கவிஞராக இருக்கவே பிடிச்சிருக்கு...



சொல்கிறார் தமிழ், மலையாளம், இந்தி, கொரியன், வியட்நாம், மலேசிய படங்களின் இசையமைப்பாளரான சாம் சி.எஸ்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என எல்லா வுட்களிலும் செமயாக ஸ்கோர் பண்ணி வருபவர் இளம் இசையமைப்பாளரான சாம் சி.எஸ். இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக இருக்கும் சாம், வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல; பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மையும் வாய்ந்தவர்.

பொதுவாக இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களில் பாடுவதோடு சரி. பாடல் வரிகள் பக்கம் போவதில்லை. ஆனால், சாமோ பாடல்களும் எழுதி கவிஞராகவும் பரிணமிக்கிறார். அப்படியொரு வேளையில், லிரிக்ஸில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம். 

‘‘பள்ளி, கல்லூரி காலங்களிலேயே எனக்கு கவிதை மேல் ஈர்ப்பு. நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். பாடலாசிரியராக வரணும்னுதான் ஆசைப்பட்டேன். இசையமைப்பாளராகணும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்ல. ஆனா, ஓரிடத்தில் பாட்டெழுத போனப்ப நான் இசையமைப்பாளராக மாறவேண்டியதாகிடுச்சு. 

அங்கிருந்து என் இசைப் பயணம் தொடருது...’’ என உற்சாகமாகச் சிரிக்கிறார் சாம் சி.எஸ். ‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே இசையில் ஆர்வம். ஆனா, பள்ளி, கல்லூரியில் கல்சுரல்ஸ்ல கலந்துக்கிட்டு பாடுறது, சர்ச்ல கீபோர்டு வாசிக்கிறது, கொயர்ல பாடுறதுனு இருந்தேன். என்னுடைய தாத்தா மூணார்ல ஒரு ஆர்மோனியப் பெட்டி வைச்சிருந்தார்.

ஒருமுறை இளையராஜா சார் மூணாருக்கு வந்தப்ப அதைத் தொட்டு வாசிச்சார்னு தாத்தா சொன்னார். அதனால், அந்த ஆர்மோனியப் பெட்டி மேல் எனக்கு பயங்கர ஈர்ப்பு. அதை வாசிக்கத் தெரியாது. 

ஆனா, தொட்டுப் பார்க்கணும், வாசிக்கணும்னு ஆர்வமும் ஆசையும் இருந்துச்சு.  இதன்பிறகு திருச்சியில் படிப்பை முடிச்சிட்டு ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வந்திட்டேன். அப்போ, அந்த ஐடி கம்பெனி ஓனர் ஒரு ஆல்பம் சாங்ஸ் பண்ணணும்னு என்னிடம் சொன்னார். எனக்கு லிரிக்ஸ் எழுதற பழக்கம் இருந்ததால் பாட்டு எழுதச் சொன்னார். 

நானும் லிரிக்ஸ் எழுதப் போனேன். அங்கே ஒரு மியூசிக் டைரக்டர் டியூன் போட தாமதமாச்சு. அதனால், நானே என்னுடைய லிரிக்ஸை அங்க இருக்கிற புரொடியூசரிடம் கொடுத்து டியூன் போட்டு பாடிக் காட்டினேன்.அவர், ‘இது சூப்பராக இருக்கே. 

இதுதான் கம்போஸிங்கு’னு சொன்னார். கம்போஸிங் இப்படிதான் இருக்குமானு அப்போ தெரிஞ்சுக்கிட்டேன். அங்கிருந்து எனக்கு இசையமைக்கவும் தெரியும்னு என் திறமையை கண்டறிந்தேன். அப்புறம், ‘ஓர் இரவு’, ‘அம்புலி’, ‘கடலை’னு சின்னச் சின்ன படங்களாக பண்ண ஆரம்பிச்சு அப்படியே வந்தேன். ‘விக்ரம் வேதா’ படம் எனக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்தது.  

அந்நேரம் நிறைய நேஷனல் லெவல் ஆர்ட் படங்களாக வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இதற்கிடையில் நான் தனியாக, ‘புரியாத புதிர்’னு படம் பண்ணி முடிச்சேன். 
அப்போ, இயக்குநர் புஷ்கர் காயத்ரியிடம் அசோசியேட்டாக இருந்த இயக்குநர் ஹலிதா ஷமீம் மூலமா எனக்கு, ‘விக்ரம் வேதா’ படத்தின் வாய்ப்பு கிடைச்சது. அவங்கதான் சாம்னு ஒரு பையன் நல்லா பண்ணிட்டு இருக்காப்ல, பாருங்கனு சொல்லியிருக்காங்க.

அந்தக் கதையைக் கேட்டதும் இந்தப் படம்தான் நம்ம லைஃபை மொத்தமாக மாத்தும்னு நம்பிக்கை தந்தது. அந்த உழைப்பு வீண் போகல. நிறைய பாராட்டுகள் கிடைச்சு வெளியில் தெரிஞ்சேன். இப்பவும் இயக்குநர் புஷ்கர் காயத்ரியுடன் தொடர்ந்து நிறைய படங்களும், வெப் சீரிஸ்களும் பண்ணிட்டு இருக்கேன். அவங்ககூட வொர்க் பண்றதே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கானது...’’ என்கிறவரிடம், எப்படி மலையாளக் கரையோரம் என்றோம். 

‘‘மலையாளத்தில் முதல்படம் ‘ஒடியன்’. மோகன்லால் சார் நடிச்சது. இதில் பேக்கிரவுண்ட் ஸ்கோர் மட்டும் செய்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நிறைய விளம்பரங்கள் இயக்கியவர். நானும் விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கிறதால அந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதன்பிறகு நிறைய மலையாளப் படங்கள் பண்ணினேன். என்னதான் நான் தமிழ்க்காரனாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளாவின் மூணார்ல. அதனால் அங்க இருக்கிற மக்களின் பல்ஸ் ஓரளவு தெரியும்.

ஆனா, அதை எடுத்து பண்றது பெரிய சவாலாக இருந்தது. அந்த படம் பெரிய அளவுல போகலனாலும், படத்தின் பேக்கிரவுண்ட் ஸ்கோர் மிகப்பெரிய அளவுல பேசப்பட்டுச்சு.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு வாய்ப்பு வந்தது. அதனையும் நம்பிக்கையாக பண்ணிட்டு வர்றேன். அப்புறம், கொரியன், வியட்நாமிஸ் படங்களுக்கும் பண்ணிட்டு இருக்கேன். 

இசை என்பது அந்தந்த ஊருக்கு தகுந்த மாதிரி அந்தந்த இன்ஸ்ட்ரூமெண்ட்தான் மாறும். ஆனா, உணர்வு ஒண்ணாகதான் இருக்கும். அதனால் எல்லா மொழிகளிலும் எளிதாகப் 
பண்ணமுடியுது. ஒரு மொழியில் ஒரு ஹிட் வந்தவுடனே இன்னொரு மொழியில் கூப்பிடுறாங்க. முன்னாடியெல்லாம் குறிப்பிட்ட மொழி இசையமைப்பாளர்கள் அந்தக் குறிப்பிட்ட மொழி படங்களுக்கு மட்டுமே பண்ணுவாங்க.  

ஆனா, இப்போ ஒரு இசையமைப்பாளர் சிறப்பாக பண்ணினால் அவரை எல்லோருமே பயன்படுத்துறாங்க. இது ஒரு ஆரோக்கியமான விஷயம். அதேபோல் மக்களும் எல்லா இசைகளையும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாமே உலகமயமாகிடுச்சு. உதாரணத்திற்கு, நான் இப்போது ஒரு தெலுங்குப் படத்திற்காக வேலை செய்தேன். அந்தப் படத்தில் செண்டை மேளம் பயன்படுத்தினேன். செண்டைக்கும் ஆந்திராவிற்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த இசை அவங்களுக்குப் பிடிச்சிருந்தது...’’ என்கிறவர், தொடர்ந்தார். 

‘‘இதன்பிறகு என்னை இந்திய அளவுல திரும்பிப் பார்க்க வச்ச படம் ‘கைதி’. ஒரே இரவுல நடக்கிற கதைக்கு சிறப்பாக பண்ணிருந்தீங்கனு பல பாராட்டுகள் கிடைச்சது. இப்போ, ‘கைதி’யின் மலேசியன் வெர்ஷன்லயும் வொர்க் பண்ணினேன். அப்புறம், ‘பார்க்கிங்’ படம் என்னுடைய ஆத்ம திருப்திக்காக பண்ணினது. இதன் கதையை இயக்குநர் ராம்குமார் வந்து சொன்ன உடனே எனக்கு பண்ணியே ஆகணும்னு தோணுச்சு.

ஏன்னா, ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஈகோ, பார்க்கிங்கிற்காக போடுகிற சண்டை என்ற அந்த ஒன் லைன் பிடிச்சிருந்தது. அதுக்கு தேசிய விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருந்தது’’ என்கிற சாம் இப்போது நிறைய படங்கள் செய்து வருகிறார். ‘‘இப்போ, இந்தியில் மட்டுமே நான்கைந்து படங்கள் பண்ணிட்டு இருக்கேன். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பண்றேன். தமிழில், ‘சர்தார்-2’ பேக்கிரவுண்ட் ஸ்கோர் போயிட்டு இருக்கு.

அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் சார் நடிக்கிறார். அந்தப் படம் பண்ணிட்டு இருக்கேன்.இதுதவிர, ‘கராத்தே பாபு’னு ரவி மோகன் சார் நடிக்கிற படம் பண்ணிட்டு இருக்கேன். மிஷ்கின் சார் அண்ட் கீர்த்தி சுரேஷ் நடிக்கிற படம் ஒண்ணு, ஜி.வி. பிரகாஷ் நடிக்கிற ‘இம்மார்ட்டல்’ படம், அடுத்து ‘புல்லட்’னு ஒரு படம். இப்படி நிறைய படங்கள் பண்றேன். 

அப்புறம், மலையாளத்துல ‘பேபி கேர்ள்’, ‘மெர்ரி பாய்ஸ்’, ‘வரவு’னு  ஜோஜு ஜார்ஜ் நடிச்ச படம்னு அங்கேயும் நிறைய இருக்கு. ஆனா, என்னைப் பொறுத்தவரையில் இசையில் ஏதாவது புதுமையாக செய்யணும்னு ஆசைப்படுறேன்.அதனால்,இண்டிபெண்டன்ட் மியூசிக்ல நிறைய கவனம் செலுத்திட்டு இருக்கேன். அதாவது தனியிசை ஆல்பம் பண்ணணும்னு நினைக்கிறேன். இதைத் திரைப்படத்துல பண்ணமுடியாது. ஆனா, தனிப்பட்ட முறையில் செய்யலாம்.

ஏன்னா, அரைச்ச மாவையே அரைச்சு ஜெயிக்கிறதைவிட புதுசா பண்ணி தோல்வியடைந்தாலும் பரவாயில்லைனு தோணுது. அதனால் இந்த ஜர்னரை தேர்ந்தெடுத்திருக்கேன்...’’ என்கிறவரிடம் குடும்பம் பற்றி கேட்டோம்.  ‘‘அப்பா, அம்மா, நான், ரெண்டு அக்கா. அப்பா மூணார்ல இருக்கார். 

அம்மாவும், ஒரு அக்காவும் இறந்துட்டாங்க. இன்னொரு அக்கா மதுரையில் இருக்காங்க.
சென்னையில் நான், மனைவி, பையன் இருக்கிறோம். மனைவியும், மகனும்தான் இப்போ என்னுடைய உலகம். அப்புறம், இசை ரசிகர்கள் எல்லோருமே என்னுடைய குடும்பத்தினர்தான்...’’ என நெகிழ்வாய் சொல்கிறார் சாம்.சி.எஸ்.

ஆர்.சந்திரசேகர்