அஜித் ஆவணப்படம்..! Exclusive
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வில் முக்கியமான துறை என இரண்டு துறைகள் இருக்கும். ஒன்று வருமானம் கொடுக்கும் துறை, மற்றொன்று அவனுக்குப் பிடித்த எதில் அவன் சாதிக்க நினைக்கிறான் என்கிற துறை. துரதிர்ஷ்டவசமாக எல்லா மனிதர்களாலும் இரண்டு துறையிலும் சாதிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. வருமானம், குடும்பம், பொறுப்பு, கடமைகள் என முழுமையாக வேறொரு பாதையில் சம்பந்தப்பட்டவரை அழைத்துச் சென்று விடுகிறது.
 ஆனால், பிடித்த வேலையை செய்வதற்கு வயது தடையல்ல... எந்த வயதிலும் நமக்கான குறிக்கோளை அடையலாம் என வாழ்பவர் அஜித்.நடிப்பு மற்றும் கார் ரேஸ் என இரண்டு குதிரைகளையும் சரியாக வண்டியில் பூட்டி குடும்பத்துடன் சீராக பயணித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது? இந்த சமூகத்திடமும் அவருடைய ரசிகர்களிடமும் அஜித் என்ன எதிர்பார்க்கிறார்? இதுதான் முழுமையான டாக்கு திரைப்படம்.
 ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தமிழில் வெளியாக இருக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் ஆவணத் திரைப்படம் இது. 90 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக மே ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த டாக்குவில் ரசிகர்களைக் கவரும்படியான தன்னம்பிக்கை தரும் இரண்டு பாடல்கள் உள்ளன. இந்தப் படத்துக்கான டீஸர்தான் சமீபத்தில் ‘அஜித் குமார் - லைஃப் ஆஃப் த கிளாடியேட்டர்ஸ் இன் த மோட்டார்’ என்னும் பெயரில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிப்பு கிடையாது, சினிமா டெம்ப்ளேட் இருக்காது, கலர்ஃபுல் காதல் டூயட் இருக்காது. ஆனால், ஒரு விளையாட்டு வீரனின் உணர்வும் அவருடைய அடிப்படை எதிர்பார்ப்பும் இருக்கும். பந்தயக் களத்தில் அஜித் நிற்பது துவங்கி காரில் அவர் பாய்ந்து செல்வதிலிருந்து அனைத்தும் பதிவாகியிருக்கிறது, விபத்தில் அவர் சிக்கியது உட்பட.எல்லாமே நேரடியாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள் என்பதுதான் ஹைலைட்.
விளையாட்டு வீரராக அஜித் எதிர்பார்ப்பது என்ன?
சரியான அங்கீகாரம். குழந்தைப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அப்படி அஜித்தின் கனவு கார் ரேஸ். அஜித் அப்பாவின் நண்பர்கள் பலரும் கார் பந்தய வீரர்கள். வீட்டில் எப்போதுமே ரேஸ் கார்கள், கார் ரேஸ் வீரர்கள்... அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு என அவர் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அஜித் சிறு வயதில் பார்த்துப் வளர்ந்தது இந்த ரேஸ் ஹீரோக்களைதான். சினிமா அவருக்கு வருமானத்தைக் கொடுத்த வேலை. இந்தச் சினிமா அவரை நினைத் துப் பார்க்க முடியாத இடத்தில் அமர வைத்திருக்கிறது.
என்றாலும் தன் கனவை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. தன்னுடைய முப்பதுகளில் ஓரளவு சினிமாவில் வருமானம் கிடைக்கத் துவங்கிய காலத்தில் கார்பந்தயத்துக்கு வருகிறார், அவருக்கு வெற்றியும் கிடைக்கிறது. கடினமான போட்டிகள் இல்லை. தன் கனவில் தொடர்ந்து ஓட வைக்கும் நெருப்பு இல்லை. சினிமாவில் கவனம் செலுத்தத் துவங்குகிறார். சினிமாவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை பொறுமையாக தொடர்ந்து செய்தவர் தன்னுடைய 40களில் மீண்டும் கனவைத் தேடி வருகிறார்.
அப்போதுதான் F1 ரேஸ் பிரபலமாகிறது. முதலில் இருந்து துவங்க வேண்டும். உடன் போட்டியிடும் வீரர்கள் அத்தனை பேரும் 18 வயது இளைஞர்கள். அவர்களுக்கு நிகராக நிற்க முதலில் உடல் தகுதியும், ஆரோக்கியமும் அவசியம். 18 வயது இளைஞர்களுக்கு ஏற்றபடி இவரும் தன்னுடைய உடல் எடையை இறக்கினார். டயட், உடற்பயிற்சி, மிகக் கடினமான உணவு கட்டுப்பாடு, அத்துடன் சர்வதேச போட்டிகள் என இந்த விளையாட்டில் தன்னை நிரூபிக்க ஓ(ட்)டத் துவங்கினார்.
தன்னைக் காட்டிலும் 20 முதல் 30 வயது சிறியவர்களுடன் கடுமையான போட்டிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நடிகராக உச்சத்தில் இருப்பினும் விளையாட்டு வீரராக இன்னமும் தனக்கான அங்கீகாரம் இல்லை என்பதே அஜித்தின் வருத்தம்.
விளையாட்டில் சர்வதேச அளவில் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஸ்பான்சரும் லோகோவும் அவசியம். நடிகர் அஜித் என்கிற அடையாளத்துக்கு கோடிக்கணக்கில் ஸ்பான்சர்கள் குவிகின்றன; லோகோக்கள் வருகின்றன. பல தயாரிப்பாளர்கள் கூட அஜித்தின் ஸ்பான்சர்களாகவும் அவருக்கு தனி லோகோ கொடுக்கவும் தயார்.
ஆனால் அஜித் எதிர்பார்ப்பது விளையாட்டு வீரர் அஜித்துக்கு ஸ்பான்சரும் லோகோவும். ஆனால் குறைந்தபட்சம் செய்திகளில் கூட தன்னை விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துவதில்லை என்பது அவரது நீண்ட கால வருத்தம்.
‘நடிகர் அஜித் கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கினார்’, ‘நடிகர் அஜித் கார்பந்தயத்தில் வெற்றி பெற்றார்...’ இப்படி சினிமா செய்திகளில் மட்டும்தான் இப்போது வரை தனக்கு இடம் கிடைத்து வருகிறது என்பதுதான் அவரின் சொல்ல முடியாத சோகம்.
எனவே இவ்வளவு ஓட்டமும் இவ்வளவு பந்தயமும் விளையாட்டுச் செய்திகளில் கார் பந்தய வீரர் அஜித் என்கிற பெயர் வர வேண்டும் என்பதற்குதான், விளையாட்டு வீரர் அஜித் என தேடி வரும் ஸ்பான்சருக்குதான்.
அதற்காகத்தான் இத்தனை காலமும் உயிரைக் கொடுத்து கார் பந்தயங்களில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற விளையாட்டுகளை விட கார் பந்தயம் அதிகம் செலவு செய்ய வேண்டிய ஒரு ஸ்போர்ட்ஸ். அதற்குரிய பணம் தன்னிடம் இருப்பினும் கார் ரேஸ் வீரர் அஜித்துக்கான ஸ்பான்சரை நோக்கி அவர் காத்திருக்கிறார்.
கடந்த பத்து பதினைந்து வருடங்களாகவே வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம்தான் பெரும்பாலும் உச்ச நடிகர்கள் கொடுத்து வருகிறார்கள். அஜித்தும் அப்படித்தான்.
இப்படி சினிமாவை விட்டுவிடாமல் பேலன்ஸ் செய்தபடியே கார் ரேஸிலும் கவனம் செலுத்துகிறார். இதிலும் உச்சத்தைத் தொட உழைக்கிறார். சினிமாவும் கார் ரேஸும் அஜித்தின் இரு கண்கள்... இதைதான் அஜித்தின் ஆவணத் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ஷாலினி நியூட்டன்
|