வெற்றியின் பாதையில் தங்களை திருப்பிவிட்ட தருணங்களை, ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்
டாக்டர் சுரேந்திரன்
குளிரூட்டப்பட்ட கட்டிடம். பளிச்சென்று மின்னுகிற தரை. ஊழியர்களின் கனிவான பார்வை. கண்ணியமான வார்த்தைகள். சொத்துகளை விற்றாலும் கரைசேர முடியாத தனியார் மருத்துவமனைகளுக்குரிய பளிச் சூழல். அங்கு நோயாளிகள் மட்டும் ஏழைகளாக இருக்கிறார்கள். லட்சங்களைக் கொட்டினாலும் கிடைக்காத தரமான மருத்துவம் அரசு மருத்துவமனையில், ஏதிலிகளான மக்களுக்குக் கிடைக்கிறது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், ‘கேஸ்ட்ரோ என்ட்ராலஜி’ என்கிற வயிறு, கல்லீரல், கணையம் தொடர்பான துறையில், நம் கண்கள் நம்ப முடியாத காட்சிகள் அரங்கேறுகின்றன. அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் பங்களிப்பில், அரசு மருத்துவமனையின் இலக்கணம் மாறி இருக்கிறது. மாற்றியிருக்கிறார் டாக்டர் சுரேந்திரன். இந்தியாவிலேயே முதல் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற அரசு மருத்துவமனையாக ஸ்டான்லி மருத்துவமனை பெருமை பெற்றிருக்கிறது.
‘‘தமிழ்நாடு அளவில் முதல் ரேங்க் எடுத்த எனக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை. அங்கே எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. பொறுப்பில் இருந்தவர்களுக்கு நடுவில் ஈகோ யுத்தம் நடந்தது. எனது துறைக்கு ஆபரேஷன் தியேட்டரே இல்லை. நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லை. வேலையே செய்யாமல் சும்மா இருந்தால் நல்லவன் என்றும், வேலை செய்தால் பொல்லாதவன் என்றும் சொல்கிற விநோதத்தை முதன்முதலில் பார்த்தேன். ஒரு வேலையும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் நரகமாக நகரும். பஸ் கட்டணத்துக்குக்கூட வழியில்லாமல் நடந்தே வரும் ஏழைகள், கண் முன்னால் ரத்த வாந்தி எடுத்து இறந்து போவார்கள். நான் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்.
‘அரசு மருத்துவமனை ஏன் இப்படி இருக்கணும்... மாத்தவே முடியாதா’ என்ற கேள்விகள் எனக்குள் வந்தன. அதற்கான பதில் தேட ஆரம்பித்தேன். சென்னையில் என் துறை சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பார்த்து, ‘எனக்கு போஸ்டிங் குடுத்திட்டீங்க. சம்பளம் குடுக்கிறீங்க. வேலை குடுங்க’ என்று பல முறை அலைந்து கேட்டேன். ஏழு படுக்கைகளை ஒதுக்கி ஆர்டர் கிடைத்தது. அதைக் கொண்டு போய் மதுரையில் கொடுத்தால், சிரித்தார்கள். ‘எப்போ தரணும்னு ஆர்டரில் இல்லை, பொறுமையா தர்றோம்’ என்று சும்மா உட்கார வைத்தார்கள். இந்த நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்ய வாய்ப்புகள் வந்தபடி இருந்தன. அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு, தனியார் மருத்துவமனைக்கு வேலை செய்ய குற்றவுணர்ச்சியாக இருந்தது. உயர் அதிகாரிகளை நச்சரிக்க ஆரம்பித்தேன். எரிச்சலான அதிகாரி, ‘திருநெல்வேலிக்கு மாத்தவா?’ என்று கோபமாகக் கேட்டார். நான் உற்சாகமாகத் தலையாட்டினேன். ‘எங்கேயும் போறேன். வேலை மட்டும் கொடுங்க’ என்றேன்.
சென்னை அண்ணா நகர் அரசு மருத்துவமனைக்கு மாறுதல் ஆனேன். மதுரையோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய மருத்துவமனை. ஆனால் ஆறு மாத வனவாசத்திற்குப் பிறகு வேலை செய்யும் வாய்ப்பு இருந்தது. வெறியோடு வேலை பார்த்த நாட்கள் அவை. நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தார்கள். நாங்கள் ஆபரேஷனாக செய்துகொண்டிருந்தோம். 50 பைசா நாணயத்தை விழுங்கிவிட்டு, உயிருக்குப் போராடிய ஒரு சிறுமியை நாங்கள் காப்பாற்றிய விஷயம், செய்தியாக நாளிதழில் வந்தது. எனக்கு பணி மாறுதல் வழங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மருத்துவமனைக்கு வந்து பார்த்தார். உண்மையாக வேலை பார்த்த எங்கள் மீது மதிப்பு கூடியது. அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ உபகரணங்கள் உபயோகத்தில் இருப்பது பற்றிய ஆய்வறிக்கை தரும்படி என்னைப் பணித்தார்.

நெஞ்சு பதறும் அலட்சியங்களை நேரடியாகப் பார்த்தேன். விலை உயர்ந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் துணி சுற்றி வைத்திருப்பதையும், அப்படி ஒரு உபகரணம் இருப்பதே தெரியாமல் மருத்துவர்கள் இயங்குவதையும் கண்டறிய முடிந்தது. பல லட்ச ரூபாய் மதிப்புடைய ‘வென்ட்டிலேட்டர்’ சுவாசக் கருவியை, ஒருமுறைகூட பயன்படுத்தாமல் மூடி வைத்திருந்தார்கள். அதற்கான காரணம் தேடினால் இன்னும் பெரிய அதிர்ச்சி. 50 ரூபாய் மதிப்புடைய ஒரு பிளக் இல்லை. அதைக் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள். சில மாதம் கழித்து, ‘பிளக் வாங்க இந்த வருடம் பட்ஜெட் இல்லை’ என்று பதில் வருகிறது.
இந்த 50 ரூபாய் பிரச்னையில், பல உயிர்களைப் பாதுகாக்கிற சுவாசக் கருவியை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் மட்டும் எட்டு கருவிகள் இப்படி பயன்படுத்தப்படாமல் இருக்க, ‘இரண்டு புதிய வென்ட்டிலேட்டர்கள் வேண்டும்’ என்று கடிதம் எழுதி காத்திருக்கிறார்கள். இது ஒரு சோறு பதம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் இதே கோளாறுகள். ‘இதையெல்லாம் ஆய்வறிக்கையில் எழுதி வம்பில் மாட்ட வேண்டாம்’ என்றார்கள். நான் ஒன்றுவிடாமல் எழுதிக் கொடுத்தேன்.
அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை கொடுப்பது பற்றிய சிந்தனையும் வேட்கையும் எனக்குள் வளர்ந்து கொண்டே வந்தது. ஸ்டான்லி மருத்துவமனையில் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றேன். தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் செலவாகிற ஆபரேஷனை, 5 ஆயிர ரூபாய் செலவில் தரமாக அரசு மருத்துவமனையில் செய்யலாம் என்கிற யோசனையை முன்வைத்தேன். ‘கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல யாரு காசு தருவா?’ என்று கேட்டனர். ‘ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை.
பணக்காரர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. நடுத்தர வர்க்கம் எங்கு போவது என்று தெரியாமல் முழிக்கிறது. அவர்களால் சொற்ப தொகை செலவழிக்க முடியும். அந்தப் பணத்தை வைத்து ஏழைகளுக்கும் இன்னும் நல்ல சிகிச்சை அளிக்க முடியும்’ என்கிற என் யோசனையை சந்தேகத்தோடு பார்த்தனர். மக்கள் மேல் அக்கறையுள்ள சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புரிந்து கொண்டு அதற்கான சிறப்பு அனுமதி கிடைக்க பல்வேறு வகையில் உதவினர். 1999ம் ஆண்டு எங்களுக்கான கனவை நாங்களே வடிவமைக்கத் தொடங்கினோம்.
‘நடைமுறைக்கு ஒத்துவராது’ என்று பலரும் சொன்ன திட்டம், முதல் மாதத்தில் எல்லா செலவும் போக 22 ஆயிரம் ரூபாய் அரசு மருத்துவமனைக்கு வருமானம் ஈட்டியது. 40 சதவீதமாக இருந்த நோயாளி இறப்பு சதவீதத்தை 4 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. இப்போது 0% என பெருமையோடு சொல்ல முடியும். முழுக்க முழுக்க ‘தமிழ்நாடு மெடிக்கல் கார்ப்பரேஷன்’ மூலமாக பணப் பரிமாற்றம் நடப்பதால், தவறுக்கு வாய்ப்பு இல்லை.
நிரூபித்துவிட்ட பெருமிதத்தோடு நின்றுவிட்டால் எப்படி? ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ எங்களின் அடுத்த கனவானது. மிகவும் கடினமான இந்த ஆபரேஷன் செய்ய வெளிநாடுகளில் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. இந்தியாவில் இது 40 லட்சம் ரூபாய். பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற இதை அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்குச் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோம். 18 மணிநேரம் தொடர்ந்து பல மருத்துவர்கள் ஒன்றுகூடி செய்கிற அறுவை சிகிச்சை. ‘எட்டு மணி நேரம் இருக்கவே கஷ்டப்படும் அரசு மருத்துவர்கள்
18 மணிநேரம் எப்படி தொடர்ந்து வேலை செய்வார்கள்’ என்று கேட்டனர். பலமுறை அலைந்தும் பயனில்லை. எங்கள் துறையில் சிகிச்சை பெற்ற நிதித்துறை செயலாளர், பத்து வருடங்களாக எங்கள் திட்டம் கிடப்பில் இருப்பதை அறிந்தார். ஏழை மக்களுக்கு நன்மை கிடைக்க அவர் உதவினார்.
அரசு நிதி ஒதுக்கிய அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. நல்ல எண்ணம் கொண்டவர்களின் ஒத்துழைப்போடு 2009ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி இரவு 11 மணிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில் ‘லிவர் டிரான்ஸ்ப்ளான்ட் ஆபரேஷன்’ தொடங்கியது. 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு பிடிக்கும் ஒரு ஆபரேஷனை, ஒரு சாதாரண கூலித் தொழிலாளியின் மனைவிக்கு இலவசமாகச் செய்தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றிய நாளில் நான் மருத்துவர் படிப்பு படித்ததின் அர்த்தம் வெளிப்பட்டது. இதுவரை இப்படி 30க்கும் மேற்பட்ட ஏழைகளுக்குச் செய்திருக்கிறோம்.
மத்திய சுகாதாரத் துறையில் பொறுப்பிலிருந்த நண்பர், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பி.சி.ராய் விருதுக்கு என்னை விண்ணப்பிக்கச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். விருதை விண்ணப்பித்து வாங்க விருப்பம் இல்லை. அதற்கும் மேல், தன் வாழ்வையே அரசு மருத்துவமனைகளுக்காக அர்ப்பணித்த மருத்துவ நிபுணர்கள் வெங்கடசாமி, தம்பையா போன்ற மேதைகளுக்கே கிடைக்காத விருதை நான் வாங்கக் கூச்சமாக இருந்தது. ‘எனக்கு விருது தருவதைவிட, அரசு மருத்துவமனையில் ஸ்டெம்செல் உயர் ஆராய்ச்சி மையம் அமைக்க வாய்ப்பு தந்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றதும் அவர் சிரித்துவிட்டார்.
சில மாதங்களில் அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்தபோது, விருதை விட அதிகம் மகிழ்ந்தேன். 2010ல் ஓய்வு பெற்றுவிட்ட பிறகும், ஸ்டெம்செல் ஆராய்ச்சிக்காக இன்னும் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே என் பணி தொடர்கிறது. பலரது கூட்டு முயற்சியில் உருவான இந்த நன்மைகள், எனக்குப் பின்னால் பொறுப்பெடுக்கிற மருத்துவர்களால் தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் டாக்டர் சுரேந்திரன்.
அவரின் அர்ப்பணிப்புள்ள மருத்துவப் பணிக்கு, உயிர் பிழைக்கும் ஏழைகள் நன்றிகளைக் காணிக்கையாக்குவர். அவரின் அப்பா ராஜகோபாலின் ஆத்மா பெருமிதம் கொள்ளும்!
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்