‘‘தைரியம் இருந்தா மனசு சொல்றபடி நட... அதுக்கான விளைவுகளை சந்திக்கத் தயாரா இரு... அந்த தைரியம் இல்லாட்டி, இருக்கிறதை வச்சுக்கிட்டு சந்தோஷமா இரு...’’ & தனுஷ் சொன்ன இந்த வாக்கியம் ஏதோ ஜென் தத்துவமோ, ஓஷோவின் சிந்தனைகளோ இல்லை. செல்வராகவன் இயக்கி அவர் நடித்திருக்கும் ‘மயக்கம் என்ன’ படத்தின் கரு.
‘‘இதுக்கு மேல இந்தப் படத்தைப் பத்தி ஏதும் சொல்ல முடியாது. ஏன்னா கொஞ்சம் சொன்னாலும், அப்படியே படத்தை முழுசா சொல்ல வேண்டி வரும். ஆனா இந்தப்படத்துக் கதைல ஒவ்வொரு இளைஞனும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்க முடியும்...’’ என்ற தனுஷுக்கு செல்வராகவன் இயக்கத்தில் அமையும் படங்கள் ‘சம்திங் ஸ்பெஷல்’தான். எனவே ‘ஆடுகளத்’துக்குப் பின் வந்த படங்களில் கவனிக்கத்தக்க படமாக வரும் இதிலும் அவரது நடிப்புக்கு இன்னொரு தேசிய விருதை எதிர்பார்க்கலாமா..?
‘‘நான் ‘ஆடுகளத்’துல நடிக்கும்போது, ‘இந்தப்படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்’னு நினைச்சுக்கிட்டு நடிக்கலை. அந்தக்கதை என்ன கேட்டுதோ அதைக் கொடுத்தோம். அது தேசிய விருதைக் கொடுத்தது. இந்தப்படமும் அப்படித்தான். இதுக்கு என்ன தேவையோ அதை முழுமையா கொடுத்திருக்கோம். இனி ரசிகர்களும், விமர்சகர்களும்தான் சொல்லணும். ஆனா எந்தப்படத்திலும் இல்லாத அளவுக்கு என் நடிப்பு மேல நம்பிக்கை வச்சு, ‘இப்படி நடி...’ன்னு என்னைப் பணிக்காம என்னால சரியா செய்துட முடியும்னு என்னை சுதந்திரமா செல்வா நடிக்க விட்டதே எனக்குக் கிடைச்ச இன்னொரு தேசிய விருதுதான்...’’
‘‘நடிப்பைத் தாண்டி பாடகர் ஆனீங்க. திடீர்னு இந்தப்படத்துல தொடங்கி கவிஞராவும் மாறிட்டீங்களே..?’’
‘‘அது இயல்பா அமைஞ்சது. ஆனா நான் கவிஞனா மாற வேண்டிய கட்டாயத்துக்கு இன்னும் இலக்கிய உலகத்துல வெற்றிடம் அதிகமா இல்லை. வழக்கமாவே ஒரு டியூன் வந்ததும் அதுக்கு டம்மி லிரிக் ஒண்ணு எழுதிப் பார்ப்பார் செல்வா. அப்படி இந்தப்படத்தோட ஒரு டியூனை ஜி.வி.பிரகாஷ் கொடுக்க, அதுக்கு பத்து நிமிஷத்துல ஒரு டம்மி லிரிக் எழுதிப் பார்த்தேன்.
அதுதான் ‘காதல் ஒரு காதல்...’ங்கிற பாட்டு. ரெண்டு நண்பர்கள் ஜாலியா பேசிக்கிற விஷயம் அதுங்கிறதால அதுக்கு கவிஞரெல்லாம் தேவைப்படலை. செல்வாவுக்கும் பிடிச்சு, அதுவே இருக்கட்டும்னு சொன்னார். அடுத்த டியூன் கொச்சியில நடிச்சுக்கிட்டிருக்கும்போது வந்தது. அதுக்கும் 15 நிமிஷத்துல ‘பிறை தேடும் இரவிலே எதைத் தேடி அலைகிறாய்..?’னு எழுதினேன்.
அதுவும் செல்வாவுக்குப் பிடிச்சுப்போக, அடுத்த ‘ஓட ஓட தூரம் குறையலை...’ பாடலை கம்போஸிங்லயே எழுத வச்சார். இப்படி ரெண்டரை பாடல்கள் இந்தப்படத்துக்காக எழுதினேன்.
அதனால ஐஸ்வர்யா டைரக்ட் பண்ற ‘3’லயும் ஒரு பாடல் எழுத கம்பல்ஷன் வந்தது. அதை இங்கிலீஷும், தமிழும் கலந்து ‘வொய் திஸ் கொல வெறிடி..?’ன்னு எழுத, அந்தப்பாட்டு நெட்ல லீக் ஆகி, ஆன வேகத்துல ஹிட்டும் ஆகிட... அதை அடுத்த சில நாட்களிலேயே வெளியிட்டோம். இப்படி எழுதிய மூணு பாடல்களும் ‘ஹாட்ரிக் ஹிட்’டாக, ‘3’ படத்தோட அஞ்சு பாடல்களை என்னை எழுத வச்சுட்டாங்க ஐஸ். இப்படித்தான் கவிஞரானேன்.’’
‘‘அடுத்து டைரக்டராவும் ஆகறீங்க போலிருக்கே... அதுவும் இந்தியில?’’‘‘என் அப்பா டைரக்டர். அண்ணன் டைரக்டர். இப்ப மனைவியும் டைரக்டர். நான் டைரக்டர் ஆகலேன்னாதான் ஏன்னு கேக்கலாம். யெஸ்... டைரக்ட் பண்ணப்போறேன். தமிழ்ல என்னை நடிகனா ஏத்துக்கிட்டாங்க. அது அப்படியே தொடரட்டும். தெலுங்கிலயும் நடிகனாவே அறிமுகப்பட்டிருக்கேன். அதனாலதான் அது இந்தியில இருக்கட்டும்னு நினைச்சேன். ஆனா அது வேற களம். வேற மொழி. அதுக்கான முன்னேற்பாடுகளை ஒன்றரை வருஷங்களா மேற்கொண்டிருக்கேன். வர்ற பிப்ரவரியில முறையா அறிவிக்க இருக்கேன். இந்தியில ஒரு பெரிய ஹீரோதான் நிச்சயம் நடிப்பார்..!’’
‘‘ டைரக்ஷனுக் கான பயிற்சி எப்படி..?’’‘‘என் ஷூட்டிங்கு களுக்கு நடுவிலேதான். நிறைய குறும்படங்கள் ஸ்கிரிப்ட் எழுதி இயக்கி யிருக்கேன். எந்த லொகேஷன்ல இருக்கிறேனோ அதுக்குத்தக்க ஸ்கிரிப்ட் எழுதி, கிடைக்கிற இடைவெளியில ஷூட் பண்ணி முடிச்சுடுவேன். அந்தப் படங்களை என்னோட குருநாதர்களா மதிக்கிற செல்வா, பாலுமகேந்திரா சார்கிட்ட போட்டுக்காட்டி ஆலோசனைகளை வாங்கியிருக்கேன். சைக்கிள் கத்துக்கிறவனுக்கு இருக்கிற தழும்புகள் போல பயிற்சிகளோட இருக்கிறதால, அந்தப் படங்களை வெளியுலகுக்குக் காட்டலை. இதுவரை அப்படி 11 படங்கள் இயக்கியிருக்கேன். அந்தப் பயிற்சிகளோட என் பட்டறிவையும் சேர்த்துப் படம் பண்ணப்போறேன். தமிழுக்கு நடிகனா மட்டும் தொடர விருக்க நான், இந்தியில மட்டும் இயக்குநரா இருப்பேன். கண்டிப்பா நானே நடிச்சு நானே டைரக்ட் பண்ண வாய்ப்பேயில்லை..!’’
‘ஸ்டார்ட் கேமரா... ஆக்ஷன்..!’
வேணுஜி