பிற மாநிலங்களுக்கு ரயிலில் செல்லும் தமிழக மக்களுக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் என்றால், தமிழகத்தின் கடைக்கோடி தென்மாவட்டங்களை தலைநகர் சென்னையோடு இணைக்கும் உயிர்ச்சங்கிலியாக இருப்பது எழும்பூர் ரயில் நிலையம். சென்னை ரயில் போக்குவரத்தின் இருபெரும் முனையங்களாக சென்ட்ரலும் எழும்பூரும் செயல்படுகின்றன. மூன்றாவது முனையமாக தாம்பரத்தை மாற்றுவதற்காக பணி நடக்கிறது. ‘இதுவரை தென்னக மக்களை ஏற்றி எழும்பூர் வந்துகொண்டிருந்த ரயில்களை தாம்பரத்திலேயே நிறுத்தச் செய்யும் முயற்சி இது’ என்கிறார்கள் பலரும்.
இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக டிராக்கில் குதித்துள்ளது ‘தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம்’ அமைப்பு. அமைப்பின் தலைவர் டாக்டர் ஜெயச்சந்திரன் இதுபற்றிக் கொதிக்கிறார்...
‘‘எழும்பூரிலிருந்து 20 ரயில்கள் வரை தினமும் தென் தமிழகம் சென்று வருகின்றன. ஒரு ரயிலுக்கு இரண்டாயிரம் பேர் என்று எடுத்துக்கொண்டால் நாற்பதாயிரம் பயணிகள் வரை தினமும் வருகிறார்கள். சில நிமிட பயணத்தில் வேண்டிய இடங்களுக்குப் போகிறார்கள். இந்த வசதி ரயில்வே துறையின் திட்டத்தால் பறிபோய்விடும். கடந்த மூன்று மாத காலமாக எழும்பூரிலிருந்து வட மாநிலங்களுக்குப் போய் வரும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடமாநில நகரங்களுக்கு இன்னும் அதிக ரயில்களை அங்கிருந்தே விடப் போகிறார்கள். எழும்பூர் ரயில் நிலையம் நெருக்கடியாகிவிட்டது என்பதால்தான் தாம்பரத்தை டெர்மினல் ஆக்க முயற்சிக்கிறார்கள். இந்த நெருக்கடி எழும்பூரிலிருந்து தென்னகத்துக்குப் போகும் ரயில்களால் ஏற்பட்டது அல்ல. வட இந்திய ரயில்களால் ஏற்பட்டது’’ என்று ரயில்வே திட்டத்தின் பின்னணியை விளக்குகிறார் அவர்.

‘‘இப்போதைக்கு தென் மாவட்டங் களிலிருந்து எழும்பூர் நோக்கி வரும் ரயில்கள் எல்லாமும் தாம்பரத்தில் நின்றால்கூட அங்கு இறங்குபவர்கள் 10 சதவீதத்தினரே. மாம்பலத்தில் 30 சதவீதம் பேர் இறங்குகின்றனர். மீதியுள்ள 60 சதவீதத்தினர் எழும்பூரில்தான் இறங்குகின்றனர். ‘நகரம் நெருக்கடியாகும்போது நகரத்துக்கு வெளியே அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதுதான் சிறந்தது’ என்பார்கள் பொதுவாக.
ஆனால், இந்தக் கருத்து ரயில் திட்டங்களுக்குப் பொருந்தாது. ரயில் போக்குவரத்து என்பதே ஒரு நகரத்தின் மையப்பகுதியைத் தொடுவதுதான். உலகில் எல்லா முக்கிய ரயில் நிலையங்களும் நகரத்தின் இதயப்பகுதியில்தான் அமைந்துள்ளன. ஒரு ரயிலின் ஓடுபாதை என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு கட்டுமானத்தால் உருவாக்கப்படுகிறது. அது சாலைப் போக்கு வரத்து போல அபாயம் நிறைந்தது அல்ல. தென்னகம் போகும் ரயில்களை தாம்பரத்திலிருந்து இயக்கினால் தாம்பரத்திலிருந்து மத்திய சென்னைக்கோ வடசென்னைக்கோ போய்ச்சேர இரண்டு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை ஆகும். பணமும் விரயமாகும். அந்த ரயில்களிலிருந்து இறங்கும் நாற்பதாயிரம் பேரைச் சுமந்து செல்ல ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் தாம்பரத்திலிருந்து நகரத்துக்குள் ஓடத்தொடங்கும். இது நகரத்தின் மோசமான சாலைப்போக்குவரத்தை இன்னும் மோசமாக்கிவிடும்’’ என்கிறார் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏ.வி.எஸ்.மாரிமுத்து.
எழும்பூர் நெருக்கடியைத் தவிர்க்க வேறு என்னதான் வழி? பயணிகள் அமைப்பின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் பாலிடம் கேட்டோம்.
‘‘தென்னகத்தின் முதல் ரயில் நிலையம் ராயபுரம். இது இன்று பராமரிப்பற்றுக் கிடக்கிறது. எழும்பூர், சென்ட் ரல் நிலையங்களைவிட பரப்பளவில் நீண்டது. சிமென்ட் கம்பெனிகள், யூரியா கம்பெனிகளின் சரக்குகளை இறக்கும் இடமாக மாறப்போன இதை பல போராட்டங்களுக்குப் பின் மீட்டோம். இன்று சில புறநகர் ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன. அதைவிட முக்கியம், எழும்பூர் வழியாக வட மாநிலங்களுக்குப் போகும் ரயில்கள்கூட ராயபுரம் வழியாகத்தான் செல்கின்றன. இந்த ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கினால் பல பிரச்னைகள் தீரும். வட இந்தியர்கள் பலரும் வடசென்னை, மத்திய சென்னையில்தான் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு வசதியான இடமாகவும் ராயபுரம் விளங்கும்!’’ என்று வாதிடுகிறார்.
ஏற்கனவே தென் மாவட்டங் களிலிருந்து வரும் பேருந்துகளை சென்னைக்குள் நுழையவிடாமல், தாம்பரத்துக்கு வெளியிலேயே பைபாஸில் திருப்பி விடுவதால் அவதிப்படும் மக்களுக்கு இது அடுத்த இடி! தமிழகமெங்கும் விழிப்புணர்வுப் போராட்டங்கள் நடத்தப் போவதாக கூறும் இந்த அமைப்பினர், இதை விடப்போவதில்லை என்று சூளுரைக்கிறார்கள்.
இதுபற்றி தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டோம். ‘‘எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களை தாம்பரத்துக்கு மாற்றும் திட்டம் ஏதும் தென்னக ரயில்வேயிடம் இல்லை. நெல்லை, நாகர்கோவிலுக்கு வருங்காலத்தில் இயக்கப்போகும் ரயில்களுக்காகத்தான் தாம்பரம் டெர்மினல் கட்டப்படுகிறது’’ என்று பதிலளித்தார்கள்.
டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்