பேனா ஸ்டாண்ட் ஸ்பூன் ஸ்டாண்ட் பெரிய பிசினஸ்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
               சென்னை காரம்பாக்கத்தில் வசிக்கும் சுதா செல்வக்குமார் வீட்டில் எங்கே பார்த்தாலும் பேனா ஸ்டாண்ட்கள்! மனித முகம், மிருதங்கம், ஆப்பிள், பானை, பூக்கூடை... இப்படி நினைத்துப் பார்த்திராத மாடல்களில் ஒவ்வொன்றும் கவனம் ஈர்க்கின்றன. ‘‘அவரவர் தேவைக்கேற்ப, பேனா ஸ்டாண்டாகவோ, சமையலறையில் ஸ்பூன் வைக்கிற ஸ்டாண்டாகவோ உபயோகிக்கலாம்’’ என்கிறார் சுதா. சிம்பிளான பொருள்களைக் கொண்டு, செலவே இல்லாமல் செய்யக்கூடியவை அத்தனையும்.

‘‘பேனா ஸ்டாண்டோட உபயோகம் இல்லாத வீடே இருக்காது. குழந்தைங்களுக்கு தனியா பேனா ஸ்டாண்ட் கொடுத்துட்டா, அவங்களோட பென்சில், பேனா உள்ளிட்ட பொருள்களை பத்திரமா வச்சுப்பாங்க. அதுலயும் அவங்களுக்குப் பிடிச்ச கார்ட்டூன் மாடல், போட்டோ வச்ச மாடல்ல பண்ணிக் கொடுத்தா சந்தோஷப்படுவாங்க’’ என்கிற சுதா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பிவிசி பைப் (விருப்பமான அளவுகளில்), உபயோக மில்லாத பழைய சிடி, மரத்துண்டுகள், பல் குத்தும் குச்சி வரும் பெட்டி, குட்டிக்குட்டி பானைகள், ஓ.ஹெச்.பி. ஷீட், கண்ணாடி, பேப்பர் கப், ஃபோம் ஷீட், மேக்ரமி ஒயர், பசை, அலங்காரப் பொருள்கள்... 500 ரூபாய் முதலீடு போதுமானது.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘கடைகள்ல கிடைக்கிற பேனா ஸ்டாண்ட் குறிப்பிட்ட சில மாடல்கள்லதான் இருக்கும். நாமளே நம்ம கைப்பட செய்யறப்ப, என்ன வடிவத்துல, என்ன உருவத்துல வேணாலும் பண்ணலாம். குழந்தைங்களுக்கு பொம்மை வடிவம், இளைஞர்களுக்கு ஆண், பெண் முக வடிவம், பெரியவங்களுக்கு சாமி உருவம்னு விருப்பப்படி பண்ணலாம். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அவங்க கம்பெனி லோகோவோட பண்ணலாம். ஒரு நாளைக்கு 7 முதல் 8 ஸ்டாண்ட் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘கடைகள், பள்ளிக்கூடங்கள், ஓட்டல்கள், கம்பெனிகள்ல சுலபமா ஆர்டர் பிடிக்கலாம். 60 ரூபாய்லேருந்து, 750 ரூபாய் வரை மாடலை பொறுத்தது விலை. 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருட்களோட சேர்த்துக் கட்டணம் 350 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்