வர வர காதல் ஆண்களுக்கு கசக்குதய்யா..!
எச்சரிக்கை: பெண்கள் இந்தச் செய்தியை படிக்க வேண்டாம்
சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கிறது. ‘‘சுமார் 74% ஆண்கள் தங்களின் காதலிகளுடன் நேரத்தைச் செலவிடுவதைக் காட்டிலும், சக ஆண் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது மன ரீதியாக மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கின்றனர்; தங்களைப் புதுப்பித்தும் கொள்கின்றனர்...’’ என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் அதிர்ச்சி முடிவு.
 இந்த ஆய்வறிக்கையைத் தயார் செய்வதற்காக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். மட்டுமல்ல, காதலிகளுடன் நேரத்தைச் செலவிடும்போது உண்டாகும் மன அழுத்தமும், சண்டைகளும், வாக்குவாதங்களும் ஆண் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது குறைவு என்கிறது அந்த ஆய்வு. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும், இன்னொரு பக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
 அதே நேரத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஆண்கள் தங்களின் காதலிகளுடன் நேரத்தைச் செலவிடும் போதுதான் அதிகமான உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவதாகச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. இரண்டு ஆண்களுக்கு இடையிலான நட்பில் மிகக் குறைந்த அளவே சண்டை, சச்சரவுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் பகிர்ந்துகொள்வதற்கான விஷயங்களும், உரையாடல்களும் அதிகம்.
 காதல் என்று வரும்போது அது இரண்டு நபர்களுடன் சுருங்கிவிடுகிறது. ஆனால், நட்பில் இரண்டு நபர்களுடன் சுருங்கிவிடுவதில்லை. அதில் எண்ணிக்கை அதிகம். குழுவாக இயங்கவும் முடியும். இப்படி நிறைய பேர் ஒன்றாகச் சேர்ந்து உரையாடுவதும், ஏதாவது விளையாடுவதும், எங்கேயாவது பயணிப்பதும் மனதை உற்சாகப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்கிறது உளவியல். தவிர, காதலைவிட நட்பில் உணர்வு ரீதியான காயங்களும் குறைவு என்கின்றனர்.
மட்டுமல்ல, காதலர்கள் மட்டும் தனியாகச் சுற்றுலா செல்லும்போது அங்கே சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், நண்பர்களுடன் சுற்றுலா செல்லும்போது சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. உதாரணத்துக்கு, சுற்றுலா செல்லும் இடம் அல்லது தங்கும் விடுதியைத் தேர்வு செய்வதில் கூட காதலர்களுக்கு இடையில் சண்டைகள் ஏற்படலாம். ஆனால், நண்பர்களுக்கு இடையில் இப்படியான சண்டைகளுக்கு வாய்ப்புகள் குறைவு என்கிறது அந்த ஆய்வு.
முக்கியமாக இந்த ஆய்வின் நோக்கம் காதலை மட்டம் தட்டி, நட்பை உயர்த்திப் பிடிப்பதில்லை. காதலையும், நட்பையும் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதே ஆய்வின் நோக்கம் என்கின்றனர். காரணம், ஆண்களில் 70 சதவீதம் பேர், காதல் வயப்பட்ட பிறகு தங்களின் காதலிகளுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். காதலி கிடைத்த பிறகு நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது மட்டுமல்ல, நண்பர்களைச் சந்தித்து, பேசுவதும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்துவிடுகிறது.
இது ஆண்களின் சமூகத் தொடர்பைத் துண்டித்து விடுவதோடு, அவர்களின் உலகையும் சுருக்கி விடுகிறது. பெண்களில் 90 சதவீதம் பேர், காதல் வயப்பட்ட பிறகு தங்களின் தோழிகளுடன் நேரத்தைப் பெரிதாக செலவிடுவதில்லை. மட்டுமல்ல, பெரும்பாலான பெண்கள் காதலுக்குப் பிறகு தங்களின் உலகத்தையே காதலுடன் சுருக்கிக் கொள்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
ஆண்களைப் போலவே, பெண்களின் சமூக வாழ்வும் காதலுக்குப் பிறகு துண்டிக்கப்படுகிறது. முக்கியமாக ஆண்களும், பெண்களும் காதலுக்குப் பிறகு தங்களின் பழைய நட்புகளைப் பராமரிக்கும் திறனற்றவர்களாக இருக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் காதலையும், நட்பையும் சமநிலையில் பேணுவதற்கான சமூகச் சூழல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர, காதலைவிட நட்பில் உறவை பராமரிப்பதற்கான முயற்சிகள் குறைவு. உதாரணத்துக்கு, காதலில் தினமும் சந்திக்க வேண்டும்; போனில் மணிக்கணக்காக பேச வேண்டும், பிறந்த நாள், காதலர் தினம் என்று ஒவ்வொரு ஸ்பெஷலான நாட்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும், தங்களின் காதலியையோ அல்லது காதலனையோ எப்போதும் ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும், செலவு செய்வதில் கூட யாராவது ஒருவர்தான் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும், எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று ஏராளமான எதிர்பார்ப்புகளும், பராமரிப்புகளும் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளும், பராமரிப்புகளும் நலிவடையும்போது காதல் முறிந்துவிட வாய்ப்பிருக்கிறது.
ஆனால், நட்பில் அப்படியான எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இல்லை. வாரத்துக்கு ஒருமுறைகூட சந்திக்கலாம்; போனில்கூட நேரம் கிடைக்கும்போது பேசலாம். நட்பில் பெரிய எதிர்பார்ப்புகளோ, பராமரிப்புகளோ கிடையாது. வருடத்துக்கு ஒருமுறைகூட சந்தித்து, தங்களின் நட்பைப் புதுப்பித்துக் கொள்பவர்கள் இருக்கின்றனர்.
‘‘ஜீரோ பேட்டரியுள்ள மொபைலை ரீசார்ஜ் செய்வதைப் போல ஆண்கள், தங்களின் ஆண் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும்போது தங்களை ரீசார்ஜ் செய்துகொள்கின்றனர்...’’ என்கிறது அந்த ஆய்வு.
காதலுக்குப் பிறகு ஆண்களும், பெண்களும் தங்களின் சமூக வாழ்விலிருந்து விலகிவிடுகின்றனர். அத்துடன் அவர்களின் சமூகத் தொடர்பும் காதலுக்குள் சுருங்கி விடுகிறது. நண்பர்களைச் சந்திப்பது மீண்டும் அவர்களது உலகை விரிவாக்கி, சமூகத்துடன் தொடர்புகொள்ள வழிவகை செய்கிறது.
த.சக்திவேல்
|