சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது!



இன்றும் கூட அமெரிக்கா என்பது பலரது கனவு. எப்படியாவது அமெரிக்காவில் குடியேறி, அங்கே வேலை செய்து, நிறைய பணம் சம்பாதித்து, அமெரிக்க குடிமகனாகிவிட வேண்டும் என்பதை பலர் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். 
ஆனால், அமெரிக்காவில் முறைப்படி குடியேறுவதும், அங்கே நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதும், அமெரிக்க குடிமகனாவதும் சாதாரண விஷயமில்லை. அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க குடியுரிமையை இன்னமும் கடினமாக்கி விட்டார். அதனால்தான் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இப்படி  சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 1.5 கோடி. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே 7 லட்சம் இருக்கும். 
தங்களது கனவை நோக்கி அமெரிக்காவுக்குச் சென்று, சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களின் நிலை எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். 

சரியாக காலை 5.00 மணிக்கு எழுந்த அர்ஜுன், 5.30 மணிக்குள் தயாரானார். அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் எனும் நகரில் உள்ள ஒரு கேஸ் ஸ்டேஷனில் அர்ஜுனுக்கு வேலை. 

வேலை செய்யும் இடத்துக்கும், அர்ஜுன் தங்கியிருக்கும் இடத்துக்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இடைவெளி. அதனால் நடந்தே வேலைக்குச் சென்றுவிடுவார். 

கிளீவ்லேண்ட் விழிப்பதற்கு முன்பே வேலை செய்யும் இடத்துக்குச் சென்று, தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிடுவார். காலை உணவும், மதிய உணவும் கேஸ் ஸ்டேஷனிலேயே கிடைக்கும். இரவு தாமதமாகத்தான் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவார். 

அப்போது சாலையோர கடைகளில் இரவு உணவை வாங்கிக் கொள்வார். வீட்டுக்கு வந்த பிறகு இரவுணவைச் சாப்பிடுவது அவரது வழக்கம். பிறகு உறங்கி விடுவார். மீண்டும் காலையில் 5 மணிக்கு எழுந்து, வழக்கம்போல வேலைக்குச் செல்வார். வேலை, இரவு உணவை வாங்கும் கடை, தங்கியிருக்கும் இடம் ஆகிய மூன்று இடங்களைத் தவிர்த்து அவர் எங்கேயும் செல்வதில்லை. 

அவரது அன்றாட வாழ்க்கை இந்த மூன்று இடங்களுக்குள் சுழல்கிறது. உண்மையில் அவரால் வெளியில் எங்கேயும் செல்ல முடியாது. ஆம்; சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்தான், அர்ஜுன். அவரால் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது. அவருக்கு டிரைவிங் லைசென்ஸோ அல்லது முறையான வேலைகளோ, பயிற்சிகளோ கிடைக்காது. 

எப்போதுமே காவல்துறையிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் அவரது மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கும். எப்போது அவர் மாட்டினாலும் திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார். 

காலையில் எழுவது, வேலைக்குச் செல்வது, இரவு தங்குமிடத்துக்குத் திரும்புவது, ஒரே இடத்தில் உணவு வாங்குவது, இரவில் உறங்குவது, மீண்டும் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்று தினமும் வழக்கமான ஒரு வாழ்க்கையை வாழ்வதால் அர்ஜுனுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. அத்துடன் அருகில் இருப்பவர்களிடம் ஒரு நம்பிக்கையையும் பெற்றுவிட்டார். அதனால் அவர் குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. 

தனது உறவினரின் வீட்டின் அடித்தளத்தில்தான் அர்ஜுன் வசிக்கிறார். உறவினர் மூலமாகத்தான் அவருக்கு கேஸ் ஸ்டேஷனில் வேலை கிடைத்தது. அதனால் தங்குமிடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் அவருக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. கேஸ் ஸ்டேஷனில் வேலையில் சேர்வதற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வந்த ஓர் இந்தியர் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்து வந்தார் அர்ஜுன். அங்கே சில பாதுகாப்பு பிரச்னைகள் இருந்ததால் கேஸ் ஸ்டேஷனுக்கு மாறிவிட்டார்.

மட்டுமல்ல, லைசென்ஸ் இல்லை என்பதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. அர்ஜுனின் பொருள் திருட்டுப் போனாலோ அல்லது யாராவது அவரிடம் பிரச்னை செய்தாலோ அவரால் காவல்துறையிடம் சென்று புகார் தெரிவிக்க முடியாது. 

ஓரிடத்திலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அதனால் அடிக்கடி தனது வேலையையும், தங்குமிடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார். சிம் கார்டு கூட வாங்க முடியாது. அதனால் உறவினரின் சிம் கார்டைத்தான் பயன்படுத்துகிறார்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் வங்கி விதிமுறைகளைக் கடுமையாக்கிவிட்டனர். அதனால் அர்ஜுனால் வங்கிக் கணக்கையும் திறக்க முடியாது.  சம்பளத்தை ரொக்கமாக வாங்கி, தனது உறவினரின் வங்கிக் கணக்கில் போட்டு, ஊருக்கு அனுப்புகிறார். இப்படி எல்லா தேவைகளுக்கும் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய அவல நிலை. இருந்தாலும் இந்தியாவை விட பல மடங்கு சம்பளம் என்பதால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்கிறார் அர்ஜுன். 

இவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான இந்தியர்கள் இப்படித்தான் அமெரிக்காவில் தங்களின் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இந்தியாவில் சரியான வேலை கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் மிக குறைவான சம்பளம். அதனால்தான் சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறி, பல பிரச்னைகளுக்கு நடுவில் அர்ஜுன் போன்றவர்கள் வேலை 
செய்கின்றனர். 

இவர்களில் பெரும்பாலானோர் தங்களது சம்பளத்தில் பெரும் பகுதியை இந்தியாவில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கு அனுப்புகின்றனர்; குடும்பம், நண்பர்களைப் பிரிந்து தனியாக வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்துடனே நாட்களைக் கழிக்கின்றனர். 

அர்ஜுனைப் போன்றவர்கள் இரண்டு வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அங்கே குடியேறி வேலை செய்கின்றனர். பெரும்பாலானோர் சுற்றுலாவுக்காகத் தற்காலிக விசாவுடன் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அங்கேயே குடியேறி விடுகின்றனர். அடுத்து ஆபத்தான ‘டங்கி’ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இந்த டங்கி வழியைப் பற்றி இந்தியில் ஒரு படம் கூட வெளிவந்திருக்கிறது. 

இதுபோக ஏஜென்ஸிகளிடம் லட்சக்கணக்கில் பணம் தந்து அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்களும் இருக்கின்றனர். தங்களின் நிலத்தை விற்று, பலரிடம்கடன் வாங்கி ஏஜென்ஸிகளுக்குப் பணம் தருகின்றனர். அமெரிக்காவில் சம்பாதித்து ஒரே வருடத்தில் கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கடன் வாங்குவதாகச் சொல்கின்றனர். 

கடந்த 2023ம் வருடத்தின் கணக்குப்படி மட்டுமே சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 5.53 லட்சம். இன்று 7 லட்சத்தைத் தாண்டிவிட்டது. 
சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறி, பத்து வருடங்களுக்கு மேல் அங்கே வேலை செய்து, கை நிறைய பணம் சம்பாதித்து அமெரிக்க குடிமகனாக அங்கீகாரம் பெற்ற இந்தியர்களும் இருக்கின்றனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை  மிகக்குறைவு.

த.சக்திவேல்