இந்திய வைரங்களே உலகப் பொக்கிஷம்!



சமீபத்தில் உலகில் மிகவும் புகழ்பெற்ற ஃபுளோரன்டைன் வைரம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது. கனடா வங்கி ஒன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
இந்த ஃபுளோரன்டைன் வைரம் இந்தியாவில் வெட்டியெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 
இதேபோல் உலகப் பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரமும் இந்தியாவில் வெட்டியெடுக்கப்பட்ட ஒன்றுதான். இன்று அது பிரிட்டனில் உள்ளது.

இப்படி இந்தியாவிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வைரங்கள் பலரின் கைகளுக்குச் சென்று, இன்று வேறொரு நாட்டின் பொக்கிஷமாக உள்ளன. அப்படியான சில வைரங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவின் வைரங்களுடனான உறவு என்பது பாரம்பரியமானது. 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உலகிலுள்ள வைரங்களுக்கான ஆரம்பகால ஆதாரமாக இந்தியா அறியப்படுகிறது. 
குறிப்பாக கோல்கொண்டா பகுதியின் ஆற்றுப்படுகைகளில் முதல் வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன சில தகவல்கள். இந்த வைரங்கள் ஆரம்பத்தில் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பெண்ணாறு நதிப் படுகைகளில் காணப்பட்டன. 

குறிப்பாக கிருஷ்ணா, கோதாவரி டெல்டா பகுதிகளில் நிரம்பக் கிடைத்தன. இவை கோஹினூர், நிஜாம், ஹோப் வைரம், ரீஜென்ட் வைரம், கிரேட் முகல் வைரம் மற்றும் ஆர்லோவ் வைரம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ரத்தினக் கற்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்தன. இன்றும் இந்தியாவின் வைர தொழில்நுட்பம் தலைசிறந்தே காணப்படுகிறது.

கோஹினூர் வைரம்

வரலாற்றில் மிகவும் பிரபலமான வைரங்களில் ஒன்று கோஹினூர். இது கோல்கொண்டா வைரச் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட ஒன்று. ‘கோஹினூர்’ என்றால் பாரசீக மொழியில், ‘ஒளியின் மலை’ என அர்த்தம். ஏனெனில், அதன் அளவையும் ஒளிரும் தன்மையையும் கொண்டு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. 

இது 14ம் நூற்றாண்டில் ஆந்திர அரச வம்சத்தவர்களான காகதீயர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக அலாவுதீன் கில்ஜியின் நாட்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.
பின்னர் முகலாயப் பேரரசர்கள், பஞ்சாப்பை ஆண்ட ரஞ்சித் சிங் ஆகியோரிடம் சென்று, நிறைவில் காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயர்கள் வசமானது. பிறகு பிரிட்டிஷ் ராணிகளின் கீரிடத்தை அலங்கரிக்கும் அணிகலனானது.   

இந்த வைரத்தின் எடை ஆரம்பத்தில் 186 காரட் இருந்ததாகவும், பலமுறை மெருகூட்டுதல் மற்றும் வெட்டுதல் காரணமாக தற்போதைய எடையான 105.6 காரட்டாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் 1947ம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டபோது இந்திய அரசு கோஹினூர் வைரத்தைத் திருப்பித் தருமாறு கோரியது. பின்னர் இரண்டாவது முறையாக 1953ம் ஆண்டும் கோரிக்கை வைத்தது. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

பின்னர், 2000ம் ஆண்டு அது சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறி, நாடாளுமன்ற எம்பிக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில் 2016ம் ஆண்டு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, இந்த வைரம் திருடப்படவில்லை என்றும், சீக்கியப் போர்களில் உதவியதற்கு இழப்பீடாக மகாராஜா ரஞ்சித் சிங் ஆங்கிலேயர்களுக்கு, தானாக முன்வந்து வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.தற்போது இந்த வைரம் லண்டன் டவர், ஜுவல்ஸ் ஹவுஸில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

தர்யா-இ-நூர்

கோஹினூரின் சகோதரி எனச் செல்லமாகச் சொல்லப்படும் இந்த வெளிர் இளஞ்சிவப்பு வைரமும் இந்தியாவைச் சேர்ந்ததுதான். கடந்த 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் கோல்கொண்டா பகுதியில் வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.இது முகலாயப் பேரரசில் தொடங்கி பல அரச வம்சங்கள் வழியாகச் சென்றது. 

பிறகு, 1739ல் பாரசீக மன்னர் நாதிர் ஷா, இந்தியாவை ஆக்கிரமித்து தில்லியைக் கைப்பற்றினார். அவர் தர்யா-இ-நூரை மற்ற பொக்கிஷங்களுடன் கைப்பற்றி, பாரசீகத்திற்கு எடுத்துச் சென்றார்.இன்று இந்த வைரம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மத்திய வங்கியின் தேசிய நகை சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 182 காரட். 

ரீஜென்ட் வைரம்

இது இந்தியாவின் கிருஷ்ணா நதிக்கு அருகிலுள்ள கொல்லூர் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வைரம். சுமார் 140 காரட் எடையுள்ள இதை பல்வேறு ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்களுக்கு விற்க முயற்சிகள் நடந்துள்ளன. நிறைவில் 1717ம் ஆண்டு ஃபிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப் டியூக் ஆஃப் ஆர்லின்ஸின் கிரீடத்தை அலங்கரிப்பதற்காக வாங்கப்பட்டது.

பின்னர் மன்னர் நெப்போலியன் போனபார்ட் தன் வாளில் வைத்து பயன்படுத்தினார். தற்போது இந்த வைரம் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டில் இதன் மதிப்பு 6 கோடி டாலர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 530 கோடி ரூபாய்.  
 
ஆர்லோவ் வைரம்

இந்த வைரம் 17ம் நூற்றாண்டில் கோல்கொண்டா சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு வணிகர்களின் கைமாறி நிறைவில் ஆம்ஸ்டர்டாமில் விற்பனைக்கு வந்தது.
பிறகு இதனை ரஷ்ய இளவரசர் கிரிகோரி ஆர்லோவ், பேரரசி கேத்ரீனுடன் மீண்டும் தன்னுடைய உறவை புதுப்பிக்க வாங்கினார். அவருக்குப் பரிசாக இந்த வைரக்கல்லை வழங்கினார். 

ஆனால், கேத்ரீனோ ஆர்லோவைக் கைவிட்டுவிட்டார். அப்போது கேத்ரீன் ஆர்லோவின் பரிசாக அந்த வைரக்கல்லிற்கு ஆர்லோவ் பெயரையே சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.
சுமார் 189 காரட் எடையுள்ள ஆர்லோவ் வைரம் தற்போது மாஸ்கோவின் கிரெம்ளின் ஆயுதக் களஞ்சியத்தில் வைர நிதி சேகரிப்பின் ஒரு பகுதியாக விளங்குகிறது.  

ஃபுளோரன்டைன் வைரம் 

சுமார் 137 காரட் எடையுள்ள வெளிர் மஞ்சள் நிறமுள்ள இந்த வைரம் இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 
இது 15ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய அரச குடும்பங்களிடம் இருந்து வந்துள்ளது. பின்னர் இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரத்தை ஆண்ட மெடிசி குடும்பத்தின் கைகளுக்குச் சென்றது. இதனால்தான் இது ஃபுளோரன்டைன் வைரம் என அழைக்கப்பட்டது.

பிறகு, ஆஸ்திரியாவின் ஹாப்ஸ்பர்க் வம்சத்தின் வசம் இந்த வைரம் சென்றது. ஹாப்ஸ்பர்க் கிரீட நகைகளுடன் பராமரிக்கப்பட்டது. இதனையடுத்து முதலாம் உலகப் போரின் போது ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசு வீழ்ச்சியடைய, ஆஸ்திரியா பேரரசர் முதலாம் சார்லஸ் கருவூலத்திலிருந்த வைரக்கல்லை அகற்ற உத்தரவிட்டார். அத்துடன் அது சுவிட்சர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்பிறகு இந்த வைரக்கல் காணாமல் போனதாகவும், திருடப்பட்டதாகவும், பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் நிறைய கதைகள் உலா வந்தன. ஆனால், அது சார்லஸின் மனைவி பேரரசி ஜீட்டாவின் வசமே இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பேரரசி ஜீட்டா தனது குடும்பத்தை கனடாவுக்கு மாற்றினார். அப்போதுதான் அவர் கனடா வங்கியின் பெட்டகத்தில் வைத்து பாதுகாத்தார்.

அவர் பாதுகாப்பாக வைத்துள்ள ரகசியத்தை கணவர் சார்லஸ் 1922ம் ஆண்டு இறந்தபோதே அவரின் மகன்களிடம் மட்டும் தெரிவித்துள்ளார்.இந்த ரகசியத்தை ஒரு நூற்றாண்டாக பாதுகாக்க வேண்டும் என சத்தியம் வாங்கியுள்ளார். பிறகு, அவரின் மகன்கள் தங்கள் மகன்களிடம் இதனைக் கூறியுள்ளனர். 

இதற்கிடையே பல்வேறு ஊகங்கள் கசிந்துகொண்டிருந்தன. இந்நிலையில் நூற்றாண்டு கடந்துபோனதால் தற்போது அவரின் வாரிசுகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த வைரம்  கனடாவில் உள்ள மற்ற அரிய ரத்தினங்களின் தொகுப்புடன் காட்சிக்கு வைப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது. 

த ஹோப் வைரம்

சுமார் 45 காரட் எடையுள்ள ஹோப் வைரம் 17ம் நூற்றாண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒன்று. இதனை ஃபிரெஞ்சு வியாபாரி ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர் கல்லாக வாங்கினார். பின்னர் அதனை அழகாக வெட்டி அதற்கு, ‘ஃபிரெஞ்ச் ப்ளூ’ எனப் பெயரிட்டு ஃபிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியிடம் விற்றார். பின்னர் இது 1792ம் ஆண்டு திருடப்பட்டது.

திருடிய நபர் இதனை வெட்டி மறுசீரமைப்பு செய்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வைரம் மீட்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்டர்மாமில் உள்ள ஹோப் குடும்ப வங்கிக்கு இந்த வைரம் வந்தது. அதிலிருந்து ஹோப் வைரம் என அழைக்கப்படுகிறது. பிறகு இந்த வைரத்தை 1949ம் ஆண்டு அமெரிக்க நகை வியாபாரி ஹாரி வின்ஸ்டன் வாங்கினார்.

தொடர்ந்து ஹோப் வைரத்தை பல நாடுகளில் காட்சிப்படுத்தியவர் நிறைவாக 1958ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய இயற்கை வரலாறு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். தற்போது ஹோப் வைரம் அந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த வைரம் யாரிடம் உள்ளதோ அல்லது யார் அணிந்திருக்கிறாரோ அவருக்குத் துரதிர்ஷ்டத்தையும், சோகத்தையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.   

ஆக்ரா மற்றும் ஆற்காடு வைரங்கள்

மிகவும் அரிதான இளம்சிவப்பு நிறம் கொண்ட ஆக்ரா வைரத்தின் கதை 1526ல் இருந்து தொடங்குகிறது. அப்போது ஆக்ராவைக் கைப்பற்றிய முகலாயப் பேரரசர் பாபர் இதனை தனது தலைப்பாகையில் அணிந்திருந்தார். கோல்கொண்டா வைரமான இதனை பிறகு தன் மகன் ஹுமாயூனுக்கு வழங்கினார் பாபர். தொடர்ந்து பல்வேறு கைகளுக்கு மாறிய இந்த வைரம், தற்போது பாரிஸில் உள்ள அல்தானி சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் இரண்டு ஆற்காடு வைரங்களும் கோல்கொண்டாவில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டவைதான். இவை ஆற்காடு நவாப் வாலாஜா வசம் இருந்தன. அவர் பிரிட்டன் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி சார்லட்டுக்கு பரிசாக வழங்கினார்.ராணி சார்லட்டின் மரணத்திற்குப் பிறகு இந்த இரண்டு வைரங்களும் தனித்தனியாக விற்கப்பட்டன. தற்போது இவை அல்தானி சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

பேராச்சி கண்ணன்