டாக்ஸிக் கேர்ள்ஸ்!



‘கே.ஜி.எஃப்’ யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. இப்படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் நிறுவனம் மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் டோவினோ தாமஸ், அக்‌ஷய் ஓபராய், அமித் திவாரி, சுதேவ் நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.கீது மோகன்தாஸ்30க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். 2003ம் ஆண்டு வெளியான ‘நளதமயந்தி’ படத்தில் தமயந்தி கதாபாத்திரத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 

தொடர்ந்து 2014ம் ஆண்டு வெளியான ‘லையர்’ஸ் டைஸ்’ படத்தின் மூலம் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்டார். முதல் திரைப்
படத்திலேயே சிறந்த நடிகை, சிறந்த சினிமாட்டோகிராபி என இரண்டு தேசிய விருதுகள் பெற்றது அப்படம். தொடர்ந்து 87வது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட படமாகவும் கீது மோகன் தாஸ் இயக்கிய ‘லையர்’ஸ் டைஸ்’ இந்தித் திரைப்படம் இடம்பிடித்தது. 
தொடர்ந்து இவர் இயக்கிய ‘மூத்தோன்’ மலையாள திரைப்படமும் பல சர்வதேச விழாக்களில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. நிவின் பாலி நடித்த அந்தத் திரைப்படத்திற்கு கேரளாவின் மாநில சிறப்பு விருது கிடைத்தது. 

இப்போது மூன்றாவதாக இவர் இயக்கும் திரைப்படம்தான் ‘டாக்ஸிக்: எ ஃபெய்ரி டேல் ஃபார் க்ரோன் - அப்ஸ்’ திரைப்படம். கலைப்படமாக இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் கீது மோகன் தாஸ், முதல் முறையாக கமர்ஷியல் ஆக்‌ஷன் பின்னணியில் கதை சொல்ல இருக்கிறார். 

2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படம் ஆரம்பக்கட்ட புகைப்பட பணிகளுடன் துவங்கியது. ஆகஸ்ட் 2024ல் இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக துவங்கியது. 
ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டு, இந்திய மொழிகள் பலவற்றிலும் இப்படம் டப்பிங் செய்யப்படவிருக்கிறது.

1940 மற்றும் 1970கள்... என இரு காலகட்டங்களில் நிகழும் கதையாக உருவாகும் இத்திரைப்படம், முழுமையாக கோவாவில் நடக்கிறது. போதை உலகம், அதன் பின்னணியில் இருக்கும் மாஃபியா, அண்டர் வேர்ல்ட் என ஆக்‌ஷன் கதைக்களமாக இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

இருபது ஏக்கர் நிலத்தில் இந்த படத்துக்காக பெங்களூருவில் ஒரு பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் 450 முதன்மை மற்றும் ஜூனியர் நடிகர்கள் ஒருசேர இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் என்ன தெரியுமா? இப்படத்தின் நாயகிகள் பட்டியல்தான்!
ஆம். தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நடிகையின் படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படத்துக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் ‘டாக்ஸிக் கேர்ள்ஸ்’ யார் யார்?

‘காந்தாரா : சாப்டர் 1’ படத்தின் பேட்டிகளின்போது ‘டாக்ஸிக்’ லவ்வர் நான்தான் என பேட்டிகளில் மனம் திறந்தார் நம்ம ‘தங்கப்பூவே’ ருக்மிணி வசந்த். இப்பேட்டி வைரலான நிலையில் ‘அப்போ நான் யாரு’ என வரிசையாக கலர்ஃபுல் கிளாமர் கேர்ள்ஸ் போஸ்டர்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹியூமா குரேஷி... வரிசையில் லேட்டஸ்ட் போஸ்டர் ருக்மிணி வசந்த். 

கதைப்படி நயன்தாராவின் பெயர் கங்கா. கதையின் நாயகன் யாஷ் மற்றும் நயன்தாரா இப்படத்தில் ஜோடியாக நடிக்கவில்லையாம். மாறாக சகோதரன், சகோதரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கியாரா அத்வானி பெயர் நாடியா, யாஷ் ஜோடி. ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ படங்களில் நடித்த ஹியூமா குரேஷி கதாபாத்திரத்தின் பெயர் எலிசபெத். வில்லன் குழுவில் முக்கிய வில்லியாக வருகிறாராம். வலிமையான பெண் கதாபாத்திரம் இவருக்கு என்கிறது நெருங்கிய வட்டாரம். ருக்மிணி வசந்த் கேரக்டரின் பெயர் மெல்லிஸா. யாஷு இன்னொரு ஜோடியாக இருக்கலாம் என கிசுகிசுக்கிறார்கள்.

இவர்கள் இல்லாமல் தாரா சுதைரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான ‘அலாதின்’ திரைப்படத்தில் இளவரசி ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானவர் இவர்தான்.

கடைசி நேரத்தில் நவோமி ஸ்காட் தேர்வானார். எல்லாவற்றுக்கும் சிகரமாக கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்தவர் தாரா சுதைரா. இந்தியில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து இந்தியில் ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட ஐந்தாறு படங்களில் நடித்திருக்கிறார். 

படங்கள் குறைவுதான் என்றாலும் ட்ரெண்டிங் இந்திய இணைய கேர்ள்ஸ் பட்டியலில் தாரா ஸ்பெஷல். அவரும் இந்தத் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

வெயிட். படத்தின் கேர்ள்ஸ் லிஸ்ட் இன்னமும் முடியவில்லை. ஹாலிவுட் நடிகை குறிப்பாக ‘த எக்ஸ்பெண்டபிள்ஸ் 3’, ‘கிரிமினல்’, ‘மெக்கானிக்: ரிசரெக்‌ஷன்’, ‘ஃபோர்ட்ரெஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடாலி பர்ன், இந்தத் திரைப்படத்தில் அண்டர்வேர்ல்ட் மாஃபியா பெண்ணாக நடித்திருக்கிறார் என்கிறார்கள். 

லாஸ்ட் பட், நாட் லீஸ்ட்... படத்தின் இயக்குநரும் பெண் என்பதால் அவரையும் இந்த டாக்ஸிக் கேர்ள்ஸ் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். படத்தின் முதல் கட்டமாக கதையின் நாயகிகள் ஸ்டைலாக நிற்கும் போஸ்டர்கள்தான் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஒவ்வொருவரும் எழுபதுகளின் பின்னணியில் கிளாமர் பாம் காக்டெய்ல் கவுனில் போஸ் கொடுத்து இணையத்தில் இந்த போஸ்டர்கள் டிரெண்டாகி வருகின்றன.இந்த வருடம் மார்ச் மாதம் 19ம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் படம் கடந்த ஒன்றரை வருடங்களாகவே ஏராளமான சர்ச்சைகளுக்கு இடையே உருவாகி வருகிறது. 

படத்தின் நாயகன் யாஷுக்கு, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உடன்பாடு இல்லை எனவும், கோஸ்ட் இயக்குநராக பாதி படத்தை யாஷ்தான் இயக்கி வருகிறார் எனவும் இப்போதுவரை வதந்திகள் பரவி வருகின்றன. போதாக்குறைக்கு படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் இந்தியாவின் பிரம்மாண்ட பட்ஜெட் இதிகாசத் திரைப்படமாக உருவாகி வரும் ‘இராமாயணா’ திரைப்படத்தில் ராவணனாக யாஷ் நடித்து வரும் நிலையில் அந்தப் படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகின. 

இந்தப் படத்தின் தயாரிப்பிலும் யாஷ் இருப்பது ஹைலைட். இந்த வதந்திகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நமக்குத் தேவை ‘டாக்ஸிக்’ கேர்ள்ஸ். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? மார்ச் மாதம் தெரிந்துவிடும்.

ஷாலினி நியூட்டன்