இந்திய மொழிகளைக் காப்பாற்றிய தமிழ் மொழிப் போராட்டம்!
இந்த விஷயத்தை அழுத்தம்திருத்தமாக மனதில் பதிய வைப்பது நல்லது.மொழிப் போராட்டம் என்பதும், மொழிக்காகக் குரல் கொடுப்பது என்பதும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. ஆக, இது சர்வதேச பிரச்னை. உலகளவில் தத்தம் மொழிக்காக குரல் கொடுப்பது ஆதிக்கத்துக்கு எதிரான வடிவமாக இருந்திருக்கிறது; இருக்கிறது.எல்லா மொழிப் போராட்டத்தின் ஆணிவேரும் ஒன்றுதான். ‘வலுக்கட்டாயமாக பிற மொழிகளை எங்கள் மீது திணிக்காதீர்கள்’!உதாரணமாக இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கிறிஸ்துவப் பாதிரியாராக வேண்டுமென்றால் லத்தீன் மொழியில்தான் பைபிளைப் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.  அப்படிப்பட்ட காலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் விக்ளிப் என்பவர், ‘எனது தாய்மொழியான ஆங்கிலத்தில்தான் பைபிளைப் படிப்பேன்; லத்தீன் மொழியில் படிக்க மாட்டேன்’ என்று குரல் கொடுத்தார். இதனால் அன்றைய இங்கிலாந்தின் சட்டதிட்டத்தின்படி சாட்டையால் பலமுறை அடிக்கப்பட்டார். இதனால் நோய் முற்றி மரணமடைந்தார். சில ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் படம் திறக்கப்பட்டு ‘தாய் மொழிக்காக உயிர் நீத்த தனயன்’ என்று அவர் போற்றப்பட்டார்.
 அதேபோல் செக்கோஸ்லோவியா நாட்டில் ‘பைபிளை லத்தீன் மொழியில் படிக்க மாட்டேன்; என்னுடைய தாய்மொழியான செக் மொழியில்தான் படிப்பேன்; லத்தீன் மொழியில் படித்தால்தான் கர்த்தருடைய அருள் கிடைக்குமென்றால் அத்தகைய கர்த்தருடைய அருளே எனக்குத் தேவையில்லை’ என்று முழக்கமிட்டார் ஜான்கஸ்.
இப்படி சொன்னதால் அவர் உயிருடன் எரிக்கப்பட்டார். ஆனால், இன்று ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளை ‘செக்’ மொழிக்காக உயிர்விட்ட தியாகியின் பிறந்தநாள்’ என்று அரசாங்கமே போற்றி வருகிறது.
இவையிரண்டும் உதாரணத்துக்காக சொல்லப்பட்ட சம்பவங்கள். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே கடந்த காலத்தில் அரங்கேறியுள்ளன; இன்றும் தத்தம் தாய்மொழிக்காக உலகம் முழுக்க பல்வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தபடி இருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், உலகம் முழுக்கவே பிறமொழி கற்பதை எந்த மொழியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கவில்லை என்பதுதான். மாறாக கட்டாயப்படுத்தி, பிறமொழியை மட்டுமே கற்க வேண்டும் என திணிக்கும்போதுதான் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.இந்த உண்மையை புரிந்து கொண்டால், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் அடிப்படை புரியும்.
ஏனெனில் இந்தி மொழியை தமிழகம் எக்காலத்திலும் எதிர்த்ததேயில்லை. மாறாக இந்தி திணிப்பைதான் வீறுகொண்டு எதிர்த்து வருகிறது. அதன் வழியாக இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது.
இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தத்தம் தாய்மொழிக்காக அம்மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ்நாடுதான்.இப்படி ஒட்டுமொத்த தேசத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போர் என்பது கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது.
இந்த சரித்திரத்தை நாம் ஒவ்வொருவரும் நினைவுகூர வேண்டும். மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனெனில் உலகம் முழுக்கவே அறிவியல் தொழில்நுட்பம் முதல் சகல துறைகளையும் அவரவர் தாய்மொழியில் கற்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. தன் தாய்மொழியை சீராட்டி வளர்க்கும் தேசமே பொருளாதாரத்தில் வளரும் என்பது கண்கூடான உண்மை.
எனவே இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் தத்தம் தாய்மொழியை போற்றிப் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.
இன்றைய தமிழ்நாடு அப்படித்தான் தமிழை பாதுகாத்து வளர்க்கிறது. அதனால்தான் இந்திய அளவில் தமிழகத்தின் பொருளாதாரம் ஜெட் வேகத்தில் ஏறுமுகத்தில் பறக்கிறது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தாய்மொழிப் பற்று அதிகமாக இருக்க என்ன காரணம்?
கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் - இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான்.இந்த பரந்த சரித்திரத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் கட்டமாக 1937ல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1948 - 1952 வரையிலும் மூன்றாம் கட்டமாக 1965லும் நடைபெற்றது.
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்
1938ல் அன்றைய சென்னை மாகாணம் (இன்றைய பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்கள்) என்றழைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் முதல்வராக இருந்த ராஜாஜி தலைமையிலான காங்கிரசால் இந்தி திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது.
அன்றைய காலகட்டம் என்பது வெள்ளையரின் ஆட்சியதிகாரம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற காலக்கட்டம். இங்கிலாந்து ஆட்சியாளர்கள் தங்களின் மேற்பார்வையில் தேர்தல் நடத்திக் கொள்ள வழங்கிய அனுமதியின் பேரில் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் அன்றைய முதல்வர் ராஜாஜியால் முதன் முதலாக கட்டாய இந்தி திணிக்கப்பட்டது. 1937ல் நடந்த பொதுத் தேர்தலில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் 1937ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி சென்னை தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ராஜாஜி, ‘இந்தியைக் கட்டாயப் பாடமாகப் பள்ளிகளில் ஆக்கப் போகிறேன்’ என்று அறிவித்தார்.
முதன் முதல் இந்தி எதிர்ப்புக் கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே 1937ம் ஆண்டு ஆகஸ்டு 27ல் நடைபெற்றது. மறுநாள் ஆகஸ்டு 28ம் தேதி திருவையாற்றிலே மிகப்பெரிய இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்தான் பின்னாட்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கால்கோள் நாட்டிய நிகழ்ச்சிகளாகும்.
அதன்பின் 1938 ஏப்ரல் 21ம் தேதி சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. அதன்படி கர்நாடகத்தில் நான்கு பள்ளிகளிலும், கேரளத்தில் ஏழு பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 54 பள்ளிகளிலும், தமிழ்நாட்டில் 60 பள்ளிகளிலும் இந்தி கட்டாயமானது.
அப்போது ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தின் பல பகுதிகள் எல்லாம் சென்னை மாகாணத்திற்குள் இருந்தன.ராஜாஜியின் இந்த ஆணையை எதிர்த்து அவர் வீட்டுக்கு முன் பல்லடம் பொன்னுச்சாமி என்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு வாரம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் பெற்றார். முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் கைதானவர் இவர்தான். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 24ம் தேதி வடசென்னை செளகார்பேட்டையிலுள்ள இந்து தியாலாஜிகல் பள்ளிக்கு முன்பு இந்தியைக் கண்டித்து பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதன் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் அணியினர் இவர்கள்தாம். அதற்கு அடுத்த வாரம் உண்ணாமலை அம்மையார் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.இந்தப் போராட்டத்தில் கைக்குழந்தையோடு கைது செய்யப்பட்ட தாய்மார்கள் பலர். அதில் புவனேசுவரி அம்மையாரும் ஒருவர். இவர் தனது இரண்டரை மாதக் கைக் குழந்தையோடு கைது செய்யப்பட்டார்.
அப்படிக் கைது செய்யப்பட்ட அந்தக் குழந்தைதான் பின்னாளில் வளர்ந்து திமுகவின் மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்த என்.வி.என்.சோமு. தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸிலேயே இந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி.
1938 ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்தில் பேசியதற்காக அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பெற்றார்.
அரசியல் களத்தில் அண்ணா கைது செய்யப்பட்டது அதுதான் முதல்முறை. இதே ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். கர்நாடகத்தில் உள்ள பெல்லாரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்.
1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. செப்டம்பர் மூன்றாம் தேதி இங்கிலாந்து போர்ப் பிரகடனம் செய்தது. இந்தியாவுக்கு முழுமையான விடுதலை கொடுத்தாலன்றி இந்தியா, இங்கிலாந்தை ஆதரிக்க இயலாது என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிப் பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது.
அதனால் இந்தியாவில் பல மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. அதன்படி ராஜாஜி அமைச்சரவை 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி பதவி விலகியது.
1940ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தி கட்டாயப் பாடம் என்கிற தீர்மானத்தை அரசு ரத்து செய்தது. இதுதான் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு.முதல் மொழிப்போரின் வெற்றியாகக் கட்டாய இந்திக் கல்வி ஒழிக்கப்பட்ட நாள் 1940, பிப்ரவரி 21. அந்த நாள் உலகத் தாய்மொழி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பத்தாண்டுகளுக்கு முந்தைய விஷயத்தை தூசி தட்டியது.ஆம். மாநிலங்களின் மீது இந்தியை கட்டாயமாகத் திணித்தது. எல்லா மாநில அரசுகளையும் இந்தியை கட்டாயம் ஆக்கச் சொன்னது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாகத் தேர்வு செய்து கொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளைக் கொடுத்து அதில் இந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து இந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு.
பின்னர் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்குத் தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது. இதைக் கண்டித்து 1948ம் ஆண்டு ஜூலை மாதம் மறைமலையடிகள் தலைமையில், தந்தை பெரியார் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு கூட்டத்தைக் கூட்டினார்.
இதில் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். 1952ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலக பெயர் பலகைகளில் எல்லாம் இந்தி எழுத்து கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து தந்தை பெரியார் மக்களைத் திரட்டி இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தார். தமிழகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தன.இதற்கு முன்னமே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது ‘இந்திதான் தேசிய மொழியாக வேண்டும்’ என ஒரு குழு விரும்பியது. அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்; இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் இந்தி அதிகாரபூர்வ மொழிகளாயின.
பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும், ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படிப் படிப்படியாக ஆங்கிலத்தை விலக்கி இந்தியை தேசிய மொழியாக்குவது எனப் பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் குறிக்கப்பட்டன.இதனையடுத்து படிப்படியாக அரசு இந்தியை வளர்த்தது; சட்ட ஆணைகளில் இந்தியை பயன்படுத்தியது. அண்ணா, பெரியார், முந்தைய இந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956ல் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே அரசியலமைபில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது; இந்தியை எப்படி முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது. அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
கோவிந்த் வல்லப பந்த் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதுவும் அதையே சொன்னது. பத்தொன்பது வகையான இந்தி மொழிகள் பேசப்பட்டுக் கொண்டு இருந்த சூழலில் அன்றைய இந்திய மக்கள் தொகையான 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய ‘கடீபோலி’ இந்தியை தென்னகத்துக்கும் திணித்தார்கள்.
இதை எதிர்த்துதான் மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள். தமிழகத்தில் வீறுகொண்டு எழுந்த எழுச்சி, நாடு முழுக்க பரவியது. மக்களின் உணர்வுபூர்வமான எழுச்சியைக் கண்டு மத்திய அரசு பின்வாங்கியது. இந்தியக் குடியரசுத் தலைவரும், இந்தியப் பிரதமரும் சேர்ந்து, ‘இந்தி திணிக்கப்பட மாட்டாது’ எனஅறிவித்தனர்.
மூன்றாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம்
1959ல் தந்த உறுதியை நிஜமாக்க அன்றைய இந்திய பிரதமரான நேரு, சட்ட வரைவை கொண்டு வந்தார். அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள்.‘Shall be’ என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்கிற இடத்தில், ‘May be’ என அன்றைய இந்திய அரசு போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
நேரு ‘தொடரலாம்’ எனச் சொன்னதைத், ‘தொடராமலும் போகலாம்’ என அடுத்து மத்திய அரசின் ஆட்சிக்கு வருகிறவர்கள் பொருள் கொள்வார்கள் என தமிழகத் தலைவர்கள் தலைமையில் மற்ற மாநிலத் தலைவர்கள் பயந்தார்கள்.அதுவே நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானதும், ‘15 வருடகாலக் காலக்கெடு முடிந்தது’ எனச் சொல்லி கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தினார்.
‘1965ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு நாள் முதல் இந்தி ஆட்சி மொழி’ என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால் தமிழகத்தில் அதற்கு முதல் நாள், ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டனர். மெரீனா கடற்கரையில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினர்.மதுரையில் நடந்த ஊர்வலத்தில் காங்கிரஸ்காரர்களால் இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள். மாநிலம் முழுக்க இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
70 பேர் அதிகாரபூர்வ பதிவுகளின்படி தீக்குளித்துக் கொண்டனர். ஐம்பதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாகப் போனார்கள்; கலவரங்கள் வெடித்தன. பாரா மிலிட்டரி படைகள் வந்தன.
தமிழகமே பற்றி எரிந்தது. ஆனாலும் அன்றைய தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் முரண்டு பிடித்தார்.
தமிழ் மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் மாநில அமைச்சர்களாக இருந்த ஓ.வி.அளகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஏற்றார். இந்த மூன்றாம் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 55 பேர் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பு கூறியது. ஆனால், 700க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று தலைவர்களும் தமிழறிஞர்களும் கூறினார்கள். தமிழகத்தின் எழுச்சி, இந்தியா முழுக்க பரவத் தொடங்கியது. தத்தம் தாய்மொழிக்காக அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அணிசேரத் தொடங்கினார்கள். மாணவர்களின் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வேரற்ற மரம்போல் விழுந்தது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகுதான் 1967 - 68ல் இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என்று சட்டம் இயற்றியது மத்திய அரசு. தமிழகத்தின் இந்த மூன்று கட்ட இந்தி எதிர்ப்புத் தீவிரமான போராட்டம்தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் காப்பாற்றியது.
ஆம். மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் இன்றுவரை தங்கள் தாய்மொழியுடனும், ஆங்கிலத்துடனும் இயங்க முடிகிறதென்றால், அதற்கு அன்று தமிழகம் கொடுத்த விலைதான் காரணம். தமிழகம் மட்டும் அன்று பணிந்திருந்தால், இன்று இந்தியா முழுவதும் இந்தி மட்டுமே கோலோச்சியிருக்கும்.
இன்று தமிழகம் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் இந்தியாவின் முன்னோடியாகத் திகழக் காரணம், அன்று நாம் ஆங்கிலத்தை விடாமல் தக்கவைத்துக் கொண்டதுதான்.
‘எம்மொழிக்கும் தமிழர்கள் எதிரி அல்ல; ஆனால், எங்கள் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் என்றும் எதிர்ப்போம்’ என்பதே மொழிப்போர் உணர்த்தும் பாடம்.
உரக்கச் சொல்வோம். திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். விருப்பத்துடன் கற்றுக்கொள்வதை அல்ல.‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது வெறும் முழக்கமல்ல... அது தமிழர்களின் உயிராதாரம்!வாழ்க தமிழ். வளர்க தமிழ்!
கே.என்.சிவராமன்
|