சிவாஜியின் நீதிமன்ற பேச்சு... கலைஞர் மேடையில் பேசிய பேச்சுதான்..!
தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் சரி, தமிழரின் சமூக வாழ்க்கையிலும் சரி, பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்திய திரைப்படம் சிவாஜியின் முதல் படமாக கலைஞரின் எழுத்தில் வெளியான ‘பராசக்தி’. 1952ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படையெடுக்க, ஒரு பிரிவினர் இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என கொடி பிடித்தனர்.
 அப்படிப்பட்ட தடை கோரிய வரலாற்றை பல ஆவணங்களின் உதவியோடு முதல் முறையாக ‘பராசக்தி தடை’ எனும் பெயரில் சுமார் 1000 பக்க அளவில் தொகுத்து புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார் கடற்கரய் மத்த விலாசம். ஏற்கனவே பாரதி, காந்தி தொடர்பான பல செய்திகளை ஆவணங்களின் துணையோடு வரலாற்றுப் பதிவாக்கிய கடற்கரயிடம் இந்த ‘பராசக்தி தடை’ புத்தகம் குறித்துப் பேசினோம். இந்த புத்தகத்துக்கான தூண்டுதல் எது எனும் முதல் கேள்வியுடன் தொடர்ந்தோம்.
 ‘‘2002ம் ஆண்டுகளில் கலைஞர் உயிரோடு இருந்தபோது பத்திரிகைகளில் பல தொடர்கதைகளை அவர் எழுதி வந்தார். ‘நெஞ்சுக்கு நீதி’, ‘முத்திரைக் கதைகள்’ என இதில் அடங்கும். அப்படி அவர் எழுதியதை சீராக்கும் உதவியாளர்கள் குழுவில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த ஆண்டு ‘பராசக்தி’ திரைப்படத்தின் பொன்விழா ஆண்டு வேறு. இதனைக் கொண்டாட அந்தப் படத்தை வெளியிட்ட ஏவி.எம் நிறுவனம் தன் ஸ்டூடியோவில் ‘பராசக்தி’யை நினைவுகூரும் விதத்தில் ஒரு நினைவுத் தூணை எழுப்பியது. அந்த விழாவில் நானும் கலந்துகொண்டேன்.
அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தைப் பற்றிய பல செய்திகள் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தது. இது என் காதுக்கும் எட்டியது.
இவ்வளவு செய்திகள் இந்தப் படத்தைப் பற்றி உலாவுகிறது என்றால் நிச்சயம் இந்தப் படத்தைப் பற்றி மேலும் பல செய்திகள் இருக்கும் எனும் நப்பாசையில் அந்தச் செய்திகள் தொடர்பான ஆவணங்களைத் தேட ஆரம்பித்தேன்.
ஆனால், ஒருகட்டத்தில் ஆவணங்கள் பெருகிக்கொண்டே போனதுதான் மிச்சம்...’’ என சொல்லும் கடற்கரய், அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை எனச் சொல்கிறார். ‘‘சென்னை அரசு ஆவணக் காப்பகம், சென்னை ரோஜா முத்தையா நூலகம் மட்டுமல்லாமல் தனியார் ஆவணக் காப்பாளர்கள், தனிநபர்கள் என என் ஆவணத் தேடலில் இறங்கினேன்.
‘பராசக்தி’ படத்துக்கான தடை பற்றி அன்றைய ராஜாஜி அரசு ஆவன செய்த விவாதத்தின் அரசு ஆவணம் மட்டும் சுமார் 250 பக்கங்களில் இருந்தது இந்த படத்துக்கான தடை பற்றிய விவாதத்தில் முக்கிய பங்காற்றியது. இதுவும் இந்தப் புத்தகத்தில் உண்டு...’’ என சொல்லும் கடற்கரய், ‘பராசக்தி’க்கு என்ன மாதிரியான தடைகள் வந்தன என்பது பற்றியும் விளக்கினார்.
‘‘படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான் தடைக்கான பேச்சு எழுந்திருக்கிறது. ஒருபக்கத்தில் அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்கள் என்றால் மறுபக்கம் ஆன்மீகவாதிகள் தடைக்கான கோரிக்கைகள், பிரச்சாரங்களை வைத்தனர்.
இது எல்லாமே மேல்மட்டத்தில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சாதாரண மக்கள், கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு படம் பார்க்க போயிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் தடை கோரிக்கை. மறுபக்கம் படத்துக்கு ஆதரவு என்றதால் படத்தை உடனடியாகப் பார்க்க மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியிருக்கிறார்கள்.
உதாரணமாக சென்னையில் ‘அசோகா’ எனும் தியேட்டரில் இருதரப்பினரும் முட்டி மோதியதால் அந்தத் தியேட்டரின் ஒரு சுவரே இடிந்து விழுந்திருக்கிறது. இதையும் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
ஆனால், வன்முறை எல்லாம் நடக்கவில்லை. தள்ளுமுள்ளு என்பார்களே... அதுமாதிரிதான்...’’ எனச் சொல்லும் கடற்கரய் பிறகு எப்படி படத்துக்கான தடை நீங்கியது என்பது பற்றியும் பேசினார்.‘‘தடைக்காக வழக்கு எல்லாம் போடவில்லை. ஒரு சினிமாவுக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் சென்சார் போர்டுக்கே உண்டு.
மாநில சென்சார் போர்டு எல்லாம் தடை விதிக்க முடியாது. ‘பராசக்தி’க்கு தடை வேண்டி பல மனுக்கள் சென்ட்ரல் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டன. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கும் படத்தை தடை செய்யக்கோரி மனுக்கள் வந்தன. மாநில சட்டமன்றமும் இந்த பிரச்னையை விவாதித்து தடைக்கு ஆதரவாக இருந்தது. ஆனால், திராவிட கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் எல்லாம் படத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். மனுக்களை விசாரித்த மத்திய சென்சார் போர்டு படத்தின் தயாரிப்பாளரை எல்லாம் கூப்பிட்டு விசாரித்தது. அவர்களும் பதில் சொன்னார்கள். இந்நேரத்தில் ஒரு படத்துக்கு தடை விதிப்பதற்கான முன்னுதாரணங்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்தது. இதனால் அனுமதி கொடுத்த ஒரு படத்துக்கு எப்படி தடைவிதிப்பது எனும் குழப்பத்தில் சென்சார் போர்டு இருந்தது.
கடைசியில் 5லிருந்து 6 கட் வரை படத்துக்கு கொடுத்து படத்துக்கான தடை கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்தது சென்சார் போர்டு. இந்த 5 அல்லது 6 கட்களையும் புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்...’’ எனச் சொல்லும் கடற்கரய் மேலும் சுவாரசியமான ‘பராசக்தி’ தொடர்பான செய்திகளை பகிர்ந்துகொண்டார்.
‘‘இந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட புதிய செய்திகள் உண்டு. உதாரணமாக, நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் வசனம், அந்தப் படம் வந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1951ல் கலைஞர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுதான். அந்தப் பேச்சு சென்னை ராபின்சன் பூங்காவில் பேசப்பட்ட ஒரு சொற்பொழிவு. அந்த பேச்சையும் புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன். சிவாஜியின் வசனத்தை ‘பராசக்தி’ படப்பிடிப்புத் தளத்தில் சுமார் 9 முறையாவது திருத்தித் திருத்தி கலைஞர் எழுதியிருக்கிறார். அதுமாதிரி பாவலர் பாலசுந்தரம் ஒரிஜினலாக எழுதிய ‘பராசக்தி’ நாடகத்தில், படத்தில் வரும் விமலா பாத்திரம் இல்லை. விமலா பாத்திரம் சிவாஜியின் காதலியாக வருபவர். ஒரு புரட்சிப் பெண்ணாக கலைஞர்தான் அந்தப் பாத்திரத்தை புதிதாக உருவாக்கினார்.
படத்தில் சிவாஜி இரண்டு விதமாகத் தோன்றுவார். ஒன்று குண்டாக, மற்றது ஒல்லியாக. உண்மையில் ஷூட் செய்யப்பட்ட சுமார் 2000லிருந்து 3000 அடியை எடுத்துவிட்டு சிவாஜிக்கு நல்ல உணவுகொடுத்து கொஞ்சம் கொழுகொழு நடிகராக மாற்றித்தான் டூயட் போன்ற சீன்களை மறுபடியும் எடுத்தார்கள்.இதனால்தான் படத்தில் சிவாஜி சில இடங்களில் ஒல்லியாகவும், சில இடங்களில் பூசினமாதிரியும் இருப்பார்.
இலங்கை, பர்மாவில் எல்லாம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது. இலங்கையில் திமுக கட்சியை ‘பராசக்தி கட்சி’ என்று எல்லாம் சிங்கள மொழியில் அழைத்தார்கள். இத்தோடு இந்தப் படத்துக்காக பல சோதனை முயற்சிகளும் நடந்திருக்கிறது. இதையெல்லாம் புத்தகத்தில் ஆதாரத்தோடு பதிவு செய்திருக்கிறேன்...’’ என்கிறார் கடற்கரய்.
டி.ரஞ்சித்
|