ரியாலிட்டி ஷோவுக்கு அப்பாவை அனுப்பும் மகள்!



படத்துக்கு படம் துப்பாக்கி, கத்தி ஏந்தும் கிஷோர் கையில் கால்பந்து, மைக் சுழல்கிறது. ஹிப்பி தலை, கத்தரிக்கப்பட்ட மீசை என உருமாறி வந்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ‘மெல்லிசை’ படத்துக்காகத்தான் இந்த அதிரடி மாற்றம்.திரவ் இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களி டையே வரவேற்பு பெற்ற ‘வெப்பம் குளிர் மழை’ படத்தில் நாயகனாக நடித்தவர். இறுதிக்கட்ட வேலையில் மூழ்கி இருந்த திரவ்விடம் பேசினோம்.

இது உங்களுக்கு இரண்டாவது படமா?

இல்லை. ‘மெல்லிசை’ எனது முதல் படம். இந்தப் படத்தில் இரண்டு வித டைம் லைன் இருக்கிறது. அதற்காக சில காலம் காத்திருந்தோம். அப்போது ‘வெப்பம் குளிர் மழை’ செய்தோம். அந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல், எடிட்டர், பாடல் என பல அவதாரம் இருந்துச்சு.இந்தப் படத்துக்கு இசையோடு தொடர்புடைய டைட்டில் தேவைப்பட்டுச்சு. கதையும் யதார்த்தமாக இருக்கும். கதை களத்துக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த டைட்டிலை முடிவு பண்ணினோம்.

அப்பா - மகள் கதையா?

அப்படியும் சொல்லலாம். அம்மா - மகன் கதை என்றும் சொல்லலாம். இது எளிமையான மனிதர்கள் பற்றிய கதை. சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் சிறு வயதில் டான்சராக, பாடகராக, விளையாட்டு வீரராக வரவேண்டும் என்று பல கனவுகளோடு இருந்திருப்பார்கள்.சொல்லப்போனால், அதற்குரிய திறமையும் அவர்களிடத்தில் இருந்திருக்கும். குடும்ப சூழ்நிலை காரணமாக காலப்போக்கில் அந்த கனவு கலைந்திருக்கும். ஆனால் மனசுக்குள் அந்த கனவு அப்படியே உறங்கிக் கொண்டிருக்கும்.

அப்படி கனவு நிறைவேறாத ஒரு தந்தை. அவரிடம் உள்ள திறமையை வெளியே கொண்டு வர நினைக்கிறார் மகள். அதற்காக தன் தந்தையை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறார். அதை தனது பிறந்த நாள் பரிசாக தரவேண்டும் என்று தந்தையிடம் கோரிக்கை வைக்கிறார். அதை நிறைவேற்ற தந்தை முயற்சி செய்கிறார். அந்தப் பயணத்தில் வரும் சவால்களை சந்திச்சு அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படம்.

இந்தக் கதையில் ஹீரோ பி.டி. மாஸ்டர். அந்த வகையில் பி.டி. மாஸ்டர் தோற்றமும் வேண்டும், மென்மையான குணம் உள்ள அப்பாவாகவும் இருக்க வேண்டும். அதற்கு கிஷோர் சார் பொருத்தமாக இருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர். 

பெங்களூருவில் நேரில் சந்திச்சு கதை சொன்னேன். கதையில் இயல்பாகவே அவருக்குள் இருக்கும் தன்மை  இருக்கு. அடிப்படையில் இயற்கையை நேசிப்பவர்.அவருடைய வீட்டில் ஒரு கிணறு பார்த்தேன். அந்த கிணறு பக்கத்தில் சிமெண்ட் தரை இருக்காது. அது அவருக்குள் இருக்கும் இயற்கையை நேசிக்கும் மனதை வெளிப்படுத்துவதாக தோணுச்சு. அதுபோன்ற கிணறு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

மகளாக யார் நடிக்கிறார்?

யாழினி கதாபாத்திரத்தில் நடிக்க பல கட்டங்களாக ஆடிஷன் பண்ணினோம். அதில் தனன்யாவின் பெர்ஃபாமன்ஸ் கதையோடு ஒத்துப்போச்சு. படம் வந்தபிறகு அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படும்.அம்மாவாக சுபத்ரா ராபர்ட்  வர்றார். ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய்பீம்’, ‘வடசென்னை’ போன்ற படங்கள் செய்தவர். மகனாக ஜஸ்வந்த் மணிகண்டன் வர்றார். 

கதையாக அப்பா, மகள் ஒரு அலைவரிசையிலும், அம்மா, மகன் ஒரு அலைவரிசையிலும் இருப்பார்கள். இந்த முரண்பாடு படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பிடிக்கும்.இசை ஷங்கர் ரங்கராஜன். ‘வெப்பம் குளிர் மழை’ படத்துக்கும் அவர்தான் இசை. தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்துக்கும் அவர்தான் இசை. ஒளிப்பதிவு தேவராஜ் புகழேந்தி. தயாரிப்பு ஹேஷ்டேக் FDFS.

வெற்றிமாறன் என்ன சொன்னார்? 

ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்தினார். கிஷோர் சார் கெட்டப் பார்த்து பாராட்டினார். ஏனெனில் பெரும்பாலான படங்களில் அவர் முரட்டுத்தனமான கேரக்டரில் வந்திருப்பார். டிரைலர் வெளியிட்ட சேரன் சார்,  இந்த மாதிரி கதைகள் எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார்.

நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?

பிழைப்புக்காக பல வேலை செய்திருக்கிறேன். ஆனால், சினிமாவுக்கு வரவேண்டும் என்பதுதான் முழு லட்சியம். சில குறும்படம் செய்யும்போது சினிமா வாய்ப்பு வந்துச்சு. ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநர். அந்தப் படத்துக்கு பாடல் நான்தான் எழுதினேன்.

எஸ்.ராஜா