10 நாட்கள் நிலவில் தங்கப் போகிறார்கள்!



வானத்து நிலவை பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் வாழும் பூமிக்கு இருக்கும் ஒரே துணைக்கோளான நிலா, பூமியிலிருந்து 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
இந்த நிலவை சுற்றி வர அமெரிக்க விண்வெளி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.நிலவை ஆய்வு செய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 6ம் தேதி விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படும். 

1972ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 54 ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்கள் மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்குச் செல்லும் முதல் நிகழ்வு இது. நிலவில் மனிதர்களின் நிலையான இருப்பிடத்தை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ள விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் போன்றவற்றை சோதித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை நோக்கிய திட்டம் இது. மேலும், செவ்வாய் கோளில் முதல் மனிதப் பயணம் உட்பட ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கான ஒரு சோதனைத் தளமாக இது இருக்கும். 

ஆர்டெமிஸ் திட்டம் என்பது என்ன?

இது, நாசாவின் முக்கிய விண்வெளித் திட்டம். ‘ஆர்ட்டெமிஸ் 1’ என்ற ஆளில்லா சோதனைப் பயணம் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. 
‘ஆர்ட்டெமிஸ் 2’, விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வருதல். இது அடுத்த மாதம் நடைபெறுகிறது. ‘ஆர்ட்டெமிஸ் 3’, நிலவில் மனிதர்களைத் தரையிறக்குதல். இது 2027ல் திட்டமிடப்பட்டுள்ளது. 
கிரேக்க புராணங்களின்படி ‘ஆர்ட்டெமிஸ்’,  அப்பல்லோவின் இரட்டை சகோதரி மற்றும் நிலவின் கடவுள். இதை உணர்த்தவே இந்தப் பெயர்.  பனிக்கட்டி வடிவில் நீர் இருக்க வாய்ப்புள்ள நிலவின் தென் துருவத்தை இந்தியாவின் சந்திரயான்- 1 விண்கலம் முதல் முறையாகக் கண்டறிந்தது. 

இந்த இடத்தில் பல ஆய்வுகளைச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. தென் துருவத்தில் உள்ள ஆழமான பள்ளங்களில் பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சமே படாமல் உறைந்த நிலையில் தண்ணீர் இருக்கிறது. இந்த நீரை உருக்கி குடிநீராகப் பயன்படுத்தலாம்; இந்த நீரைப் பிரித்து ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். 

தென் துருவத்தின் சில உயரமான பகுதிகளில் எப்போதும் சூரிய ஒளி படும். இது விண்வெளி வீரர்களின் மின்சாரத் தேவைக்கு - சோலார் பவர் - மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

தவிர நிலவில் தளம் அமைத்து அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது எளிது. நிலவின் தென் துருவம் இதற்கு ஒரு சிறந்த சோதனைத் தளமாக விளங்கும். 
நிலவின் தென் துருவத்தில் முதன்முதலில் விண்கலத்தைத் தரை இறக்கி சாதனை படைத்தது நமது இந்தியாவின் ‘சந்திரயான்-3’தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த மாதம் நிலவுக்கு செல்லும் ‘ஆர்ட்டெமிஸ் 2’வில் நான்கு விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தில் நிலவைச் சுற்றி 10 நாட்கள் பயணிப்பர். அதாவது இவர்கள் இந்த 10 நாட்களில் சுமார் 11 இலட்சம் கிமீ பயணம் செய்வார்கள். இதன் கமாண்டர், ரீட் வைஸ்மேன். அமெரிக்க கடற்படையின் விமானியான இவர், இந்தப் பயணத்தை வழிநடத்துவார். விக்டர் குளோவர், பைலட். நிலவுக்குச் செல்லும் பயணத்தில் இடம்பெறும் முதல் கறுப்பின விண்வெளி வீரர் இவர்தான்.

கிறிஸ்டினா ஹம்மாக் கோச், மிஷன் ஸ்பெஷலிஸ்ட். நிலவுக்குச் செல்லும் முதல் பெண் விண்வெளி வீரர். ஜெர்மி ஹான்சன், மிஷன் ஸ்பெஷலிஸ்ட். இவர் கனடா விண்வெளி முகமையின் சார்பாகப் பங்கேற்கிறார். அமெரிக்கர் அல்லாத ஒருவர் நிலவுப் பயணத்தில் இணைவது இதுவே முதல் முறை.1960 மற்றும் 70களில் நடந்த ‘அப்போலோ’ திட்டங்களில் நிலவுக்குச் சென்ற 12 விண்வெளி வீரர்களும் ஆண்களே. ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறப்போகிறது.

‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தின் முதுகெலும்பாக விளங்குவது எஸ்எல்எஸ் (Space Launch System) ராக்கெட். இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட். ஓரியன் விண்கலத்தை பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேற்ற பயன்படும் இந்த ராக்கெட், சுமார் 322 அடி உயரம் கொண்டது.இது விண்ணில் கிளம்பும்போது சுமார் 8.8 மில்லியன் பவுண்டுகள் உந்துவிசையை உருவாக்கும். புகழ்பெற்ற ‘சாட்டர்ன் V’ ராக்கெட்டை விட இது 15 சதவீத அதிக வலிமை கொண்டது. 

ஓரியன் விண்கலம், வீரர்கள் தங்குவதற்கும் பயணிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட நவீன விண்கலம். இது மிக அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நேரடியாக நிலவில் தரை இறங்காது. மாறாக, நிலவைச் சுற்றிச் சென்று பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி மீண்டும் பூமிக்குத் திரும்பும்.

10 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, விண்கலம் பூமிக்குத் திரும்பும் முறை மிகவும் சவாலானது. ஓரியன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, உராய்வினால் சுமார் 2,760°C வெப்பம் உருவாகும். எனவே இதை விண்கலத்தின் அடிப்பகுதியில் உள்ள ஹீட் ஷீல்டு அதி வெப்பத்தை தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க வரிசையாகப் பல பாராசூட்டுகள் விரியும். இது விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 40,000 கி.மீ-யிலிருந்து வெறும் 30 கிமீ ஆகக் குறைக்கும். விண்கலம் கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் வந்து விழும்.அமெரிக்க கடற்படை மற்றும் நாசா குழுவினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தயார் நிலையில் இருப்பார்கள். அவர்கள் விண்கலத்தையும் வீரர்களையும் பத்திரமாக மீட்பார்கள்.

நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தங்குவதற்காக ‘ஆர்ட்டெமிஸ் பேஸ் கேம்ப்’ நிலவின் தென் துருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 விண்வெளி வீரர்கள் வரை தங்குவதற்கான வசதிகள் இதில் இருக்கும். 

இது கதிர்வீச்சு மற்றும் நிலவின் கடுமையான வெப்பநிலையிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கும். நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் நேரடியாக நிலவில் இறங்காமல், முதலில் கேட்வே நிலையத்திற்குச் செல்வார்கள். அங்கிருந்து ஒரு சிறிய விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பில் இறங்குவார்கள்.

நிலவில் இருக்கும் வீரர்களுக்கும் பூமிக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேஸ் கேம்ப் மற்றும் கேட்வே ஆகிய இரண்டும் வெற்றிகரமாகச் செயல்பட்டால், மனிதர்கள் நிலவில் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தங்கி ஆய்வு செய்ய முடியும். 

இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு முக்கியப் பயிற்சியாக அமையும். நாசாவின் இந்த ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தில் எலான் மஸ்க்கின் ‘SpaceX’ நிறுவனம் முக்கியமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது!

பா.ஸ்ரீகுமார்