குங்குமம் பத்திரிகைல ஓவியம் வரைந்து தான் ஒளிப்பதிவை கத்துகிட்டேன்!
‘‘ஓவியர்கள் மாருதி, மணியம் செல்வன் போன்ற ஜாம்பவான்கள் தீட்டிய ஓவியங்கள்தான் கலைத்துறைக்கு நான் வருவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துச்சு...’’ என்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.
 தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளாக பேசப்படும் ‘டாணாக்காரன்’, ‘அயோத்தி’, ‘சிறை’ போன்ற படங்களுக்கு இவர்தான் கேமராமேன்.வாழ்வியல் சார்ந்த கதைகளாக இருந்தாலும் சரி, ஃபேண்டஸி படமாக இருந்தாலும் சரி ரசிகர்களை திரையோடு கட்டிப்போடுவதில் கெட்டிக்காரர் என்று இவருக்கு கோலிவுட்டினர் நற்சான்றிதழ் தருகிறார்கள்.தற்போது கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கும் ‘29’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 கேமராமேனுக்கு ஓவியம் மீது ஆர்வம் எப்படி வந்துச்சு?
எனக்கு சொந்த ஊர் சேலம், வாழப்பாடி அருகே உள்ள மங்களாபுரம். படிக்கும்போது ஓவியர்கள் மாருதி சார், மணியம் செல்வன் சார் ஆகியோரின் ஓவியங்கள் எனக்குள் கலை மீதான ஆர்வத்தைக் கொடுத்துச்சு. அது நாளடைவில் ஓவியவராக வரவேண்டும் என்ற லட்சியமாக மாறியது.அப்போது, எங்கள் ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற அண்ணன் சென்னை கவின் கல்லூரியில் படித்ததோடு மட்டுமல்லாமல், விளம்பரக் கம்பெனியில் வேலை செய்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஒரு நாள் அவரைச் சந்திக்க சென்னை புறப்பட்டேன். அந்தச் சந்திப்பின் முடிவில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்.
கல்லூரிக்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிகையில் மாணவ பத்திரிகையாளராக சேர்ந்தேன். ‘குங்குமம்’ இதழிலும் நான் வரைந்த ஓவியங்கள் பிரசுரமாகியுள்ளது.போட்டோ ஜெர்னலிஸ்டாக இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு வந்துச்சு. ஒளிப்பதிவாளர் சித்தார்த் சாரிடம் ‘அரவான்’, ‘ஜே.கே. எனும் நண்பன்’ உட்பட பல படங்களில் வேலை செய்தேன்.
படம் பண்ண முயற்சிக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, தமன் ஆகியோரின் மியூசிக் வீடியோ, பாபி சிம்ஹாவின் ‘வெள்ள ராஜா’ வெப் சீரிஸ் பண்ணினேன்.என்னுடைய முதல் சினிமா ‘டாணாக்காரன்’. தொடர்ந்து ‘அன்பறிவ்’, ‘அயோத்தி’, ‘பி.டி சார்’, ‘போட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ செய்தேன். சமீபத்தில் ‘சிறை’ ரிலீஸாச்சு. ‘சிறை’ இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியும் நானும் ஓவியக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வெளியே இருந்து பார்க்கும்போது ‘டாணாக்காரன்’ படமும் ‘சிறை’யும் போலீஸ் கதைபோல் தெரியும். ஆனால், ‘டாணாக்காரன்’ முழுக்க முழுக்க பகலில் நடக்கும் கதை. ‘சிறை’ இரவுக் காட்சிகள் உள்ள கதை. அந்த வகையில் இரவுக் காட்சிகள், பீரியட் ஃபிலிம் போன்ற அம்சங்கள் ‘சிறை’ படம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்ததோடு, சவாலாக இருக்கும் என்று நம்பினேன்.
அதே மாதிரி எல்லோரும் பாராட்டுகிறார்கள். பஸ் ஓவர் டேக் செய்யும் காட்சியை சிலாகித்துப் பேசுகிறார்கள். கதை நடக்கும் காலகட்டத்தில் எல்இடி லைட், நான்கு வழிப்பாதை நெடுஞ்சாலைகள் கிடையாது.
அப்போது நிலவு வெளிச்சத்தையும், பேருந்து முகப்பு வெளிச்சத்தையும் வைத்துதான் வாகனங்கள் இயக்க முடியும். முக்கிய சந்திப்பு களில் சோடியம் விளக்குகள் எரியும். அதை ரீகிரியேட் பண்ணினால் வெற்றி கிடைக்கும் என்று அதற்கு ஏற்ப லைட்டிங் பண்ணினேன். ஒளிப்பதிவாளராக வேறு என்ன பொறுப்பு இருந்துச்சு?
கதையை எந்தக் கட்டத்திலும் செயற்கையாகவோ, சினிமாத்தனமாகவோ சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படி செய்திருந்தால் அப்துல், கலையரசி வாழ்க்கையோடு ஒன்றிணைந்து படம் பார்க்க முடியாது.
பேருந்தில் அப்துல்லை அழைத்துச் செல்லும்போது ஒரு பயணியாக நாம் இருந்து கவனித்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் படமாக்கினோம். அதற்காக பெரும்பாலான காட்சிகளுக்கு ஹேண்டில் ஷாட், மூவ்மெண்ட் ஷாட்டுக்கு ஜிம்மி யூஸ் பண்ணினோம். விக்ரம் பிரபு சார் அறிமுகக் காட்சிக்கு மாஸ் ஷாட் தேவைப்பட்டுச்சு. அதனால் துப்பாக்கி சுடும் காட்சியில் ப்ரோ லைட் யூஸ் பண்ணினோம். அது இசையோடு சேர்ந்ததும் அந்த எலிமெண்ட் பிரமாதமாக வந்துச்சு.
‘அயோத்தி’, ‘சிறை’ போன்ற வாழ்வியல் சார்ந்த படங்கள் செய்யும்போது, நவீன ஒளிப்பதிவு கருவிகள் எப்படி சாத்தியப்படுகிறது?
தற்போது எல்லா படங்களும் அலெக்சா, ரெட் எபிக் போன்ற நவீன கேமராக்களில் படமாக்கப்படுகிறது.கேமரா மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது. மேக்கப், காஸ்ட்யூம்ஸ் என எல்லோருடைய பங்களிப்பும் கிடைக்கும்போதுதான் அந்த படைப்புக்கு நியாயம் சேர்க்க முடியும்.
பீரியட் என்று வரும்போது சில விஷயங்களை டிஐ பிராசஸ் செய்து மேட்ச் செய்யலாம். ‘சிறை’ படத்துக்கு சிக்நேச்சர் பிரைம் லென்ஸ் பயன்படுத்தினோம். துப்பாக்கி சுடும் காட்சிக்கு ப்ரோப் லென்ஸ் யூஸ் பண்ணினோம். கேமராமேன் கதையைத்தான் ஃபாலோ பண்ணவேண்டும். ஏனெனில் எல்லா கதாபாத்திரத்தையும் மனதில் கொண்டுதான் படம் பிடிக்க வேண்டும். ஹீரோ, ஹீரோயின் என்று குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து படமாக்க முடியாது. ‘சிறை’யில் விக்ரம் பிரபு சார் தவிர்த்து புதுமுகங்கள் அக்ஷய், அனிஷ்மா என அனைவரும் ஒர்க் ஷாப் செய்து வந்ததால் எல்லோருடைய பங்களிப்பும் படத்துக்கு பலமாக இருந்துச்சு.
உங்களுடைய க ஒளிப்பதிவு ஸ்டைல் எப்படி இருக்கும்?
கதை வழக்கமாக இருந்தாலும் கதைக்களம் புதுசாக இருக்கும்போது ஒளிப்பதிவாளருடைய வேலை பாதி முடிஞ்ச மாதிரினு சொல்லலாம். அப்போது ரசிகர்களை புது உலகத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். கதையில் வாழ்வியல் சொல்லப்பட்டிருக்கும்போது அது ஒளிப்பதிவாளருக்கு கனெக்ட்டாகிவிட்டால் ரசிகர்களுக்கும் கனெக்ட்டாகிவிடும் என்று நம்புகிறேன். இந்த கனெக்ஷன் சரியாக அமைந்துவிட்டால் வெற்றிதான்.
எந்த மாதிரி கதைகள் ஒளிப்பதிவாளருக்கு பேர் வாங்கிக் கொடுக்கும்?
கதைக்கு 100% நியாயம் செய்யும்போது அது பேர் வாங்கித் தரும். அது மட்டுமல்ல, இதை இரண்டு விதமாக சொல்லலாம். கதைக்காக படம் செய்வது ஒன்று, இன்னொன்று அழகியலுக்காக படம் செய்வது.
இதுவரை கதைக்கான படங்கள்தான் செய்திருக்கிறேன். அழகியல் கதைகள் அமையும்போது அதற்கேற்ப பண்ணுவேன். சில கதைகளுக்கு அழகியல் தேவைப்படும். அப்போது அதைத் தவிர்க்க முடியாது.‘டாணாக்காரன்’, ‘சிறை’ போன்ற கதைகளுக்கு அழகியல் சேர்க்க முடியாது. அப்படி கதையை கெடுக்காமல் சரியாக செய்தாலே பேர் கொடுக்கும். ‘29’ படம் பற்றி சொல்லுங்கள்?
‘மேயாத மான்’ ரத்தினகுமார் இயக்குகிறார். இதுவரை யதார்த்தமான கதைகள்தான் செய்திருக்கிறேன். இது முழுக்க சிட்டி பையன் பற்றிய கதை. கலர் ஃபுல்லாக இருக்கும். கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் தயாரிப்பாளராக இருப்பதால் அது படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
‘அயோத்தி’யில் சசிகுமார் உடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
சசிகுமார் சாருடன் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அடிப்படையில் இயக்குநர். தவறு செய்தால் மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார். அந்த வகையில் படப்பிடிப்புக்கு முழு ஆயத்தத்துடன் செல்ல வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலே வேலை தெரியவில்லை என்று காட்டிக்கொடுத்துவிடும்.மற்றபடி ஸ்பாட்டில் ஒரு இயக்குநராக நடந்து கொள்ளமாட்டார். நடிகராகத்தான் வந்து செல்வார்.
நீங்கள் கற்றுக் கொண்ட ஓவியம் சினிமாவுக்கு உதவுகிறதா?
ஓவியராக இருப்பதால் எந்த கலர் பயன்படுத்து வேண்டும், பயன்படுத்தக்கூடாது என்ற பேலன்ஸ் எளிதாக செய்ய முடிகிறது. மெயின் ஆர்டிஸ்ட்டுக்கு கலர் பேலட்டில் காஸ்ட்யூம் இருக்கும். அப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேறு கலரில் காஸ்டியூம் அணிந்திருந்தால் பார்த்த நொடியிலே கண்டுபிடித்து காட்சிக்கு ஏற்ப அவருக்கும் காஸ்ட்யூம் மாற்றிவிட முடியும்.
ஏஐ?
பல வேலைகளை எளிதாக்கி விடுகிறது. ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்காக அப்பார்ட்மெண்ட் ஷாட் எடுத்தோம். அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் லைட் பண்ண பெரிய செலவாகும். நாங்கள் ஒரு வீடு மட்டும்தான் வாடகைக்குபிடித்தோம்.முழு அப்பார்ட்மெண்டுக்கு லைட்டிங் செய்ய பெரிய செலவு பிடிக்கும். அதனால் ஏஐ டிரை பண்ணினோம்.அது நன்றாக இருந்துச்சு. தற்போது ஒரு படத்துக்கு ப்ரீப்ரொடக்ஷன் ஃப்ளாஷ் பண்ண ஏஐ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.
எஸ்.ராஜா
|