சிறுகதை-ஜாலி திருமண மண்டபம்!



நாந்தாங்க ‘ஜாலி திருமண மண்டபம்’ பேசறேன். இன்னைக்கு கல்யாணம் எதுவும் இல்லாததுனால விளக்குகள கம்மியாப் போட்டு இருக்காங்க.இதே கல்யாணம் இருந்துச்சுனு வச்சிக்கங்க. அப்படியே தேவலோகத்து மயனே அலங்காரம் பண்ணின மாதிரி ஜொலிப்பேன். 
முகப்புல காதல் திருமணம் செய்பவர்களுக்கு ஐம்பது சதவீதம் தள்ளுபடின்னு எழுதிருக்காங்க பார்த்தீங்களா? அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கணும்னு விரும்புறிங்களா?அப்படின்னா நான் சொல்ற கதையை... இல்லை இல்லை... உண்மை நிகழ்வைக் கேளுங்க. 

‘‘ஜெய், இன்னைக்காவது உங்க அம்மாகிட்ட சொல்லுவீங்களா?’’ 

கேள்வி கேட்கப்பட்ட அந்த ஜெய், அவள் கூந்தலில் முகம் புதைத்து செண்பகப் பாண்டியன் விட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது கரங்கள் அவள் இடுப்பின் அளவை ஆராய்ந்து கொண்டிருந்தன. 

அவள் மீண்டும், ‘‘ஜெய்...’’ என்றவாறே இடுப்பிலிருந்து அவன் கையைப் பிரித்து விட்டாள்.தன்னை மறந்து ஆராய்ந்து கொண்டிருந்தவன் அந்தத் தடங்கலால் ‘‘என்ன தர்ஷ்?’’ என சிணுங்கினான். ‘‘என்னவா? நான் பேசியது உங்கள் காதில் விழவே இல்லையா?’’ என்றாள் கோபமாக அந்த தர்ஷினி.

‘‘அதைவிட முக்கியமான விஷயத்தில ஈடுபட்டிருந்ததனால உங்குரல் கேக்காம போயிருச்சு...’’ சிரித்தவனை அடிக்க காலங்காலமாக காதலிகள் செய்வது போல் ஹேண்ட்பாக்கைத் தூக்கினாள்.‘‘சரி... சரி... கோவிக்காத. இன்னைக்கு நிச்சயமா கேட்கிறேன்...’’ என்றான் சமாதானமாக.

‘‘நேற்று போன இண்டர்வியூல என்ன ரிசல்ட்?’’

‘‘ஆல்மோஸ்ட் வேலை கிடைச்சாபடிதான். இரண்டு வருஷ எக்ஸ்பிரீயன்ஸ் கேட்டாங்க. அதுதான் ஏற்கனவே இந்தக் கம்பெனில மூணு வருஷமா இருக்கேனே. அதனால ஓ.கே ஆயிடும்...’’ என்றவனுக்குள் தாயார் பார்வதியை நினைத்து லேசான கவலை எழுந்தது.

எப்படி சொல்லப் போகிறேன்... அப்பா போனபின் சொத்துக்களையும், அவனையும் கண் போல் காத்து அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி பெண் தேடிக் கொண்டிருப்பவளிடம் ஏழை ஹெட்மாஸ்டர் பெண்ணான, தங்கள் குடும்பத்தைவிட பல மடங்கு கீழேயுள்ள தர்ஷினியை விரும்புகிறேன் என்று?ஆனாலும் வீட்டுக்குச் சென்றதும் சொன்னான்.

அவன் எதிர்பார்த்தது போல கத்தியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ‘‘இதான உன் முடிவு? அப்ப என்னை மறந்துரு...’’ என்றாள் குரலில் மட்டும் கடுமையுடன்.

‘‘அம்மா... தர்ஷினி இல்லைன்னா உன்னை மட்டும் இல்ல.. இந்த உலகத்தையே மறந்துட்டுப் போயிடுவேன். உனக்கே தெரியும். நா சொன்னா செய்வேன்னு...’’ 
வேகமாகச் சென்று தன் அறைக்கதவை மூடியவனையே அதிர்ச்சியுடன் பார்த்தாள் பார்வதியம்மா.இரண்டு நாட்கள் மௌனமாகக் கழிந்தன. மூன்றாம் நாள் அவன் மௌனத்தைத் தாங்க முடியாமல் பெண் கேட்டுப் போனாள் தர்ஷினியின் வீட்டுக்கு.

ஏற்கனவே தர்ஷினி சொல்லி இருந்தாலும், ‘‘அம்மா... அம்மா...’’ என்று தடுமாறிய அவள் அப்பா தணிகாசலத்திடம், ‘‘இங்கப் பாருங்க! நீங்க எதையும் செய்யற நிலைமையில இல்ல. செய்யவும் முடியாது. அதுனால பொண்ணோட வாங்க. மீதியெல்லாம் நா பாத்துக்கறேன்...’’ என்றாள் அலட்சியத்துடன்.‘‘நீங்க சொல்றதும் சரிதாம்மா. ஆனா, தர்ஷினி பொறந்தப்ப வச்ச வேண்டுதல். எங்க குலதெய்வம் கோயில்ல வச்சுக் கல்யாணம் பண்ணணும்னு...’’ என்றார் தழுதழுத்த குரலில்.

‘‘ம்... இது ஒரு சாக்கு. சரி... ரிசப்ஷன கிராண்டா வச்சிக்கறோம்...’’சந்தோஷமா சங்கடமா என்று தெரியாமலேயே நின்றனர் அம்மா இல்லாத தர்ஷினியும் அவளைப் பெற்றவரும்.
அடுத்த பத்தே நாட்களில் எளிமையாக கோயிலில் முகூர்த்தமும், கிராண்ட் ஹோட்டலில் ரிசப்ஷனும் கிராண்டாக முடிந்து தர்ஷினி மணமகளாக வலது கால் வைத்து நுழைந்து அன்று உணர்வுபூர்வமாகநுழையும் முதல் இரவு.

மணக்க மணக்க மல்லிகையுடன் புதுத் தாலி தொங்க எளிமையான பட்டுச்சேலையில் ஆசீர்வாதம் வாங்கச் சென்றாள் தன் மாமியாரிடம்.‘‘ம்... இதான் உன் மாமனார்.கும்பிட்டுக்க...’’ என்றவளின் சொல் மாறாது கும்பிட்டு அவளிடம் ஆசீர்வாதம் வாங்கக் குனிந்தவளிடம், ‘‘போட்டிருக்கறது வைர அட்டிகை. எல்லா நகையோடயும் உரச விடாத. எங்க, முன்னப்பின்ன பார்த்து இருந்தாத்தானே!’’ என்றாள். 

சுருக்கெனச்சுட்ட கண்ணீரை மறைத்துக்கொண்டு எழுந்தாள் தர்ஷினி. ஆனால், இன்னும் காணுமே என்று கதவைத் திறந்து அவசரமாக எட்டிப்பார்த்த ஜெய்யின் காதுகளில் எல்லாம் விழுந்தது.

உள்ளே நுழைந்து அழகுப் பெட்டகமாக காலில் விழுந்தவளை அள்ளி அணைத்துக் கட்டிலில் உட்கார வைத்தவன் ‘‘கொஞ்ச நாள்ல சரியாப் போயிரும்டா. பொறுத்துக்க...’’ என்றான் வருத்தமான குரலில்.சிறிது நேரம் மௌனமாக இருந்தவள், எதையோ ஹஸ்கி குரலில் கூறவே மற்றதை மறந்த தாம்பத்தியம் இனிதாக சிரிப்பும், சந்தோஷமுமாகத் தொடங்கியது. 

ஏனோ தர்ஷினி வேலைக்குப் போவதைத் தடுக்கவில்லை பார்வதி. காலையில் இருந்து வேலை செய்து வரும் பெண் என்ற கருணையும் அவளிடம் இல்லை. சுத்து வேலை செய்யும் வேலைக்காரியை மட்டும் வைத்துக்கொண்டு உள் வேலைக்காரியை நிறுத்தி விட்டாள்.

தர்ஷினியும் இதற்கெல்லாம் கலங்காமல் எல்லா வேலைகளையும் செய்தே வந்தாள். ஆனாலும் பார்வதியின் ஏளனப் பேச்சுக்கள் நிற்கவில்லை. ‘‘ஆமா... உங்கப்பா நல்ல பணக்கார இடமாப் புடிச்சுட்டாரு. ஒரு பைசா செலவு இல்லாம ஒத்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சு. அப்புறம் என்ன?! யாருக்குக் கிடைக்கும் இப்படி?’’ 

பார்வதி அப்படி எள்ளும் போதெல்லாம் ‘‘எங்கப்பா யார் காசுக்கும் ஆசைப்படாதவர். கண்ணியமும் நேர்மையும்தான் அவர் சொத்து. நீங்கதான் சொத்தை சுகம்னு பெரிசா நினைக்கிறீங்க...’’ என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும், ‘‘ஏங்க! எப்படியோ ஒரு கல்யாண மண்டபம் கட்டுங்க. அதுல நம்ம மாதிரி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறவங்களுக்கு இலவசமா இடம் கொடுக்கணுங்க...’’ என்பாள் ஜெய்யிடம்.

‘‘அதுக்கென்ன செல்லம். நாளைக்கு நமக்கு பசங்க பொறந்தாலும் நம்ம மண்டபத்துலேயே வச்சுக்கலாம்...’’ தன் அம்மாவின் போக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெத்து வளர்த்தவளை கடிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை.

அன்றும் அப்படித்தான். வேலை விட்டு வந்தாள். உறவினர்கள் சிலர் பத்திரிகை வைக்க வந்திருந்தனர். ‘‘மதினி... பொண்ணு வீடு பெரிய இடம். நூறு பவுன் போட்டு கல்யாணச் செலவு முழுவதும் அவங்களே பண்றாங்க...’’ ‘‘நீ கொடுத்து வச்சவன் கொழுந்தனாரே! எல்லோருக்குமா இந்த அதிர்ஷ்டம் அடிக்குது?’’ பெருமூச்சு விட்டவள், அவர்களை அனுப்பிவிட்டு, ‘‘கேட்டியல்ல!’’ என்று தர்ஷினியை வறுத்தெடுக்கத் தொடங்கினாள்.

எப்போதும் எதிர்த்துப் பேசாத தர்ஷினிக்கு அன்று என்னவோ கோபம் வந்து விட்டது. ‘‘நீங்க ஏங்க என்ன மாதிரி காசுக்கு ஆசைப்படறவங்க பொண்ண எடுத்தீங்க? உங்க அந்தஸ்துக்கு தக்க பொண்ண எடுத்து பவிஷா வச்சிருக்கலாமே..?’’என்றவளை அதிர்ந்து நோக்கிய பார்வதி, ‘‘ஓஹோ... என்னையே எதிர்த்துப் பேசுறியா?’’ என்று கை ஓங்கவே, அதை எதிர்பார்க்காத தர்ஷினி தன்னிச்சையாக பின்னால் நகர... கால் தடுமாறி மாடிப் படிகளிலிருந்து கீழே உருளத் தொடங்கினாள்.

‘‘ஐயோ...’’ என்று பார்வதியும் கத்திக்கொண்டே பின்னால் இறங்கி வர, அப்போதுதான் வேலை முடித்து வந்த ஜெய், ரத்த வெள்ளத்தில் மிதந்தவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.கதறிய அவனிடமிருந்து அவளைப் பிரித்து ஸ்ட்ரெச்சரில் வைப்பதற்குள் மருத்துவமனை ஊழியர்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.‘‘நீங்க லேட் செய்யற ஒவ்வொரு வினாடியும் அவங்க உயிருக்குத்தான் ஆபத்து...’’ என்று சொல்லவேதான் விட்டான்.

‘‘மிஸ்டர் ஜெய்! எல்லா ரிப்போர்ட்ஸும் எடுத்தாச்சு... கீழே விழுந்ததுல மூளைக்குப் போற ரத்தக் குழாய்ல லேசா ரத்தம் கட்டியிருக்கு. அதுனாலதான் மயக்கமாயிருக்காங்க. கவலைப்படாதீங்க. கட்டி கரைய மெடிசின் கொடுத்துட்டு இருக்கோம். 

மெல்ல மெல்ல ரெக்கவர் ஆயிடுவாங்க. டோண்ட் ஒர்ரி...’’ என்றார் தலைமை நரம்பியல் நிபுணர்.ஹலோ... இருங்க... இருங்க. என்ன ரொம்ப சோகமாயிட்டீங்களா? எதுக்கு? அதோ பாருங்க அங்க யார் வர்றதுன்னு! ஜெய்யும், தர்ஷினியும். கூட யார் வர்றாங்கன்னு தெரியுதா? பார்வதி அம்மாதான் பேத்தியை இடுப்புல இடுக்கிக்கிட்டே கொஞ்சிட்டு வர்றாங்க.

ஆமாங்க. தர்ஷினிக்கு கொஞ்ச நாள்லயே நினைவு லேசா வர ஆரம்பிச்சிருச்சு. அவ ஆஸ்பத்திரியில் இருக்கறப்பவே கல்யாண மண்டபம் கட்ட இடம் தேடிக்கிட்டு இருந்தான் ஜெய்.
அப்பத்தான் ஒரு நாள், ‘‘சார்... நான் லட்சுமி புரொமோட்டர்ஸ்லிருந்து பேசறேன். 

அன்னைக்கு என்னோட வொய்ஃப செக்கப்புக்கு அழைச்சிட்டு வந்தப்பதான் உங்க மனைவிக்கு அடிபட்டு துடிச்சுக் கதறிட்டு இருந்தீங்க. ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. இந்த அன்புக்காகவாவது அவங்க பிழைச்சிரணும்னு ஆண்டவன்கிட்ட நானும் என்னோட மனைவியும் வேண்டிக்கிட்டே இருந்தோம்.

ரெண்டுநாள் கழிச்சு ஆஸ்பத்திரியில கேட்டப்ப அபாய கட்டத்தை தாண்டிட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்ககிட்டயே உங்க நம்பர் வாங்கிட்டேன். உங்களுக்கு மண்டபம் கட்ட இடம் இருக்குங்களா? இல்ல வாங்கணுமா?’’ ‘‘இடம் இருக்கு சார். ஆனா, மண்டபம் கட்ட தோதாக இல்லை...’’‘‘சார்! நா பிஸினஸுக்காக பேசறன்னு நினைச்சுக்காதீங்க. என் வொய்ஃபுக்கு மாமனார் வீட்டு சொத்தா வந்த இடம் ஒண்ணு சிட்டியோட சென்டர்ல இருக்கு. 

இதுவரைக்கும் யார் யாரோ கேட்டும் அவங்க அப்பா நினைப்பா குடுக்க மாட்டேன்னு வச்சிட்டு இருந்தவங்க, இப்ப உங்களுக்கு குடுக்கணும்னு ஃபீல் பண்றாங்க...’’ அப்புறம் என்ன பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் வாயில் விழுந்த மாதிரி உடனே அதை வாங்கி மண்டபமும் கட்டி விட்டான். மண்டபம் கட்டக் கால் போடற அன்னைக்கே தர்ஷினியும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேரா அங்கேயே வந்துட்டா.

மண்டபத்துக்கு என்ன பேர் வைக்கணும்ங்கறதை தர்ஷினிகிட்டயே விட்டுட்டாங்க ஜெய்யும், பார்வதியும். ‘நம்ம மண்டபத்துல கல்யாணம் பண்ணிக்கற எல்லா ஜோடிகளும் சந்தோஷமா சிரிச்சுகிட்டே ஜாலியா இருக்கணும்ங்க’ன்னு சொல்லி அவ வச்சதுதான் என்னோட பேரு.கிரகப் பிரவேசத்தன்னைக்கு ‘என்னோட மிகப்பெரிய ஆசை நிறைவேறிச்சுங்க... 

நிறைவேத்திட்டீங்க’னு கண்ணீரோடு ஜெய்யக் கட்டிகிட்டா தர்ஷினி.‘‘ஏய்! இப்பவே எல்லாத்தையும் பண்ணிட்டா எப்படி? ராத்திரிக்கும் மீதி வச்சுக்கோன்னு...’’ ரொமான்டிக்கா பேசிச் சிவக்க வைச்சான் நிறைமாத கர்ப்பிணியா இருந்த தன்னோட செல்ல மனைவியை.

அவளுக்கு நினைவு திரும்பற வரைக்கும் ஜெய் அவங்க அம்மாகிட்ட பேசவே இல்லை. அதேசமயம் அவன் பார்வதியை என்ன நடந்ததுன்னு கேட்டு கடிஞ்சுக்கவும் இல்லை.
அவனோட மௌனம் பார்வதியையும் யோசிக்க வச்சு திருந்தவும் வச்சது. அதுவரைக்கும் நடந்த எல்லாத்துக்கும் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்புக் கேட்டுகிட்டாங்க. 
தர்ஷினி அவங்க மனதுக்கு உகந்த மருமகளா ஆனதோட மட்டுமில்லாம, பேத்தியையும் பெத்துக் கொடுக்கவே ஆனந்தம் தாண்டவமாட ஆரம்பிச்சது அவங்க வீட்டுல.

கல்யாணமோ வேற விசேஷமோ நடக்காதப்ப எல்லாம் அவங்களுக்கு இந்த இடம்தான் பார்க் மாதிரி. வந்து உட்கார்ந்து பேசிட்டு, பேத்தியை மகிழ்ச்சியா விளையாட விட்டுட்டு சாப்பாடும் எடுத்துட்டு வந்து சாப்பிட்டும் போவாங்க.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்னுதானே கேக்கறீங்க?

அதான் கட்டட வேலை நடக்கறப்ப ஜெய்யும், தர்ஷினியும் சிரிச்சுப் பேசி மாஞ்சதைத்தான் என்னோட ஒவ்வொரு செங்கல்லும் கேட்டுட்டே இருந்துச்சே!அடடா... உங்ககிட்ட பேசிட்டே வந்தவங்கள கவனிக்காம இருக்கேனே! அதோ அங்க பாருங்க! இன்னொரு காதல் ஜோடி என்னைப் பதிவு பண்ண வர்றாங்க.அவங்கள ஆசீர்வதிக்கப் போகணும். வரட்டுங்களா?!

விஜி முருகநாதன்