வடகிழக்கு பொங்கல்!
இந்தியாவில் பொதுவாக அனைத்து பகுதிகளிலும் அறுவடைத் திருநாள் மகர சங்கராந்தி, சங்கராந்தி என ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. இதில் மேற்கு ஒடிசாவில் நுவாகாய் என்ற பெயரில் அறுவடைத் திருவிழா களைகட்டுகிறது. இதில் நுவா என்றால் புதியது, காய் என்றால் உணவு. இந்நாளில் பாரம்பரிய உணவுகள், இனிப்புகள் படைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
 அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தென்கிழக்கு, மேற்குவங்கத்தின் தென்மேற்கு, வடகிழக்கு ஒடிசா, அசாம் உள்ளிட்ட கிழக்கிந்திய பகுதியில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் நம் பொங்கலைப் போலவே துசு என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நாட்டுப்புற அறுவடைத் திருவிழாவான இதனை கிராமப்புற மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அப்போது நாட்டுப்புற பாடல்கள் பாடியும், பாரம்பரிய உணவுகளையும் செய்து மகிழ்கின்றனர். இதேபோல் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் காலோ பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவின் பெயர் மோபின். இது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடக்கிறது. இயற்கை பேரழிவுகள், நோய்கள் மற்றும் எதிர்மறை தாக்கங்களைத் தடுக்கவும் வளமான அறுவடை, நல்ல ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான ஆசீர்வாதங்களைப் பெறவும் மோபின் கொண்டாடப்படுகிறது.
இந்த ஐந்து நாட்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அத்தனை உற்சாகமாக இருக்கின்றனர். வெள்ளையான பாரம்பரிய உடைகளையும், மணிகள் மற்றும் உலோக அலங்காரப் பொருட்களையும் அணிந்து இளைஞர்களும், பெண்களும் ஒன்றுகூட விழா களைகட்ட தொடங்குகிறது.
அத்துடன் பன்றி இறைச்சி மற்றும் மூங்கில் தளிர்களுடன் கலந்த வேகவைத்த அரிசியை உண்டு மகிழ்கின்றனர். புல்லாங்குழல் ஊதியும், டிரம்ஸ் அடித்தும் நடனங்கள் ஆடுகின்றனர். மிசோரம் பகுதியில் பவுல் குட் என்ற பெயரிலும், மேகாலயா பகுதியில் வாங்காலா என்ற பெயரிலும் அறுவடைத் திருவிழாக்கள் நடக்கின்றன. அங்குள்ள பழங்குடியினர் இந்தத் திருவிழாவை ஆரவாரமாக முன்னெடுக்கின்றனர்.
பி.கே.
|