உஷார் மம்தா!
முதல்வர் ஆனதிலிருந்து போன மாதம் வரை மக்களோடு நெருங்கிப் பழகத் தயக்கம் காட்டியதில்லை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. அப்படித்தான் கடந்த மாதம் ஒரு விழாவில் பெண்கள் படை அவரை சூழ்ந்துகொண்டு கொஞ்சியது. எல்லோரையும் வழியனுப்பிவிட்டுப் பார்த்தால், மம்தா கையிலிருந்த வாட்ச்சையும் வளையல்களையும் காணோம். பாதுகாப்பு அதிகாரிகள் படாதபாடுபட்டு வாட்ச்சை எங்கிருந்தோ கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் மம்தாவின் அம்மா ஆசையாக அவருக்கு அணிவித்த வளையல்கள் களவு போனது போனதுதான். இப்போதெல்லாம் உஷாரான தூரத்தில் இருந்தபடியே குறை கேட்கிறார் மம்தா.
சைனீஷ் மோடி!
‘உள்ளே விடுவேனா பார்’ என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தர மறுத்து அடம்பிடிக்கிறது அமெரிக்கா. ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற ஃபார்முலாபடி தனது கவனத்தை சீனா பக்கம் திருப்பிவிட்டார் மோடி. குஜராத் தொழிலதிபர்களோடு இரண்டு முறை சீனா போய்வந்துவிட்ட மோடியை சீனப் பிரதிநிதிகள் அடிக்கடி வந்து சந்திக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சீன உணவுகள்மீது மோடிக்கு ஆர்வம் வந்துவிட, குஜராத்தில் சைனீஸ் அயிட்டங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் அவர். விரைவில் சைனீஸ் கேட்டரிங் கல்லூரிகள் பல குஜராத்தில் துவக்க விழா காண்கின்றன.
டென்ஷன் சி.பி.ஐ!
ஒரு சாதாரண நர்ஸ் நினைத்தால், ஒரு மாநில அமைச்சரவையையே ஆட்டம் காணச் செய்யலாம் என்பதற்கு உதாரணம் பான்வாரி தேவி. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உயரதிகாரிகள் என பலரோடு நெருக்கமாக இருந்த இவர், கடந்த செப்டம்பர் முதல் தேதி காணாமல் போனார். மகிபால் மதர்னா என்ற அமைச்சருடனும், இன்னொரு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுடனும் இவர் நெருக்கமாக இருக்கும் ஆபாச சி.டி.க்கள் உள்ளூர் சேனல்களில் வெளியானபிறகு இவர் காணாமல் போனார். இந்த சி.டி.க்களை வைத்து இவர் பணம் பறிக்க முயன்றதாகவும், அதனால் இவரைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் எனவும் தகவல்கள் கசிய, மதர்னா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். வழக்கு இப்போது சி.பி.ஐ. கையில்! ‘சீக்கிரமே பான்வாரியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என சி.பி.ஐக்கு கோர்ட் நெருக்கடி கொடுத்தபடி இருக்கிறது. வழக்கமாக சிறைக்குப் போனதும்தான் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வரும். கைதுக்கு முன்பாகவே மதர்னா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.