல்வத்தை மீட்டெடுப்பது என்னுடைய வாழ்வின் குறிக்கோள். எத்தனை வயதானா லும் அதற்கான முயற்சி மட்டும் தொடரும்’’ என்கிற நாராயண ரெட்டிக்கு ‘வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் செக்ஷுவல் ஹெல்த்’ என்கிற சர்வதேச அமைப்பு தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவித்திருக்கிறது. உலக அளவில் முக்கியமான அங்கீகாரமாக அது பார்க்கப்படுகிறது. இன்னும் நம் நாட்டில் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்பது மற்றவர்களின் கருத்து.
‘காந்தியைப் பற்றி நல்ல படத்தை வெள்ளைக்காரர்கள்தான் எடுப்பார்கள்’ என்ற வாக்கியம் இன்னும் சில ஆண்டுகளில் நம் பழமொழி ஆனாலும் ஆகிவிடும். விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்